போலந்து அதிபர் ஆண்ட்ரே டூடா புதன்கிழமை (ஜூன் 11) முதல் வெள்ளிக்கிழமை (ஜூன் 13) வரை சிங்கப்பூருக்கு அதிகாரபூர்வப் பயணம் மேற்கொள்கிறார்.
2015ஆம் ஆண்டில் போலந்து அதிபராகப் பதிவியேற்றதை அடுத்து முதல்முறையாகச் சிங்கப்பூருக்கு வந்துள்ளார்.
அதிபர் டூடாவுடன் அவரது மனைவி அகாட்டா கோர்ன்ஹாவ்சர்-டூடாவும் போலந்தின் மூத்த அரசாங்க அதிகாரிகளும் சிங்கப்பூர் வந்துள்ளனர்.
திரு டூடாவின் பதவிக்காலம் இவ்வாண்டு ஆகஸ்ட் மாதத்துடன் நிறைவடைகிறது.
அதிபர் டூடாவின் பயணம் சிங்கப்பூருக்கும் போலந்துக்கும் இடையிலான நட்புறவை மறுஉறுதி செய்கிறது என்று வெளியுறவு அமைச்சு தெரிவித்தது.
53 வயது அதிபர் டூடாவுக்கு வியாழக்கிழமையன்று (ஜூன் 12) நாடாளுமன்றத்தில் சடங்குபூர்வ வரவேற்பு வழங்கப்படும்.
திரு டூடா, அதிபர் தர்மன் சண்முகரத்னத்தைச் சந்திப்பார். அதே நாள் மாலையில் அதிபர் டூடாவைக் கௌரவிக்கும் வகையில் அதிபர் தர்மன் தலைமையில் விருந்துபசரிப்பு நடைபெறும்.
வெள்ளிக்கிழமையன்று (ஜூன் 13) பிரதமர் லாரன்ஸ் வோங்கை அதிபர் டூடா சந்திப்பார்.
தொடர்புடைய செய்திகள்
அதே நாளன்று நடைபெறும் சிங்கப்பூர்-போலந்து வர்த்தகக் கருத்தரங்கில் அதிபர் டூடா கலந்துகொள்வார்.
அந்தக் கருத்தரங்கை போலந்துத் தூதரகம், போலந்து முதலீட்டு மற்றும் வர்த்தக முகவை, சிங்கப்பூர் வர்த்தகச் சம்மேளனம் ஆகியவை இணைந்து நடத்துகின்றன.