தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

ஜூரோங் ஈஸ்ட், புவன விஸ்தா நிலையங்களுக்கிடையே செப்டம்பர் 26ல் இரு வழிகளிலும் ரயில் சேவை கிடையாது: எஸ்எம்ஆர்டி

3 mins read
738c11f2-0d9e-4b6a-91f5-aabe9dd973ea
ரயில் சேவை பாதிக்கப்பட்டதை அடுத்து புவன விஸ்தா எம்ஆர்டி நிலையத்தில் மாலை 7 மணியளவில் இணைப்புப் பேருந்துச் சேவைக்காக காத்திருந்த மக்கள். - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்
multi-img1 of 5

ஜூரோங் ஈஸ்ட் எம்ஆர்டி நிலையத்திற்கும் புவன விஸ்தா எம்ஆர்டி நிலையத்திற்கும் இடையே வியாழக்கிழமை (செப்டம்பர் 26) ரயில் சேவைகள் இருக்காது என்று எஸ்எம்ஆர்டி நிறுவனம் புதன்கிழமை இரவு தெரிவித்தது.

நிறுவனத்தின் பொறியாளர்கள் புதன்கிழமை இரவு தொடங்கி வியாழக்கிழமை முழுவதும் பழுதுபார்ப்புப் பணியில் ஈடுபட்டு, கிழக்கு-மேற்கு ரயில் பாதையில் மின்சாரக் கோளாற்றால் ஏற்பட்ட ரயில் சேவைத் தடையைச் சரிசெய்வர் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

பூன் லே, ஜூரோங் ஈஸ்ட் நிலையங்களுக்கு இடையேயும் புவன விஸ்தா, குவீன்ஸ்டவுன் நிலையங்களுக்கு இடையேயும் பத்து நிமிடங்களுக்கு ஒருமுறை இணைப்பு ரயில் சேவை இருக்கும்.

பூன் லே எம்ஆர்டி நிலையத்துக்கும் குவீன்ஸ்டவுன் எம்ஆர்டி நிலையத்துக்கும் இடையே இலவசப் பேருந்துச் சேவையும், ஜூரோங் ஈஸ்ட் நிலையத்துக்கும் புவன விஸ்தா நிலையத்துக்கும் இணைப்புப் பேருந்துச் சேவையும் வழங்கப்படும்.

முன்னதாக, கிழக்கு-மேற்கு ரயில் பாதையில் புதன்கிழமை (செப்டம்பர் 25) பூன் லே எம்ஆர்டி நிலையத்துக்கும் குவீன்ஸ்டவுன் எம்ஆர்டி நிலையத்துக்கும் இடையிலான ரயில் சேவை கடுமையாகப் பாதிக்கப்பட்டது.

மின்சாரக் கோளாறு காரணமாக காலை 9.30 மணியிலிருந்து அந்த இரு நிலையங்களுக்கு இடையிலான ரயில் சேவை தடைபட்டது. மேலும், நாள் முழுவதும் அந்த நிலையங்களுக்கான ரயில் சேவை இயங்காது என்று அறிவிக்கப்பட்டது.

பின்னர், வியாழக்கிழமையும் (செப்டம்பர் 26) ஜூரோங் ஈஸ்ட் - புவன விஸ்தா நிலையங்களுக்கு இடையே இரு திசைகளிலும் ரயில்கள் இயக்கப்படா என எஸ்எம்ஆர்டி நிறுவனம் தெரிவித்தது.

இந்த விவகாரம் தொடர்பாக நிலப் போக்குவரத்து ஆணையம் தீவிர விசாரணை நடத்தும் என்று போக்குவரத்து அமைச்சர் சீ ஹொங் டாட் தமது ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டார்.

மேம்படுத்தப்பட வேண்டிய அம்சங்கள் அடையாளம் காணப்படும் என்றார் அவர். இதற்கான பணிகள் செப்டம்பர் 25ஆம் தேதி இரவும் மறுநாளும் நடைபெறும் என்று அவர் தெரிவித்தார்.

செப்டம்பர் 26ஆம் தேதியன்று தொடக்கநிலை ஆறாம் வகுப்பு மாணவர்கள் ‘பிஎஸ்எல்இ’ ஆங்கிலத் தேர்வை எழுத இருக்கின்றனர்.

ரயில் சேவை இடையூறு காரணமாக மாணவர்களுக்கு ஏற்படும் பாதிப்பைக் குறைக்க போக்குவரத்து அமைச்சுடன் கல்வி அமைச்சு இணைந்து செயல்படும் என்றார் அவர்.

அமைச்சர் சீ தற்போது உலகளாவிய நீடித்த நிலைத்தன்மை போக்குவரத்துக் கருத்தரங்கில் கலந்துகொள்வதற்காக  சீனத் தலைநகர் பெய்ஜிங்கில் இருக்கிறார்.

சேவை இடையூறுக்கான காரணம்

சேவை இடையூறுக்கு கவாசாக்கி ஹெவி இன்டஸ்ட்ரிஸ் ரயில் காரணம் என்று பிற்பகல் 12.20 மணி அளவில் எஸ்எம்ஆர்டி நிறுவனம் தெரிவித்தது.

காலை 9.25 மணி அளவில் உலு பாண்டான் பணிமனைக்குத் திரும்பும் வழியில் அது பழுதடைந்ததாகவும் அதிலிருந்து புகை கிளம்பியதாகவும் தெரிவிக்கப்பட்டது.

இதன் காரணமாக மின் வடம் சேதமடைந்து மின்சாரக் கோளாறு ஏற்பட்டதாகத் தெரியவந்துள்ளது.

கிளமெண்டி எம்ஆர்டி நிலையம் அருகில் அந்த ரயில் பழுதடைந்து முடங்கியதாகவும் அப்போது அதில் கிட்டத்தட்ட 850 பயணிகள் இருந்ததாகவும் எஸ்எம்ஆர்டி நிறுவனம் தெரிவித்தது.

அவர்கள் அனைவரும் கிளமெண்டி நிலையத்தின் தளமேடைக்குப் பத்திரமாக அழைத்துச் செல்லப்பட்டதாக அது கூறியது.

பயணிகளுக்கு உதவ நிலையத்தின் ஊழியர்கள் பணியமர்த்தப்பட்டதாகவும் அது தெரிவித்தது.

சேவை இடையூறு குறித்து பயணிகளுக்குத் தெரிவிக்க ரயிலிலும் நிலையத்திலும் அறிவிப்புகள் ஒலிபரப்பப்பட்டது.

காலை நேரத்தில் பயணிகளுக்கு ஏற்பட்ட அசௌகரியத்துக்கு அது மன்னிப்பு கேட்டுக்கொண்டது.

குறிப்புச் சொற்கள்