பிள்ளைப் பேற்றுக்குப் பிறகான மன அழுத்தம்; உதவி நாடும் தந்தையர்

2 mins read
eb3c93f0-e3a8-4bf9-93ab-9c8c960f5cca
பிள்ளைகள் பிறந்த பிறகு மனநல உதவி நாடும் தந்தையரின் எண்ணிக்கை கூடியுள்ளதாக மனநல ஆலோசகர்கள் கூறுகின்றனர். - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

பிள்ளைப் பேற்றுக்குப் பிறகான மன அழுத்தம், வழக்கமாக தாயாருடன் தொடர்புபடுத்தப்படுகிறது.

இருந்தபோதும் அந்தப் பிரச்சினை, தந்தையரையும் பாதிக்கலாம். சிங்கப்பூரில் தந்தைமாரில் கூடுதலானோர் தங்களுக்கு குழந்தை பிறந்த பிறகு மனநல உதவி நாடுவதாக மனநல ஆலோசகர்கள் கூறுகின்றனர்.

‘கிளேரிட்டி சிங்கப்பூர்’ என்ற மனநல அமைப்பு, 2024 முதல் தந்தையருக்கு நிபுணத்துவ மனநல ஆலோசனைக்கான சேவையை வழங்கி வருகிறது. தாயாரைப்போன்ற உடல்ரீதியான ஹார்மோன் மாற்றங்களைத் தந்தையரும் அனுபவிக்கக்கூடும் என்று அந்த அமைப்பைச் சேர்ந்த திருவாட்டி சிண்டி கோங் தெரிவித்துள்ளார்.

அத்துடன், மகப்பேற்றுக்குப் பிறகு தங்களின் மனைவிகள் மன அழுத்தத்திற்கு ஆளாகும்போது அதனால் கணவர்களும் பாதிப்படையக்கூடும் என்று திருவாட்டி கோங் கூறினார்.

இந்தக் கருத்துடன் ஒத்துப்போகும் ‘அலையன்ஸ் கவுன்சலிங்’ அமைப்பிலுள்ள மனநல ஆலோசகர் டாக்டர் சில்வா வெத்தரெல், மன அழுத்தத்தால் பாதிக்கப்படும் புதிய தாய்மாருக்கு உதவத் தெரியாமல் அவர்களது கணவர்கள் தவிப்பதாகவும் சொன்னார்.

“தந்தையர்கள், குழந்தைகளைத் தூக்கிக் குளிப்பாட்ட தாயாருக்கு உதவுகின்றனர். வேறு அன்றாட காரியங்களில் அவர்கள் உதவி செய்கின்றனர். ஆனால், சில நேரங்களில் இந்த உதவிகளும் போதமாட்டா,” என்றார் டாக்டர் சில்வா.

தந்தையருக்கான மனநல ஆலோசனை வளங்கள்

தந்தையருக்கான மனநலத்தின்மீது கவனம் செலுத்தும் ஆண் மனநல ஆலோசகர் ஒருவரை ‘அலையன்ஸ் கவுன்சலிங்’ பணியில் அமர்த்தியுள்ளது.

2021ல் மூன்று நிபுணர்களை மட்டும் பணியில் அமர்த்திய இந்த அமைப்பில் தற்போது 10 நிபுணர்கள் பணிபுரிகின்றனர்.

மகப்பேற்றுக்குப் பிறகான மன அழுத்தத்தை உணரும் தாயாருக்கு மனநல ஆலோசனை வழங்கும்போது, அதே நேரத்தில் தந்தையரையும் உதவி நாடும்படி தாங்கள் கேட்பதாக ‘த அதர் கிளினிக்’ அமைப்பைச் சேர்ந்த மனநல ஆலோசகர் ராதிகா ஹராலல்கா கூறினார்.

“தந்தையும் சிரமப்படுகிறார். அவர்களுக்குப் போதிய தூக்கம் கிடைக்காதது, மனநலத்தைக் கடுமையாகச் சோதிக்கும்,” என்று திருவாட்டி ராதிகா கூறினார்.

தாயாரின் மகப்பேறு விடுப்பு நாள்களைக் காட்டிலும் தந்தையருக்கான அத்தகைய நாள்கள் குறைவு. எனவே, அவர்கள் வீட்டிலுள்ள மாற்றத்தையும் முழுநேர வேலையையும் ஒரே நேரத்தில் சமாளிக்கத் திணறலாம் என்று திருவாட்டி ராதிகா கூறினார்.

குழந்தை பிறப்புக்குப் பிறகு மனைவி உடனான உறவு மாறியிருப்பதாக தந்தையர்களில் சிலர் உணரக்கூடும் என்றும் திருவாட்டி ராதிகா கூறினார்.

கோபமாக வெளிப்படும் மன அழுத்தம்

பிள்ளைப் பேற்றுக்குப் பிறகான மன அழுத்தம், எரிச்சலாகவோ கோபமாகவோ வெளிப்படலாம் என்று திருவாட்டி ராதிகா கூறுகிறார்.

இவ்வாறு மனவுளைச்சலுக்கு ஆளாகும் புதிய தந்தையரும் கணவன்மாரும் பிறருடன் பழகுவதைத் தவிர்த்து, அளவுக்கு அதிகமாக வேலை செய்வது போன்ற பழக்கங்களில் மூழ்கிப் போவதாக திருவாட்டி கோங் கூறினார்.

இத்தகைய தந்தையரின் சொந்த அனுபவத்தைப் பிறருக்குப் பகிரும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறது ‘கிளேரிட்டி சிங்கப்பூர்’ அமைப்பு.

குறிப்புச் சொற்கள்