அட்மிரால்டி பெருவிரைவு ரயில் நிலையத்தில் ரயிலின் உள்ளே கையடக்க மின்னூட்டி ஒன்று தீப்பிடித்ததில் பெண் ஒருவர் மருத்துவமனைக்கு கொண்டுசெல்லப்பட்டார்.
அச்சம்பவம் திங்கட்கிழமை (மார்ச் 16) நடந்தது.
கையடக்க மின்னூட்டியால் ஏற்பட்ட தீயைப் பாதிக்கப்பட்ட பெண் உடனடியாக அணைத்ததாகவும் ரயில் நிலையத்தை ரயில் அடைந்தவுடன் ரயில் நிலைய ஊழியர்கள் சம்பவத்தைக் கையாண்டதாகவும் பொதுப் போக்குவரத்து நிறுவனமான எஸ்எம்ஆர்டி தெரிவித்தது.
அந்தப் பெண்ணுக்கு முதலுதவி வழங்கப்பட்டது.
அச்சம்பவத்தில் வேறு யாருக்கும் காயம் ஏற்பட்டதாகத் தகவல் இல்லை.
சம்பவத்தன்று அட்மிரால்டி பெருவிரைவு ரயில் நிலையத்திலிருந்து பிற்பகல் சுமார் 3.20 மணியளவில் உதவி வேண்டி தங்களுக்கு அழைப்பு வந்ததாகச் சிங்கப்பூர்க் குடிமைத் தற்காப்புப் படை கூறியது.
பாதிக்கப்பட்ட பெண் உட்லண்ட்ஸ் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார்.
இணையவாசி வெர்னான் லிம் மார்ச் 16ஆம் தேதி வெளியிட்ட ஃபேஸ்புக் பதிவில், அந்தத் தீச்சம்பவத்திற்குப் பிந்தைய நிலையை ஒரு புகைப்படமாகப் பகிர்ந்தார்.
தொடர்புடைய செய்திகள்
ரயிலின் தரைப்பகுதியில் சிதறிக் கிடந்த மின்னூட்டக் கருவியின் கருகிய பாகங்களை அந்தப் புகைப்படத்தில் காண முடிந்தது.

