தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!
சிறுவயதில் தொடங்கிய நடன ஆர்வம், இந்த ஆசிரியரின் கற்றல் உத்தியானது

கலை உணர்வுடன் கற்பிக்கும் பாலர் பள்ளி ஆசிரியர்

2 mins read
bf7a5f45-a198-408a-9080-b32444ba14bd
பரதநாட்டியம் ஆடும் பாலர் பள்ளி ஆசிரியர் பா. திவ்யஸ்த்ரி, 24. - படம்: கப்லான் உயர் கல்வி நிலையம்
multi-img1 of 2

பாலர் பள்ளி ஆசிரியரான 24 வயதாகும் பா. திவ்யஸ்த்ரி நடனம் வழியாக பிள்ளைகளின் மனங்கவர்ந்த கதைசொல்லியாகத் திகழ்கிறார்.

முகபாவம், அங்க அசைவுகள் யாவிலும் உணர்ச்சிகளை வெளிப்படுத்து மாணவர்களை வகுப்பில் ஊக்குவிக்கிறார்.

கலைகளை ஊக்குவிக்கும் குடும்பத்தில் பிறந்த பா. திவ்யஸ்த்ரி, தவழ்ந்து நடந்த சில ஆண்டுகளுக்குப் பிறகு நடனமாடத் தொடங்கிவிட்டார். சிங்கப்பூர் கலாமந்திர் கலைப்பள்ளியில் ஆறு வயது முதல் நடனம் கற்று அரங்கேற்றமும் செய்திருக்கிறார்.

“நடனம், நாடகம், கைவினைப்பொருள்களை உருவாக்குதல் என மாணவர்கள், தங்கள் உணர்வுகளை வெளிப்படுத்த ஊக்குவிப்பேன்,” என்று அவர் கூறினார்.

நடன வகுப்புக்கு முன்னதாக உடலை உற்சாகப்படுத்துவதற்கும் வகுப்புக்குப் பின் உடலை அமைதிப்படுத்துவதற்குமான உத்திகளையும் கற்ற திவ்யஸ்த்ரி, இதனைத் தம் மாணவர்களுக்குக் கற்பித்து வருகிறார்.

மனம் விரும்பிய படிப்பினால் தக்க நேரத்தில் மாற்றம்

திவ்யஸ்த்ரியின் வீட்டுக்கு அருகிலுள்ள பாலர் பள்ளிகளை அவர் அடிக்கடி கண்டு, கவனித்து வர அந்தத் துறையில் சேரவேண்டும் என்ற ஆர்வம் ஏற்பட்டது.

“அப்போது பலதுறைத் தொழிற்கல்வியில் பயின்றபோது துணைப்பாட வகுப்புகளையும் எடுத்துக்கொண்டிருந்தேன்,” என்று அவர் கூறினார்.

பசுமைத் தொழில்நுட்பத்தில் தம் பட்டயப்படிப்பைத் தொடங்கிய இந்த இளையர், இறுதியில் தம் சொந்த உணர்வுகளை மதித்து ஆரம்பப் பிள்ளைப்பருவ கல்வியில் பட்டயப்படிப்பைத் தொடங்கினார். கொவிட்-19 கிருமிப்பரவல் தொடங்கிய சமயத்தில் அப்போது நிலவிய கட்டுப்பாடுகளுக்கு இடையே துறை மாறியது சிரமமாக இருந்ததாக அவர் நினைவுகூர்ந்தார்.

கப்லான் உயர் கல்வி நிலையம் வழியாக நார்தம்ப்ரியா பல்கலைக்கழகத்தில் பிள்ளைப்பருவ, ஆரம்ப ஆண்டு கல்வியைப் பயின்று அவர் இளங்கலை (ஹானர்ஸ்) பட்டத்தை ஜூன் 29ஆம் தேதியன்று பெற்றார்.

ஒவ்வொரு பிள்ளைக்கும் தனித்துவமான கற்றல் திறன் இருப்பதால் அவர்களை அதற்கேற்ப கையாண்டு வெவ்வேறு கற்பித்தல் முறைகளை பா. திவ்யஸ்த்ரி பயன்படுத்துகிறார்.
ஒவ்வொரு பிள்ளைக்கும் தனித்துவமான கற்றல் திறன் இருப்பதால் அவர்களை அதற்கேற்ப கையாண்டு வெவ்வேறு கற்பித்தல் முறைகளை பா. திவ்யஸ்த்ரி பயன்படுத்துகிறார். - படம்: கப்லான் உயர் கல்வி நிலையம்

பிள்ளைகளிடம் கற்க விவரங்கள் ஏராளம்

பெரியவர்கள் கையாளாத பல்வேறு கோணங்களில் பிள்ளைகள் தைரியத்துடனும் புத்தாக்கத்துடனும் யோசிப்பதாக திவ்யஸ்த்ரி கூறினார்.

“ஒரே வழி, சரியான வழி போன்ற வரையறைகளுக்குத் தங்களை உட்படுத்தாமல் பிள்ளைகள் தங்களது எண்ணங்களை வெளிப்படுத்துகின்றனர். தைரியத்துடன் நாள்தோறும் நான் இந்தப் பிள்ளைகளிடம் காணும் புதுமை, என்னைப் பரவசமாக்குகிறது,” என்று அவர் ஆர்வம் ததும்ப கூறுகிறார்.

பிள்ளைகளுக்குப் பாதுகாப்பு உணர்வையும் நம்பிக்கையையும் ஊட்டுவது ஆசிரியரின் கடமை எனக் கருதும் இந்த இளம் ஆசிரியர், தம் மாணவர்கள் பேசுவதற்கு உகந்த சூழலை இயன்றவரை அமைத்துத் தருகிறார்.

“மாணவர்களுக்குப் பொறுமையுடன் விடாமுயற்சியுடன் கற்பிக்கிறேன். என் வகுப்பிலுள்ள வெவ்வேறு பிள்ளைகளின் கற்றல் திறனுக்கு ஏற்ப எனது கற்பித்தல் முறையைத் தகவமைக்கிறேன்,” என்று அவர் கூறினார்.

கற்கும் திறன் என்பது நபருக்கு நபர் வேறுபடும் என்பதை நடன வகுப்புகளில் பிறருடன் இன்று வரையிலும் கற்றுவரும் திவ்யஸ்த்ரி காண்கிறார்.

சில நேரங்களில் வேலை அதிகமானாலும் ஆதரவு தரும் சக ஆசிரியர்களும் தலைமை ஆசிரியரும் இருப்பதை நினைத்து மகிழ்கிறார் இவர்.

“அத்துடன், எனது நேரத்தை முறையான கட்டமைப்பைக் கொண்டு வகுத்துக்கொள்வேன். உடலுக்கும் மனதிற்கும் போதிய ஓய்வு கிடைப்பதை நான் உறுதிசெய்வேன்,” என்று அவர் கூறினார்.

குறிப்புச் சொற்கள்