அதிபர்: சிங்கப்பூரர்கள் ஒருவருக்கொருவர் உதவுவதால் நெகிழ்ச்சி

அதிபர்: சிங்கப்பூரர்கள் ஒருவருக்கொருவர் உதவுவதால் நெகிழ்ச்சி

1 mins read
aed0cd06-d9af-448b-afef-8d6e6349adfd
-

தமது தேசிய தின உரையை ஆற்றிய அதிபர் ஹலிமா யாக்கோப், இவ்வாண்டின் கொண்டாட்டங்கள் கடந்த ஆண்டுகளின் கொண்டாட்டங்களைக் காட்டிலும் மிகவும் மாறுபட்டதாக இருந்தாலும் அவற்றை அனைவரும் ஆவலுடன் எதிர்பார்ப்பதாக தாம் நம்புவதாகக் கூறினார்.

தற்போதைய கொவிட்-19 கிருமிப்பரவல் நடந்திராமல் இருந்தால் சிங்கப்பூரின் 55 ஆம் பிறந்தநாள் குறிப்பிடத்தக்க மைல் கல்லாக இருந்திருக்கும் என்றும் பெரும் கொண்டாட்டத்திற்கு காரணமாக இருக்கும் என்றும் திருமதி ஹலிமா, ஃபேஸ்புக் காணொளி ஒன்றில் கூறினார்.

பொருளியல், சுகாதாரம், வேலை, சமூக நடவடிக்கைகள் உள்ளிட்ட வாழ்க்கையின் பல்வேறு அங்கங்களை கொவிட்-19 கிருமிப்பரவல் கடுமையாக பாதித்திருப்பதாக அவர் குறிப்பிட்டார்.

பல ஆண்டுகளாக சிங்கப்பூர் தொடர்ந்து அடைந்துவந்த முன்னேற்றம் தற்போதைய நெருக்கடி நேரத்தில் வலுவான தடுப்பரணாக இருப்பதைக் குறிப்பிட்டார் திருமதி ஹலிமா. "இருந்தாலும் இந்த உலகளாவிய சவாலுக்கு எதிரான அவசரகால பதில் நடவடிக்கையை எடுக்க நமது வலுவும் வளமும் முழுமையாக செலுத்தவேண்டியுள்ளது." என்று அவர் கூறினார்.

சிங்கப்பூரின் நிலைமையைச் சீர்செய்ய உதவிய முன்களப் பணியாளர்களுக்கு அதிபர் ஹலிமா நன்றி தெரிவித்தார். அத்துடன், சிங்கப்பூரர்கள் ஒன்றிணைந்து ஒருவருக்கொருவர் உதவுவதற்கான வளங்களை பயன்படுத்துவதைக் கண்டு நெகிழ்ச்சி அடைவதாகக் கூறினார்.

குடும்பங்கள், ஊழியர்கள், நிறுவனங்கள் ஆகியவற்றுக்குச் சிரமங்கள் காத்திருப்பதாக எச்சரித்த அதிபர், இந்தச் சவால்களை எதிர்கொள்ள தனிநபர் மற்றும் ஒருங்கிணைந்த முயற்சிகள் தேவைப்படுவதாகக் கூறினார்.

அனைவரும் ஒற்றுமையாக இருந்து ஒன்றுபட்ட அணியாக சேர்ந்தால் மேலும் பலம்பெற்ற சிங்கப்பூர் எழும் என நம்புவதாக அவர் தெரிவித்தார்.