தனது பராமரிப்பில் இருந்த மூன்று குழந்தைகளிடம் மோசமாக நடந்து கொண்டதாகவும், அதில் ஒரு குழந்தைக்கு வாந்தி எடுக்கும் வரை வலுக்கட்டாயமாக உணவளித்ததாகவும் குற்றம் சாட்டப்பட்ட பாலர்பள்ளி ஆசிரியர் ஒருவர் நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்டுள்ளார்.
பாதிக்கப்பட்டவர்களின் அடையாளங்களைப் பாதுகாப்பதற்காக பெயர் குறிப்பிட முடியாத 36 வயதான சிங்கப்பூர்ப் பெண் மீது, வியாழக்கிழமை (நவம்பர் 20) அன்று சிறுவர்கள், இளையர்கள் சட்டத்தின் கீழ் மூன்று குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டன.
இந்தச் சம்பவங்கள் செப்டம்பர் 2024ல் நடந்ததாகக் குற்றப்பத்திரிகைகள் கூறுகின்றன. சம்பவங்கள் நடந்த இடம் நீதிமன்ற ஆவணங்களிலிருந்து மறைக்கப்பட்டுள்ளது.
செப்டம்பர் 23 அன்று, அந்த ஆசிரியர் 12 மாதக் குழந்தைக்கு வாந்தி எடுக்கும் வரை வலுக்கட்டாயமாக உணவளித்ததாகவும், அதன் பிறகு முகத்திலும் முதுகிலும் அடித்ததாகவும் கூறப்படுகிறது.
இரண்டு நாள்களுக்குப் பிறகு, செப்டம்பர் 25 அன்று, எட்டு மாதக் குழந்தையின் வாயில் ஒரு துணியைத் திணித்து, குழந்தையின் முகத்தில் ஒரு போர்வையைப் போட்டதாகவும் கூறப்பட்டது.
அன்று, அந்த மாது 10 மாதக் குழந்தையாக இருந்த மூன்றாவது குழந்தையின் வலது கையில் அடித்து மோசமாக நடத்தியதாகக் கூறப்படுகிறது.
குழந்தை அமர்ந்திருந்த ஒரு நாற்காலியைத் தூக்கி முழங்கால் உயரத்திலிருந்து கீழே அந்த மாது போட்டதாகக் கூறப்படுகிறது.
நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டபோது அந்தப் பெண் எந்த கருணை மனுவையும் தாக்கல் செய்யவில்லை.
தொடர்புடைய செய்திகள்
அவருக்கு $15,000 பிணை வழங்கப்பட்டது. அவரது வழக்கு டிசம்பர் 18 அன்று மீண்டும் நீதிமன்றத்தில் விசாரிக்கப்படும்.
ஒரு குழந்தையை மோசமாக நடத்திய குற்றம் நிரூபிக்கப்பட்டால், ஒவ்வொரு குற்றச்சாட்டிற்கும் $8,000 வரை அபராதம் அல்லது எட்டு ஆண்டுகள் வரை சிறை அல்லது இரண்டும் தண்டனையாக விதிக்கப்படலாம்.

