அமெரிக்காவின் வரிவிதிப்புக் கொள்கைக்கு இணங்க சிங்கப்பூருக்கான வரி 10 விழுக்காடு என்பது ஒரு தற்காலிக நிம்மதியாக இருக்கலாம் என கொள்கை வகுப்பாளர்கள் கருதுகின்றனர்.
ஆசிய வட்டாரத்துக்கான குறைந்தபட்ச வரி 10 விழுக்காடு என்பது சிங்கப்பூருக்கும் பொருந்தும். ஆயினும், அடுத்தடுத்து நிகழ இருப்பவை மாற்றத்தை ஏற்படுத்தலாம் என்பது அவர்களின் கணிப்பு.
தீர்க்கப்படாத சில பிரச்சினைகள் முழுமையாகத் தெளிவடையும் வரை இதில் உறுதி இல்லை என்கின்றனர் அவர்கள்.
அத்தகைய பிரச்சினைகளில் முதலாவது, மருந்தியல் மற்றும் பகுதி மின்கடத்தித் துறைகளுக்கான வரி அறிவிப்பை திரு டிரம்ப் இன்னும் நிலுவையில் வைத்திருப்பது. அவ்விரு துறைகளும் சிங்கப்பூரின் ஏற்றுமதியில் முன்னணி வகிப்பவை.
அடுத்ததாக, வரியைத் தவிர்க்க மாற்று முறைகளில் சரக்குகளைக் கொண்டு சென்றால் கூடுதலாக 40 விழுக்காடு வரி விதிக்கப்படும் என வியாழக்கிழமை (ஜூலை 31) வெள்ளை மாளிகை வெளியிட்டிருக்கும் அறிவிப்பு.
இது சிங்கப்பூரின் தென்கிழக்காசிய வர்த்தகப் பங்காளிகளான மலேசியா, இந்தோனீசியா மற்றும் வியட்னாமைப் பெரிதும் பாதிக்கும் என்று பகுப்பாய்வாளர்கள் சந்தேகிக்கின்றனர்.
காரணம், இதுபோன்ற நாடுகள், வரியைத் தவிர்க்க விரும்பும் சீன ஏற்றுமதியாளர்களுக்கு உதவுவதில் உடந்தையாக இருப்பதாக வாஷிங்டன் நம்புகிறது.
இவை தவிர, மற்றோர் அம்சமும் கவனிக்கத்தக்கது. ஜூலை 31 இரவில் அறிவிக்கப்பட்ட வரிகள் ஆகஸ்ட் 7ஆம் தேதிதான் நடப்புக்கும் வரும் என்பதால், அதற்கிடையில் மாற்றங்கள் நிகழலாம் என்பதுதான் அது.
தொடர்புடைய செய்திகள்
இருப்பினும், சிங்கப்பூர் உள்ளிட்ட பெரும்பாலான ஆசிய நாடுகளுக்கான வரியை, குறிப்பிடத்தக்க மறுஆய்வுக்கு அமெரிக்கா உட்படுத்துவதற்கான சாத்தியமும் குறைவு என்பது பகுப்பாய்வாளர்களின் எண்ணம்.

