புதிய ‘ரைடர்’ திட்டங்களால் கிடைக்கக்கூடிய சேமிப்புகள் குறையக்கூடும்

புதிய ‘ரைடர்’ திட்டங்களால் கிடைக்கக்கூடிய சேமிப்புகள் குறையக்கூடும்

2 mins read
29355519-4aa7-4ade-a5d9-ec137ec276b6
வாழ்நாள் சந்தா தொகை குறித்த ஆக அண்மைப் பகுப்பாய்வை, காப்புறுதி ஆலோசனை நிறுவனமான ‘ஹேவண்ட்’ நடத்தியது.  - மாதிரிப்படம்: பிக்சாபே

பழைய ஒருங்கிணைந்த ஷீல்டு திட்டத்தின் (ஐபி) ‘ரைடர்’களிலிருந்து புதிய ‘ரைடர்’களுக்கு மாற விரும்புவோருக்குக் கிடைக்கக்கூடிய சேமிப்புகள் முன்னதாக அறிவிக்கப்பட்ட சராசரி 30 விழுக்காட்டுக் குறைப்பைக் காட்டிலும் குறைவாக இருக்கக்கூடும்.

முன்னதாக அறிவிக்கப்பட்ட சேமிப்புகள் ‘ரைடர்’ சந்தா தொகையை மட்டுமே கருத்தில் கொண்டிருந்தன. ஆனால், ஒருவர் செலுத்தும் சந்தா தொகையில், ஒருங்கிணைந்த ஷீல்டு திட்டத்துக்கான சந்தா தொகையும் அடங்கும்.

அதோடு, பல காப்புறுதி நிறுவனங்கள் அடித்தள ‘ஐபி’ சந்தா தொகைகளை ஒரே நேரத்தில் உயர்த்தியுள்ளன. அவற்றில் ஓர் ‘ஐபி’ திட்டத்துக்கான சந்தா தொகை 76 விழுக்காடு அதிகரித்துள்ளது.

ஆனாலும், ‘ரைடர்’ மாற விரும்புவோர் தங்கள் வாழ்நாள் முழுவதும் கணிசமான அளவில் சேமிப்புகளைக் காணலாம் என்றும் அது 100,000 வெள்ளிக்கும் மேல் இருக்கக்கூடும் என்றும் கூறப்படுகிறது.

வாழ்நாள் சந்தா தொகை குறித்த அந்த ஆக அண்மைப் பகுப்பாய்வை, காப்புறுதி ஆலோசனை நிறுவனமான ‘ஹேவண்ட்’ நடத்தியது.

காப்புறுதி நிறுவனங்களிடமிருந்து நேரடியாகச் சந்தா தொகை குறித்த புள்ளிவிவரங்களைச் சேகரித்த பிறகு அல்லது அதன் சந்தை ஆய்விலிருந்து புள்ளிவிவரங்களைப் பெற்றபிறகு, அந்தப் பகுப்பாய்வு மேற்கொள்ளப்பட்டது.

வாழ்நாள் சந்தா தொகைகள் என்பது, முதலாம் வயதிலிருந்து நூறாவது வயதுவரை செலுத்தப்படும் ஒட்டுமொத்தச் சந்தா தொகைகளைக் குறிக்கின்றன. இருப்பினும், அவை மெடிஷீல்டு லைஃப் சந்தா தொகைகளை உள்ளடக்குவதில்லை.

காப்புறுதி நிறுவனங்கள் வழக்கமாகத் தங்கள் திட்டங்களின் சந்தா தொகைகளையும் பலன்களையும் மறுஆய்வு செய்து மாற்றுவதால், வாழ்நாள் சந்தா தொகைகளும் காலப்போக்கில் மாறும்.

அனைத்துச் சிங்கப்பூரர்களும் தேசிய மெடிஷீல்டு லைஃப் திட்டத்தின்கீழ் பாதுகாக்கப்பட்டுள்ளனர். அத்திட்டத்தின்கீழ், மருத்துவமனையில் தங்கியிருப்பதற்கான செலவுகள், புற்றுநோய்க்கான கதிரியக்கச் சிகிச்சை, சிறுநீரகச் சுத்திகரிப்பு போன்ற குறிப்பிட்ட சிகிச்சைகளுக்கான செலவுகள் ஆகியவை ஈடுகட்டப்படும்.

முன்னதாக, புதிய ரைடர்கள் பழைய ரைடர்களைக் காட்டிலும் 16 விழுக்காடு முதல் 84 விழுக்காடு வரை விலை குறைவாக இருக்கும் என்று காப்புறுதி நிறுவனங்கள் ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் ஊடகத்திடம் தெரிவித்திருந்தன.

இருப்பினும், அதே நேரத்தில், ஏழு காப்புறுதி நிறுவனங்களில் ஐந்து அவற்றின் அடித்தள ‘ஐபி’, பழைய ரைடர்களின் சந்தா தொகைகளை ஏப்ரல் 1ஆம் தேதியிலிருந்து அதிகரித்தன.

அதற்கு, அதிகரித்துவரும் மருத்துவச் செலவுகள், அதிகத் தொகையுள்ள கோரிக்கைகள் ஆகியவற்றையே அவை காரணங்களாகக் குறிப்பிட்டன.

குறிப்புச் சொற்கள்