அதிபர் சவால் நிதி 2022க்கு சாதனை அளவில் $16.9 மில்லியன் திரட்டப்பட்டது. அந்த நிதி 2000மாவது ஆண்டில் ஏற்படுத்தப்பட்டது. அது முதல் இந்த அளவுக்கு அதிகத் தொகை ஓராண்டில் திரட்டப்பட்டதில்லை.
அதிபர் சவால் நிதி குறைந்த வருமான குடும்பங்களுக்கு உதவுவதற்காக ஏற்படுத்தப்பட்ட ஒன்றாகும். அந்த நிதி 82 சமூகச் சேவை அமைப்புகளுக்கு ஆதரவு அளிக்கிறது.
மரபணு குறைபாட்டாளர்களுக்கான சங்கம் (சிங்கப்பூர்), மவுண்ட்ஃபோர்ட் கேர் ஆகிய அமைப்புகளும் அவற்றில் உள்ளடங்கும். இந்த அமைப்புகள் அதிபர் சவால் ஆயுள் ஆற்றல் நிதி என்ற ஒரு நிதியின் கீழ் உதவி பெறுகின்றன.
இந்த நிதி, தேர்ச்சி மேம்பாடு, வேலை நியமனம் ஆகியவற்றுக்கான செயல்திட்டங்களுக்கு நிதியுதவி அளிக்கிறது.
ஆயுள் ஆற்றல் நிதிக்கு நான்கு ஆண்டுகளில் $21 மில்லியனுக்கும் மேம்பட்ட தொகை திரண்டு இருக்கிறது.
ஓராண்டுக்கு முன்பே அதன் நிதித் திரட்டு இலக்கு நிறைவேற்றப்பட்டு இருக்கிறது என்று அதிபர் ஹலிமா யாக்கோப் நேற்று தெரிவித்தார்.
இந்தத் திட்டம் ஐந்தாண்டுகளுக்குப் பிறகும் நீட்டிக்கப்பட்டு 32 செயல்திட்டங்களுக்கு ஆதரவு அளிக்கிறது.
தெலுக் பிளாங்காவில் உள்ள மவுண்ட்ஃபோர்ட் கேர் அமைப்பில் நேற்று அதிபர் சவால் நிதி 2023 தொடங்கப்பட்டது. அதில் உரையாற்றிய அதிபர் இந்த விவரங்களைத் தெரிவித்தார்.
பராமரிப்புச் சேவை வழங்குவோர் மீது அக்கறை காட்டுவதிலும் பராமரிப்பாளர்களுக்கு உதவும் அமைப்புகள் அமல்படுத்தும் செயல்திட்டங்களுக்கு நிதி உதவி அளிப்பதிலும் இந்த ஆண்டில் ஒருமித்த கவனம் செலுத்தப்படும்.
அதிபர் சவால் நிதி என்பது ஆண்டுதோறும் நடக்கும் சமூக நிதி திரட்டும் இயக்கமாகும். அந்த நிதி மூலம் பயனடைவோரை ஆண்டுதோறும் அதிபர் அலுவலகம் தேர்ந்தெடுக்கும்.
பராமரிப்புச் சேவை வழங்கும் பொறுப்புகளைச் சுமக்கும் ஊழியர்களுக்கு நீக்குப்போக்கான வேலை ஏற்பாடுகளை அமல்படுத்தும்படி முதலாளிகளை அதிபர் கேட்டுக்கொண்டார்.