பருவநிலை மாற்றத்திற்குத் தயாராவது முதலீடுகளை ஈர்க்கும்: கிரேஸ் ஃபூ

2 mins read
db09a7eb-d4df-4d3c-908d-6d498d8f5dbf
நீடித்த நிலைத்தன்மை, சுற்றுப்புற அமைச்சர் கிரேஸ் ஃபூ. - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

சிங்கப்பூர் பருவநிலை மாற்றத்திற்கும் பேரிடர்களுக்கும் தயாராவது மிகமுக்கியமானது. அது வர்த்தக முதலீடுகளை ஈர்க்கும் என்று நீடித்த நிலைத்தன்மை, சுற்றுப்புற அமைச்சர் கிரேஸ் ஃபூ தெரிவித்துள்ளார்.

பிரேசிலில் நடக்கும் காப்30 (COP30) மாநாட்டில் கலந்துகொள்வதற்கு முன்னர் செய்தியாளர்களைத் திங்கட்கிழமை (நவம்பர் 3) திருவாட்டி ஃபூ சந்தித்துப் பேசினார். அப்போது இதைத் தெரிவித்தார்.

நவம்பர் 10ஆம் தேதி தொடங்கும் காப்30 மாநாடு இரண்டு வாரங்கள் நடக்கும். அதில் உலக நாடுகளின் தலைவர்களும் இயற்கை ஆர்வலர்களும் கலந்துகொள்வார்கள்.

“தற்போது நிறுவனங்கள் பருவநிலை மாற்றத்திற்கு ஏற்றவாறு மாறும் நாடுகளைக் கவனிக்கின்றன. தங்களுடைய முதலீடுகள் சரியான இடத்தில் இருப்பதை அவர்கள் உறுதி செய்கின்றன,” என்றார் அமைச்சர் ஃபூ.

“பருவநிலை அபாயம் என்பது தற்போது முதலீட்டாளர்கள் மனத்தில் ஆழமாகப் பதிவாகியுள்ளது. பல வங்கிகள், முதலீட்டாளர்கள் பருவநிலை அபாயத்தைக் கணக்கிட்டு முதலீடுகளைச் செய்வதைப் பார்க்க முடிகிறது,” என்பதைத் திருவாட்டி ஃபூ சுட்டினார்.

பருவநிலை மாற்றத்திற்குத் தயாராவது என்பது பருவநிலையால் ஏற்படும் பாதிப்புகளை எவ்வாறு சமாளிப்பது என்பதாகும் என்றார் அமைச்சர் ஃபூ.

மேலும், மனிதர்கள் மூலம் பருவநிலைக்கு ஏற்படும் தாக்கத்தைக் குறைப்பது குறித்து அவர் விளக்கினார்.

கரிம வெளியேற்றத்தைக் கட்டுப்படுத்துவது குறித்தும் அவர் குறிப்பிட்டார்.

காப்30 மாநாட்டில் சிங்கப்பூர் சார்பாக அமைச்சர் ஃபூ கலந்துகொள்கிறார்.

மாநாட்டில் உலக நாடுகளின் அரசாங்கங்கள் ஒன்றாகச் செயல்பட்டு பருவநிலை மாற்றத்தைச் சமாளிப்பது குறித்து விவாதிப்பார்கள். கிட்டத்தட்ட 200 நாடுகளின் பிரதிநிதிகள் அந்த மாநாட்டில் கலந்துகொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

2015ஆம் ஆண்டு பருவநிலை மாற்றத்தைக் குறைக்க பாரிஸ் உடன்பாடு கையெழுத்தானது. புவி வெப்பத்தை 1.5 டிகிரி செல்சியஸ் குறைக்க நாடுகள் ஒத்துழைக்க வேண்டும்.

சராசரி புவி வெப்பத்தைவிட வெப்பநிலை அதிகரித்தால் பல பருவநிலைப் பிரச்சினைகளை உலகம் சந்திக்க நேரிடும்.

குறிப்புச் சொற்கள்