தொடக்கநிலை இறுதித்தேர்வு: 15 விழுக்காட்டு கேள்விகள் சவாலானவை

2 mins read
8261afeb-cd10-4823-b89a-8b650e9269ad
கடந்த 2024ஆம் ஆண்டு தொடக்கநிலை இறுதித் தேர்வு முடிவுகளை அறியக் காத்திருக்கும் மாணவர்கள் சிலர். - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

ஒவ்வோர் ஆண்டும் தொடக்கநிலை இறுதித் தேர்வில் (பிஎஸ்எல்இ) கேட்கப்படும் கேள்விகளில் ஏறத்தாழ 15 விழுக்காடு சவாலானவை என்று அறியப்படுகிறது.

அந்தக் கேள்விகள் மாணவர்களைத் தங்கள் தனிப்பட்ட திறன்களையும் அனுபவ அறிவையும் பயன்படுத்தவைக்கின்றன. நுண்ணிய, உண்மையான பதில்களை அவர்கள் வழங்குவதற்கான வாய்ப்பையும் அவை தருகின்றன.

நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சியான பாட்டாளிக் கட்சியின் அல்ஜூனிட் குழுத்தொகுதி உறுப்பினர் ஜெரால்ட் கியாம் இது சார்ந்த கேள்விகளை எழுப்பியிருந்தார். பள்ளிப் பாடத்திட்டத்திற்கு அப்பாற்பட்ட கேள்விகளைக் கேட்பதன் விளைவால் அவற்றை எதிர்கொள்ள தனியார் துணைப்பாட வகுப்புகளுக்குச் செல்லமுடியாத மாணவர்களுக்கு கல்வி அமைச்சு எத்தகைய ஏற்பாடுகளைச் செய்துள்ளது என்று கேட்டிருந்தார்.

அதற்கு நீடித்த நிலைத்தன்மை, சுற்றுப்புற, கல்வி மூத்த துணையமைச்சர் டாக்டர் ஜனில் புதுச்சேரி புள்ளிவிவரங்களை வழங்கி விளக்கமளித்தார்.

“அனைத்துக் கேள்விகளும் மாணவர்களின் வயதுக்கு ஏற்ப தகுந்த மொழிநடையில் வழங்கப்படுகின்றன. மேலும் சவாலான கேள்விகளுக்கு உதவிக் குறிப்புகளும் சேர்ந்தே தரப்படுவதால் அவற்றுக்கு பதிலளிக்க மாணவர்கள் படிப்படியாக முயற்சி செய்யலாம்,” என்றார் அமைச்சர்.

தேசியத் தேர்வுகளில் இத்தகைய கேள்விகளுக்கான காரணம் குறித்தும் அவற்றுக்குப் பள்ளிகளில் பயிற்சி வழங்கப்படாத நிலையில் அதிக வளங்கள் நிறைந்த மாணவர்களுக்கு மற்ற மாணவர்களிடமிருந்து இருந்து வேறுபடுத்தப்படும் பாகுபாடு ஏற்படலாம் என்றும் கூறி மேலும் ஒரு கேள்வியை எழுப்பினார் திரு ஜெரால்ட்.

அத்தகைய கேள்விகளை எதிர்கொள்ளக்கூடிய மாணவர்களின் சிந்தனைத் திறன் மேம்படுத்தப்பட்டு, அவர்களின் அறிவாற்றலும் கல்வித் திறனும் ஒருங்கே மதிப்பிடப்படுவதால் பாடத்திட்டத்தில் அமையாத கேள்விகள் கேட்கப்படுவதாகத் திரு புதுச்சேரி கூறினார்.

“இவ்வித கேள்விகளுக்கு பதிலளிக்க மாணவர்களுக்குத் தனியார் துணைப்பாட வகுப்புகள் மட்டும் உதவுகின்றன என்ற எதிர்பார்ப்பு இல்லை. செயல்பாட்டில் உள்ள முறையான கல்வித் திட்டம், மாணவர்கள் ஒரு குறிப்பிட்ட கருத்தை எடுத்து, அறிமுகம் இல்லாத கேள்விகளுக்கு அதனை எவ்வாறு பதிலாகப் பயன்படுத்துவது என்பதை கற்றுக்கொடுக்கின்றது,” என்று மூத்த துணையமைச்சர் டாக்டர் ஜனில் விளக்கம் அளித்தார்.

குறிப்புச் சொற்கள்