தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

5 வயதுச் சிறுமியின் காலை எட்டி உதைத்த பாலர் பள்ளி ஆசிரியருக்கு எதிராக நடவடிக்கை

1 mins read
90a8e54a-7d02-4889-a352-81d6095c7f19
பாலர் பள்ளி பொறுப்புகளைச் செய்வதிலிருந்து அந்த ஆசிரியர் இடைநீக்கம் செய்யப்பட்டுவிட்டதாக பாலர் பருவ மேம்பாட்டு அமைப்பு தெரிவித்துள்ளது. - படம்: சாவ் பாவ்

சரியாக உட்காரவைக்க வேண்டும் என்பதற்காக ஏப்ரல் 2ஆம் தேதி, ஐந்து வயதுச் சிறுமி ஒருவரின் வலது காலின் முழங்காலுக்குக் கீழே பாலர் பள்ளி ஆசிரியர் ஒருவர் எட்டி உதைத்ததாக விசாரணையில் தெரியவந்துள்ளது.

இதையடுத்து, அந்த ஆசிரியர் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது.

சம்பவம் குறித்து ஏப்ரல் 3ஆம் தேதி தகவல் கிடைத்ததாக பாலர் பருவ மேம்பாட்டு அமைப்பின் பேச்சாளர் ஜூன் 5ஆம் தேதி தெரிவித்தார்.

விசாரணையை அடுத்து, பாலர் பள்ளி பொறுப்புகளைச் செய்வதிலிருந்து அந்த ஆசிரியர் இடைநீக்கம் செய்யப்பட்டுவிட்டதாக அமைப்பு குறிப்பிட்டது.

“தவறு செய்த ஆசிரியர் அதையடுத்து தம் வேலையிலிருந்து விலகிக்கொண்டார். பாலர் பள்ளிப் பிரிவிலும் அவர் தற்போது இல்லை,” என்றார் பேச்சாளர்.

காவல்துறையிடம் சிறுமியின் பெற்றோர் புகார் அளித்ததை அடுத்து மருத்துவப் பரிசோதனைக்காகத் தங்களின் மகளை கேகே மகளிர், சிறார் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லுமாறு அதிகாரிகள் அறிவுறுத்தினர்.

மருத்துவ அறிக்கையின்படி, சிறுமியின் வலது காலில் முழங்காலுக்குக் கீழே கடுமையான சிராய்ப்புக் காயம் இருந்ததாகக் கண்டறியப்பட்டது.

குழந்தைப் பராமரிப்பு நிலையத்தில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராக்களின் காணொளிப் பதிவுகளை மறுஆய்வு செய்ததன் வாயிலாகவும் ஊழியர்களை நேர்கண்டதிலும் தவறு செய்த ஆசிரியர் தனது வகுப்பறை நிர்வாகத்துக்குப் பொருத்தமற்ற செயலைச் செய்தது உறுதியானதாக சிறுமியின் தந்தைக்கு அமைப்பு மின்னஞ்சல் அனுப்பி இருந்தது.

குறிப்புச் சொற்கள்