வெளிநாடுகளிலிருந்து சிங்கப்பூருக்கு குரங்கம்மைத் தொற்றுப் பரவலுக்கு எதிரான முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக வெள்ளிக்கிழமை (ஆகஸ்ட் 23) முதல் சாங்கி, சிலேத்தார் விமான நிலையங்களில் உடல்வெப்பநிலை கண்காணிப்புப் பரிசோதனை இடம்பெறும்.
எல்லைகளில் குரங்கம்மைத் தொற்றுக்கு எதிராக சிங்கப்பூரின் கண்காணிப்பு ஆற்றலை தாங்கள் மேம்படுத்தப் போவதாக சுகாதார அமைச்சு, போக்குவரத்து அமைச்சு, குடிநுழைவு, சோதனைச்சாவடி ஆணையம் ஆகியன தெரிவித்துள்ளன.
குரங்கம்மைத் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளிலிருந்து கப்பலில் சிங்கப்பூருக்கு வரும் பயணிகளுக்கும் கப்பல் ஊழியர்களுக்கும் கடலோர சோதனைச்சாவடிகளில் இதேபோன்ற பரிசோதனை நடைமுறைகள் செயல்படுத்தப்படும்.
சிங்கப்பூருக்கும் குரங்கம்மைத் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள எந்தவொரு நாட்டிற்கும் இடையே நேரடி விமானச் சேவைகள் இல்லாவிட்டாலும், தொற்றுப் பரவல் அபாயமுள்ள பகுதிகளிலிருந்து விமானங்களில் வரும் பயணிகளுக்கும் விமான ஊழியர்களுக்கும் சாங்கி, சிலேத்தார் விமான நிலையங்களில் உடல்வெப்பநிலை, கண்காணிப்புப் பரிசோதனை நடத்தப்படும் எனச் சுகாதார அமைச்சு விளக்கியது.
தொற்றிலிருந்து பாதுகாத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளைப் பயணிகள் மேற்கொள்ள, விமான நிலைய சோதனைச்சாவடிகளில் சுகாதார ஆலோசனைகளும் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளன.
அந்த ஆலோசனையைப் பின்பற்ற பயணிகளுக்கு அறிவுறுத்தப்படுகிறது. குறிப்பாக, குரங்கம்மைத் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள நாடுகளுக்குச் சொல்வோர் அல்லது அங்கிருந்து வருவோருக்கு இது பொருந்தும்.
காய்ச்சல், தடிப்பு மற்றும்/அல்லது குரங்கம்மையுடன் தொடர்புடைய அறிகுறிகள் இருப்பதாகக் கண்டறியப்படுவோர், மருத்துவப் பரிசோதனைக்காக அனுப்பப்படுவர்.
வியாழக்கிழமை (ஆகஸ்ட் 22) நிலவரப்படி சிங்கப்பூரில் இவ்வாண்டு இதுவரை 13 பேருக்கு குரங்கம்மைத் தொற்று ஏற்பட்டுள்ளது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. அவர்களில் யாரும் கூடுதல் ஆபத்தான கிளேட் 1 வகை கிருமித்தொற்றுக்கு ஆளாகவில்லை என்று சுகாதார அமைச்சு கூறியது.
தொடர்புடைய செய்திகள்
தற்போது கிளேட் 1 வகை குரங்கம்மைத் தொற்று, ஆப்பிரிக்கக் கண்டத்தைத் தாண்டி சுவீடன், தாய்லாந்து ஆகிய நாடுகளில் மட்டும்தான் கண்டறியப்பட்டுள்ளது. அவ்விரு நாடுகளிலும் உள்ளூரில் கிளேட் 1 வகை குரங்கம்மைத் தொற்று இடம்பெறவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தற்போதைக்கு குரங்கம்மைத் தொற்றுக்கு ஆளாகும் அபாயம் அதிகம் இருப்போர், அவர்களுடன் நெருங்கிய தொடர்பில் இருப்போர் ஆகியோருக்குத் தடுப்பூசி வழங்குவதில் கவனம் செலுத்தப்பட்டு வருகிறது. குரங்கம்மை பரவும் விதத்தைக் கருத்தில்கொள்ளும்போது தேசிய அளவில் தடுப்பூசி போடவேண்டிய அவசியம் கிடையாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.