பீஷான் வட்டாரத்தில் உள்ள வீட்டில் பேடிங்டன் பாலர் பள்ளி ஜூன் மாதம் 10ஆம் தேதியுடன் மூடப்படுகிறது.
அங்கு சேர்ந்து பயிலும் மாணவர்களின் பெற்றோருக்கு ஒரு வார கால அவகாசம் மட்டுமே தரப்பட்டுள்ளது.
அவ்விடத்துக்கான குத்தகைக் காலம் மறுநாளுடன் முடிவுக்கு வருவதாக மே 30ஆம் தேதியன்று பெற்றோருக்கு முதலில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
குத்தகை தொடர்பாக உரிமையாளருடன் இணக்கம் காண முடியாததால் பாலர் பள்ளி மூடப்படுவதாகக் காரணம் தெரிவிக்கப்பட்டது.
பீஷான் பாலர் பள்ளியில் பயிலும் மாணவர்கள் திங்கட்கிழமையன்று (ஜூன் 2) தாம்சன் வாக்கில் உள்ள மற்றொரு கிளைக்கு இடமாற்றம் செய்யப்படுவர் என்று பெற்றோரிடம் தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து, பீஷான் கிளையை இயக்க ஒரு வார நீட்டிப்பு கிடைத்தது.
இதனால், மாணவர்கள் ஜூன் 10ல் இடமாற்றம் செய்யப்படுவர் என்று தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில், லிட்டில் பேடிங்டன் பாலர் பள்ளி விதிமுறைக்கு உட்பட்டு நடந்துகொண்டதா என்பதை கண்டறிய விசாரணை நடத்துவதாகப் பாலர் பருவ மேம்பாட்டுக் கழகம் தெரிவித்துள்ளது.
தொடர்புடைய செய்திகள்
விதிமுறை மீறப்பட்டிருந்தால் அப்பள்ளிக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும் என்று அது கூறியது.
விதிமுறையின்படி, பள்ளியை மூடுவதற்கு முன்பு அது குறித்து குறைந்தது ஆறு மாதங்களுக்கு முன்பாகவே மாணவர்களின் பெற்றோரிடமும் கழகத்திடமும் தெரிவிக்க வேண்டும்.
இந்த விதிமுறையை மீறுபவர்களுக்கு எச்சரிக்கை கடிதங்கள் அனுப்பிவைக்கப்படக்கூடும்.
அல்லது எதிர்காலத்தில் பாலர் பள்ளி உரிமங்களுக்கு விண்ணப்பம் செய்ய தடை விதிக்கப்படக்கூடும்.
குத்தகை ஒப்பந்தம் புதுப்பிக்கப்பட முடியாத சூழல் ஏற்பட்டால் அது குறித்து பெற்றோரிடமும் கழகத்திடமும் பாலர் பள்ளிகள் தெரிவிக்க வேண்டும்.
தனது பீஷான் கிளையை மூடுவதாக லிட்டில் பேடிங்டன் பாலர் பள்ளி தன்னிடம் மே 30ல் தெரிவித்ததாகக் கழகம் கூறியது.
பாதிப்படைந்துள்ள பெற்றோருக்கு ஆதரவு வழங்க லிட்டில் பேடிங்டன் பாலர் பள்ளியுடன் கழகம் செயல்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்பட்டது.

