தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

இங்கிலிஷ் பிரிமியர் லீக்கை சட்டவிரோதமாகக் காட்டும் 50 இணையத் தளங்கள், செயலிகளை முடக்க உத்தரவு

2 mins read
1c6adf84-3c3e-401b-a72b-03513ac4d58c
இதுவரை 600க்கும் மேற்பட்ட சட்டவிரோத இணையத் தளங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக பிரிமியர் லீக் தெரிவித்தது. - கோப்புப் படம்: ஏஎஃப்பி

இங்கிலிஷ் பிரிமியர் லீக் (இபிஎல்) ஆட்டங்களை சட்டவிரோதமாகக் காட்டும் ஐம்பதுக்கும் மேற்பட்ட இணையத் தளங்கள் மற்றும் செயலிகளை உள்ளூர் இணையச் சேவை நிறுவனங்கள் தடுக்க வேண்டும் என்று நீதிமன்றத்திலிருந்து உத்தரவு பெறப்பட்டுள்ளது.

நவம்பர் 27ஆம் தேதி வெளியிட்ட அறிக்கையில் இந்த விவரங்களை பிரிமியர் லீக் தெரிவித்தது.

2018/2019 பருவத்திலிருந்து இன்று வரை தொடர்ந்து நீதிமன்ற உத்தரவுகள் பெறப்பட்டு 600க்கும் மேற்பட்ட அத்தகைய இணையத் தளங்கள், செயலிகள் முடக்கப்பட்டுள்ளன.

சிங்கப்பூர் உயர் நீதிமன்றத்தின் அண்மைய தீர்ப்பில் சட்டவிரோத நேரடி ஒளிபரப்பு சாதனங்கள் வழியாகக் காட்டும் சட்டவிரோத செயலிகள், இணையத் தளங்களுக்கு தடை விதிக்கப்பட்டது.

பிரிமியர் லீக்கின் வழக்கறிஞர் கெவின் பிளம்ப், காப்புரிமை பாதுகாப்பின் முக்கியத்துவத்தை அங்கீகரிக்கும் வகையில் சிங்கப்பூர் நீதிமன்றங்களும் அமலாக்க அதிகாரிகளும் செயல்படுவது மகிழ்ச்சி அளிக்கிறது என்று தெரிவித்துள்ளார்.

பெரும்பாலான பிரிமியர் லீக்கின் ரசிகர்கள், காற்பந்து விளையாட்டை சட்டப்பூர்வமான வழியில் பார்த்து ரசிக்க விரும்புகின்றனர். ஆனால் சட்டவிரோதச் சாதனங்கள், இணையத்தளங்கள், செயலிகள் வழியாக விளையாட்டைக் காண விரும்புவோர், அவற்றின் வழியாகத் தரவுகளையும் மோசடிகளையும் செய்யும் இணையக் குற்றங்களைப் புரியும் மோசடிக்காரர்களிடம் சிக்கும் ஆபத்துக்கு ஆளாகின்றனர்.

இத்தகைய சட்டவிரோத தளங்களுக்கு தடை விதிக்கப்படுவதால் பரவலாகக் குற்றச் செயல்கள் தடுக்கப்படுவதோடு பிரிமியர் லீக்கின் ரசிகர்கள் பாதுகாப்பாக, உயர்தரத்தில் விளையாட்டைக் காண உறுதி செய்யப்படுகிறது என்று கெவின் பிளம்ப் குறிப்பிட்டார்.

இவ்வட்டாரத்தில் சட்டவிரோதமாக உள்ளடக்கங்களை விற்கும் அல்லது விநியோகிக்கும் சட்ட விரோத இணையத் தளங்களையும் செயலிகளையும் முடக்க சிங்கப்பூர், ஹாங்காங், இந்தோனீசியா, மலேசியா, தாய்லாந்து, வியட்னாம் ஆகிய நாடுகளின் உள்ளூர் அதிகாரிகள், ஒளிபரப்பு பங்காளிகளுடன் சேர்ந்து செயல்பட்டு வருவதாகவும் பிரிமியர் லீக் தெரிவித்தது.

குறிப்புச் சொற்கள்