மின்வாகன மின்கலன்களிலிருந்து பெறப்படும் மின்சாரம், பயனாளர்களின் உச்சத் தேவையைப் பூர்த்தி செய்ய தேசிய மின்சாரக் கட்டமைப்புக்கு உதவும் என்று கூறப்படுகிறது. ‘வெகிகல்-டு-கிரிட்’ (வி2ஜி) எனும் முன்னோடித் திட்டம் அதைச் சாத்தியமாக்கும்.
இந்த முன்னோடித் திட்டம் நவம்பர் மாதத்திலிருந்து தொடங்கும் எனத் தெரிவிக்கப்பட்டது.
இதன் தொடர்பில், எரிசக்திச் சந்தை ஆணையமும் சிங்கப்பூர் தொழில்நுட்பப் பல்கலைக்கழகமும் இணைந்து, ‘ஸ்டிரைட்ஸ்’ போக்குவரத்து நிறுவனத்தின் தலைமையிலான கூட்டமைப்பிற்கு மானியம் வழங்கியுள்ளன.
இந்தத் திட்டத்தில்,15 வேன்களும் 10 வி2ஜி மின்னூட்டிகளும் இடம்பெறுகின்றன.
நவம்பர் மாதம் பொங்கோலில் தொடங்கும் இத்திட்டம் அடுத்த மூன்று ஆண்டுகளுக்கு அமலில் இருக்கும்.
மெரினா பே சேண்ட்சில் புதன்கிழமை காலை நடைபெற்ற சிங்கப்பூர் அனைத்துலக எரிசக்தி வார நிகழ்ச்சியில் இந்தத் திட்டம் அறிவிக்கப்பட்டது. வெள்ளிக்கிழமை (அக். 26) வரை இந்நிகழ்ச்சி நடைபெறும் எனக் கூறப்பட்டது.
சிங்கப்பூரில் 2028ஆம் ஆண்டு வரை, பயனாளர்களின் உச்சத் தேவை வரம்பு ஆண்டுக்கு 6.5 விழுக்காடு அதிகரிக்கும் என்று எரிசத்திச் சந்தை ஆணையம் மதிப்பிட்டுள்ளது.
மின்னிலக்கப் பொருளியல், மேம்பட்ட உற்பத்தி, உயர் தொழில்நுட்ப வேளாண்மை, மின்வாகனம் போன்ற துறைகளில் தேவை அதிகரிப்பது அதற்குக் காரணம்.
தொடர்புடைய செய்திகள்
இந்தத் தொழில்நுட்பம், இருவழியில் செயல்படும். அதாவது தேசிய மின்சாரக் கட்டமைப்பிலிருந்து சக்தியைப் பெறும் மின்வாகன மின்கலன், அதைச் சேமித்து, தேவைப்படும்போது மீண்டும் கட்டமைப்பிற்குத் திருப்பித் தரும் எனக் கூறப்பட்டது.
மின்வாகனங்கள் போக்குவரத்துக்கு மட்டுமே பயன்படும் என்ற நிலை மாறி, அவை நடமாடும் எரிசக்தி சேமிப்புக் கலங்களாக விளங்க புதிய வி2ஜி தொழில்நுட்பம் வழிவகுக்கிறது.