பொத்தோங் பாசிர் தனித்தொகுதியில் நிலவிய மும்முனை போட்டியில் மக்கள் செயல் கட்சியின் அலெக்ஸ் இயோ வெற்றிபெற்றுள்ளார்.
திரு அலெக்ஸ் இயோ, 19,185 வாக்குகளையும் (69.18%), சிங்கப்பூர் மக்கள் கட்சியின் (சிமக) திரு வில்லியம்சன் லீ 6,230 வாக்குகளையும் (22.47%), சீர்திருத்த மக்கள் கூட்டணியின் திரு லிம் தியென் 2,316 வாக்குகளையும் (8.35%) பெற்றுள்ளனர்.
“இந்த வெற்றியை நாங்கள் இலேசாக எடுத்துக்கொள்ள மாட்டோம். எங்கள் பொறுப்பை நாங்கள் உணர்கிறோம். நாங்கள் செய்த ஒவ்வொரு வாக்குறுதியையும் கடைப்பிடிப்போம். எங்கள் முயற்சி நாளையே ஆரம்பமாகும்,” என்று பொத்தோங் பாசிர் மக்களுக்கு நன்றி தெரிவித்தார் வெற்றிபெற்ற திரு அலெக்ஸ் இயோ.
பொத்தோங் பாசிர் தனித்தொகுதி 2020 பொதுத்தேர்தலில் வெறும் 18,551 வாக்காளர்களையே கொண்டிருந்தது. தற்போதைய 2025 பொதுத்தேர்தலில் அவ்வெண்ணிக்கை 67 விழுக்காடு அதிகரித்து, 30,971 வாக்காளர்கள் கொண்ட தொகுதியாக மாறியுள்ளது. அவர்களுள் இன்று வாக்களித்தவர்களின் எண்ணிக்கை 27,731.
2020ஆம் ஆண்டு நடந்த பொதுத் தேர்தலில், மசெக வேட்பாளர் சித்தோ யி பின் 60.69 விழுக்காடு வாக்குகளைப் பெற்று வெற்றிபெற்றார்.
27 வருடங்களாகப் பொத்தோங் பாசிர் தொகுதியைத் தலைமை தாங்கிய எதிர்க்கட்சி தலைவர் சியாம் சீ தோங்கிடமிருந்து வெறும் 114 வாக்கு வித்தியாசத்தில், திரு சித்தோ யி பின் பொத்தோங் பாசிர் தனித்தொகுதியை 2011ஆம் ஆண்டு கைப்பற்றினார்.
2011 முதல் அங்குச் சேவையாற்றிய திரு சித்தோ யி பின்னைத் தொடர்ந்து, பொத்தோங் பாசிரில் முதன்முறையாகத் திரு அலெக்ஸ் இயோ களமிறங்கினார்.
2020ல் அல்ஜுனிட் குழுத்தொகுதியில் அவரது தோல்வியை அடுத்து, இந்தப் பொதுத் தேர்தலில் பொத்தோங் பாசிர் தனித்தொகுதியில் நின்று அவர் வெற்றிபெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

