பொத்தோங் பாசிர் வட்டாரத்தில் உள்ள வீடமைப்பு வளர்ச்சிக் கழக வீடு ஒன்றின் வெளியே தீ மூண்டதில் 44 வயது ஆடவர் உயிரிழந்தார்.
பொத்தோங் பாசிர் அவென்யூ 1, புளோக் 107ல் உள்ள வீட்டிற்கு வெளியே தீப்பிடித்ததாக புதன்கிழமை (ஆகஸ்ட் 28) காலை 6.45 மணியளவில் அந்தச் சம்பவம் குறித்து தங்களுக்குத் தகவல் கிடைத்ததாக சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படை கூறியது.
சம்பவ இடத்திற்கு அந்தப் படையினர் வந்து சேருவதற்குள் அருகில் இருந்தவர்கள் தீயணைப்புக் கருவிகளைப் பயன்படுத்தி தீயைக் கட்டுப்படுத்த முயன்றதாக படையின் பேச்சாளர் கூறினார்.
இதற்கிடையே, பொத்தோங் பாசிர் அவென்யூ 1, புளோக் 107ல் உள்ள ஒரு வீட்டின் வெளியே ஆடவர் ஒருவர் அசைவற்றுக் கிடந்ததாகக் காவல்துறை கூறியது.
அந்த புளோக்கின் எட்டாவது மாடியில் உள்ள வீட்டிற்கு வெளியே ஆண் சடலம் எரிந்த நிலையில் காணப்பட்டதாக சாவ்பாவ் சீன நாளிதழ் கூறியது.
காலை 6 மணியளவில் அலறல் சத்தம் கேட்டு தாம் விழித்து எழுந்ததாக அண்டை வீட்டுப் பெண் ஒருவர் சாவ்பாவ் செய்தியாளரிடம் கூறினார்.
கடுமையான வலியால் ஒருவர் துடிப்பதைப் போன்ற சத்தம் அது என்று கூறிய அந்தப் பெண், இருப்பினும் அவர் உதவி கேட்டு கூவியதைத் தான் கேட்கவில்லை என்றும் சொன்னார்.
“எனது அறை நடைவெளிக்கு அருகே இருப்பதால் என்னால் அந்தச் சத்தத்தைத் தெளிவாகக் கேட்க முடிந்தது.
தொடர்புடைய செய்திகள்
“புளோக்கின் கீழே இறுதிச்சடங்கு ஏதும் நடைபெறுகிறதோ என்றும் யாரேனும் துக்கத்தில் அழுகிறாரோ என்றும் நான் நினைத்தேன்,” என அந்தப் பெண் தெரிவித்தார்.
காலை 10 மணியளவில் ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் செய்தியாளர் சம்பவ இடத்திற்குச் சென்றபோது குறைந்தபட்சம் மூன்று காவல்துறை கார்களும் ஒரு காவல்துறை வேனும் புளோக்கின் அருகே நிறுத்தப்பட்டு இருந்ததை அவர் கண்டார்.
பிற்பகல் 12.40 மணியளவில் எட்டாவது மாடி மின்தூக்கிக்குள் சடலம் ஒன்றை காவல்துறை அதிகாரிகளும் இறுதிச்சடங்கு நிறுவனம் ஒன்றின் ஊழியர்களும் சுமந்து சென்றதை அவர் கண்டார்.
இதற்கிடையே, உயிரிழந்த ஆடவரின் பெயர் லிம் மின் லீ என்று அவரது சகோதரர் செய்தியாளர்களிடம் கூறினார்.
தம்மை லிம் என்று அடையாளப்படுத்திக்கொண்ட அந்த 45 வயது ஆடவர், தமது சகோதரர் உயிரிழந்துவிட்டதாக காலை 9 மணியளவில் உறவினர் ஒருவர் தொலைபேசியில் தெரிவித்ததாகக் கூறினார்.
மாண்ட சகோதரர் நல்லவர், நேர்மையான மனிதர் என்றும் அவர் தெரிவித்தார்.
தீப்பிடித்ததற்கான காரணம் விசாரிக்கப்பட்டு வருகிறது.