வரும் 2027ஆம் ஆண்டுக்குள், அனைத்துப் பள்ளிகளிலும் உள்ள வகுப்பறைகளில் கூடுதலான, அதிகத் திறன் கொண்ட மின்விசிறிகள் பொருத்தப்படும் என்று கல்வித் துணை அமைச்சர் ஜாஸ்மின் லாவ் நாடாளுமன்றத்தில் (மார்ச் 4) கூறியிருக்கிறார்.
அதோடு, பள்ளிக் கட்டடங்களின் வெளிப்புறத்தில் வெப்பத்தைக் குறைக்கும் குளிர்ச்சியான சாயம் பூசப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.
குறிப்பிட்ட இடவசதிக் குறைபாடுகள், காற்றோட்டத்தைத் தடுக்கும் சுற்றுச்சூழல் ஆகியவற்றால் அதிகப்படியான வெப்பம் நிலவக்கூடிய பள்ளிகளைக் கண்டறிய கல்வி அமைச்சு பள்ளிகளுடன் இணைந்து செயல்பட்டுவருவதாக அவர் கூறினார்.
தற்போதைய நடவடிக்கைகள் போதாத நிலையில், வெப்பத்தைக் குறைக்க மேலும் அதிகமான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்றார் அவர்.
அருகில் உள்ள கட்டுமானத் தளங்களிலிருந்து வரும் அதிகச் சத்தத்தாலும் தூசியினாலும் நீண்ட நேரத்திற்கு மூடப்படவேண்டிய வகுப்பறைகளுக்குக் குளிரூட்டி வசதிகளைச் செய்துகொடுப்பது குறித்தும் ஆராயப்படலாம் என்று திருவாட்டி லாவ் கூறினார்.
அதிக வெப்பத்திற்கு உள்ளாகக்கூடிய பள்ளிகள் அடையாளம் காணப்பட்டுள்ளனவா என்று பீஷான் - தோ பாயோ நாடாளுமன்ற உறுப்பினர் சாய் யின்ஸோ கேள்வி எழுப்பியிருந்தார். அதோடு, குளிர்ச்சியான சாயத்தைப் பூசுவதிலும் காற்றோட்டத்தை மேம்படுத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்வதிலும் உள்ள முன்னேற்றம் குறித்தும் அவர் கேட்டிருந்தார்.
அதற்குப் பதிலளித்தபோது, அந்தக் கருத்துகளைத் தெரிவித்தார் திருவாட்டி லாவ்.
அதிகரித்துவரும் வெப்பநிலையால் பள்ளிகளில் மாணவர்களின் கற்றலில் ஏற்படக்கூடிய தாக்கம் குறித்து அல்ஜுனிட் குழுத்தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் கென்னத் டியோங் முன்னதாகக் கேள்வி எழுப்பியிருந்தார்.
தொடர்புடைய செய்திகள்
அனைத்துப் பள்ளிகளிலும் தகுந்த கற்றல் சூழல் இருப்பதை உறுதிசெய்யும் நோக்கில், மாணவர்களின் கற்றலிலும் நலனிலும் அதிகரித்துவரும் வெப்பநிலையின் தாக்கம் குறித்து ஆராய கல்வி அமைச்சு மற்ற அமைப்புகளுடனும் ஆராய்ச்சியாளர்களுடனும் இணைந்து செயல்பட்டுவருவதாக திருவாட்டி லாவ் கூறினார்.

