அடுத்த ஆண்டு முதல் உள்ளூர் அஞ்சல் கட்டணங்களை 10 காசு உயர்த்தப்போவதாக சிங்போஸ்ட் நிறுவனம் செவ்வாய்க்கிழமை (டிசம்பர் 9) அறிவித்துள்ளது.
அதன்படி, சாதாரண அஞ்சல்களுக்கு 62 காசும் பெரிய அஞ்சல்களுக்கு 90 காசும் முறையே கட்டணம் செலுத்த வேண்டும். அவற்றுடன், பெரிய அளவிலான வர்த்தக அஞ்சல்களின் கட்டணங்களும் அதிகரிக்கப்படும் என்று சிங்போஸ்ட் தெரிவித்துள்ளது.
கடைசியாக, சிங்போஸ்ட் தனது அஞ்சல் மற்றும் பொட்டலங்கள் (பார்சல்) அனுப்பும் சேவைகளுக்கு 2023ஆம் ஆண்டு கட்டணம் குறித்து மறுபரிசீலனை செய்தது.
“தொடர்ந்து குறைந்துவரும் அஞ்சல்களின் எண்ணிக்கை, நிறுவனத்தின் செயல்பாட்டுக்கான செலவு அதிகரிப்பு ஆகிய காரணங்களால் அஞ்சல் சேவைகளுக்கான கட்டணம் உயர்த்தப்படுகிறது. நீண்டகால நிலைத்தன்மையைக் கருத்தில்கொண்டு சிங்கப்பூரின் அஞ்சல் தேவைகளை நிறைவேற்ற இந்த நடவடிக்கை எடுக்கப்படுகிறது,” என்று சிங்போஸ்ட் குறிப்பிட்டது.
மக்களிடையே நிலவும் மின்னிலக்கத் தொடர்புக்கு மாறும் போக்கு அஞ்சல் பயன்பாட்டை வெகுவாக மாற்றியமைத்துள்ளது. அதனோடு மனிதவளம், உள்கட்டமைப்பு போன்றவற்றுக்கு செய்யப்படும் செலவுகள் அதிகமாவதால், அஞ்சல் சேவைகள் வழங்குநர்களுக்கு வரவையும் செலவையும் சமன்செய்யும் சவால் எழுந்துள்ளது என்று சிங்போஸ்ட் விளக்கியது.
நெடுநாள் செயல்படுவதற்கு இதே நிலைப்பாடு மற்ற நாடுகளில் உள்ள அஞ்சல் சேவை வழங்குநர்களாலும் எடுக்கப்படுவதாக சிங்போஸ்ட் கூறியது. வாடிக்கையாளர்களின் அனுபவத்தையும் சிங்போஸ்ட் நிறுவனச் செயல்பாட்டுத் திறனையும் மேம்படுத்த கட்டண உயர்வு உதவும் என்று அது தெரிவித்துள்ளது.
“தேசிய அஞ்சல் இலக்குகளைத் தொடர்ந்து அடையவும் அதிநவீன தொழில்நுட்பத்தை முன்னெடுத்து தளவாடங்கள் துறையில் சிங்போஸ்ட் முன்னிலை வகிக்கவும் இந்தக் கட்டண மறுபரிசீலனை அவசியமானது,” என்று அதன் தலைமை நிர்வாக அதிகாரி மார்க் சொங் கூறினார்.
சேவைத் திறன் மேம்பாட்டின் அங்கமாக அனைத்துலக ரீதியில் அமெரிக்கா விதித்த வர்த்தக வரிகளை எதிர்கொள்ளும் நடவடிக்கைகள் உள்ளூரில் மேற்கொள்ளப்பட்டுவரும் பல செயல்பாடுகள் பற்றியும் அவர் குறிப்பிட்டார்.
தொடர்புடைய செய்திகள்
சிங்கப்பூர் முழுவதும் உள்ள 2,500 விரல் தொட்டுணர்வு அஞ்சல் சேவைகளின் விரிவாக்கத்தையும் வட்டார மின்வர்த்தகத் தளவாட மையத்தில் தானியங்கி தொழில்நுட்பத்தில் செய்யப்பட்டுள்ள $30 மில்லியன் முதலீடு பற்றியும் அவர் விளக்கினார்.

