அதிபர் ஹலிமா யாக்கோப் தமது ஆறாண்டு தவணைக் காலம் முடிவுறும் நாளான புதன்கிழமை (செப்டம்பர் 13) காலை இஸ்தானா ஊழியர்களிடமிருந்து விடைபெற்றார்.
திருவாட்டி ஹலிமா, 69, இஸ்தானாவில் உள்ள மாடிப்படியில் குழுப் புகைப்படம் எடுப்பதற்கு முன், ஊழியர்களுடன் கைக்குலுக்கிப் பேசினார்.
அதனைத் தொடர்ந்து அவர் காரில் புறப்படுவதற்குச் சென்றார்.
சிங்கப்பூரின் முதல் பெண் அதிபருக்குச் சேவையாற்றியது மதிப்புக்குரிய ஒன்று என அதிபரின் அதிகாரத்துவ ராணுவ உதவியாளர் மேஜர் டோ சூ சின் கூறினார்.
“திருவாட்டி ஹலிமாவுக்கான நிகழ்ச்சிகளுக்குத் திட்டமிட்டு, அவற்றை நிர்வகித்தது சவால்மிக்கதாக இருந்தாலும், அவர் மற்றவர்களின் வாழ்க்கையில் செய்யும் மாற்றங்களைக் கண்கூடாகப் பார்க்கும்போது பெரும் மனநிறைவாக இருந்தது,” என்று மேஜர் டோ சொன்னார்.
அடுத்த அதிபராகவிருக்கும் திரு தர்மன் சண்முகரத்தினம், 66, செப்டம்பர் 14ஆம் தேதி வியாழக்கிழமையன்று இஸ்தானாவில் அதிகாரபூர்வமாகப் பதவியேற்பார்.
செப்டம்பர் 1ஆம் தேதி நடைபெற்ற அதிபர் தேர்தலில் அவர் 70.41 விழுக்காட்டு வாக்குகளுடன் வெற்றி பெற்றார்.