தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

பிரதமரின் கருத்துகளுக்குப் பதிலளித்த பிரித்தம் சிங்

2 mins read
16f7188e-8d0f-4c41-9e55-48c711596782
பாட்டாளிக் கட்சியின் நான்காவது தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் பேசிய அதன் தலைமைச் செயலாளர் பிரித்தம் சிங். - படம்: செய்யது இப்ராஹிம்

பிரதமர் லாரன்ஸ் வோங் முன்பு தெரிவித்த கருத்துகளுக்கு செவ்வாய்க்கிழமை (ஏப்ரல் 29) இரவு நடைபெற்ற பாட்டாளிக் கட்சியின் நான்காவது தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் அதன் தலைமைச் செயலாளர் பிரித்தம் சிங் பதிலளித்துள்ளார்.

துணைப் பிரதமர் கான் கிம் யோங்மீது விமர்சனங்களை முன்வைத்த பாட்டாளிக் கட்சியைப் பற்றி செவ்வாய்க்கிழமை பிற்பகல் பேசிய பிரதமர், எதிர்மறை அரசியலை நிராகரிக்கும்படி சிங்கப்பூரர்களைக் கேட்டுக்கொண்டார்.

அதற்கு, இரவில் பிடோக் விளையாட்டரங்கில் பிரசாரக் கூட்டத்தில் பதிலளித்தார் திரு சிங்.

மாலை 6 மணி முதல் பிடோக் வட்டாரத்தில் கனமழை பெய்து வந்த நிலையில் 7 மணிக்கு தொடங்கவிருந்த பிரசாரக் கூட்டம் ஒரு மணி நேரம் கழித்து 8 மணிக்கே தொடங்கியது. இருப்பினும், மழையைப் பொருட்படுத்தாமல் அங்குத் திரண்ட மக்கள், பிரசாரக் கூட்டம் தொடங்கும்வரை காத்திருந்தனர்.

ஆளும் கட்சியான மக்கள் செயல் கட்சியே (மசெக) எதிர்மறை அரசியலில் ஈடுபடுகிறதா என்ற கேள்வியைத் திரு சிங் தமது உரையின்போது எழுப்பினார்.

முன்னாள் பிரதமர் லீ சியன் லூங் 2006ஆம் ஆண்டில் நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சியினர் அதிக இடங்களை வென்றால் ‘எதிர்க்கட்சியைச் சரிசெய்ய வேண்டியதிருக்கும்’ என்பதன் தொடர்பாகத் தெரிவித்த கருத்தை எடுத்துக்காட்டாகத் திரு சிங் குறிப்பிட்டார்.

“எதிர்க்கட்சிக்கு இரண்டு இடங்கள் மட்டுமே இருந்தபோது இது கூறப்பட்டது. இதுவும் எதிர்மறை அரசியல் அல்லவா?” என்று அவர் கேட்டார்.

பாட்டாளிக் கட்சியைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்களைக் குடியுரிமை வழங்கும் விழாக்களில் கலந்துகொள்ள அனுமதிக்காமல் இருப்பதையும் திரு சிங் விமர்சித்தார்.

“இதுவும் எதிர்மறை அரசியலுக்கான பாடப்புத்தக எடுத்துக்காட்டு அல்லவா?” என்றும் அவர் கேட்டார்.

இத்தகைய நடவடிக்கைகள் நீண்டகாலமாக நடைமுறையில் உள்ள அநீதியை வெளிப்படுத்துவதாக அவர் குறிப்பிட்டார்.

பாட்டாளிக் கட்சி வசம் இருந்துவரும் ஹவ்காங் தொகுதியில் மேம்பாட்டுப் பணிகள் தாமதமாவதால் அவ்வட்டாரவாசிகள் தண்டிக்கப்படுவது போன்ற உணர்வை எடுத்துக்காட்டாக திரு சிங் சுட்டிக்காட்டினார்.

இந்தக் கொள்கைகள் தற்போது மாறியிருந்தாலும், அது நல்லெண்ணத்தால் அன்றி, அரசியல் அழுத்தத்தின் விளைவாக மட்டுமே ஏற்பட்டதாக அவர் தெரிவித்தார்.

ஈஸ்ட் கோஸ்ட் குழுத்தொகுதி பாட்டாளிக் கட்சி வேட்பாளர்கள் யீ ஜென் ஜோங், சுஃப்யான் மிக்கைல் புத்ரா, நெத்தேனியெல் கோ, ஜாஸ்பர் குவான், பெரிஸ் வி பரமேஸ்வரி ஆகியோரும் உரையாற்றினர்.

வரும் பொதுத்தேர்தலில் போட்டியிட தமக்கு எந்த எண்ணமும் இல்லை என்ற திரு யீ, ஆயினும் ஈஸ்ட் கோஸ்ட் குழுத்தொகுதியில் போட்டியிடும் பாட்டாளிக் கட்சி அணிக்குத் தலைமை தாங்க கடந்த மாதம் தமக்கு அழைப்பு விடுக்கப்பட்டதாகவும் சொன்னார்.

குறிப்புச் சொற்கள்