தென்கொரியாவின் புதிய அதிபரான லீ ஜே மியூங்கிற்கு அதிபர் தர்மன் சண்முகரத்னமும் பிரதமர் லாரன்ஸ் வோங்கும் வியாழக்கிழமை (ஜூன் 5) தங்கள் வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொண்டனர்.
செவ்வாய்க்கிழமை (ஜூன் 3) நடைபெற்ற தேர்தலில் திரு லீ அதிக வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார்.
சிங்கப்பூருக்கும் தென்கொரியாவுக்கும் இடையே வலுவான பொருளியல் உறவு இருப்பதாக அதிபர் தர்மன் தமது கடிதத்தில் தெரிவித்துள்ள்ஆர்.
அதுமட்டுமல்லாது, இருநாட்டு மக்களிடையே நட்புறவும் வலுவாக இருப்பதை அவர் சுட்டியுள்ளார்.
சிங்கப்பூருக்கும் தென்கொரியாவுக்கும் இடையிலான அரசதந்திர உறவு தொடங்கி இவ்வாண்டுடன் 50 ஆண்டுகளாகிவிட்டதாக அதிபர் தர்மன் குறிப்பிட்டுள்ளார்.
திரு லீயின் தலைமையின்கீழ் இருநாடுகளுக்கும் இடையிலான நெருக்கமான உறவு தொடர்ந்து வலுவடையும் எனத் தாம் நம்பிக்கை கொண்டுள்ளதாகவும் அவர் கூறியிருக்கிறார்.
அத்துடன், சிங்கப்பூருக்கு வருகை அளிக்குமாறும் அதிபர் லீக்கு அதிபர் தர்மன் அழைப்பு விடுத்துள்ளார்.
இதனிடையே, சிங்கப்பூருக்கும் தென்கொரியாவுக்கும் இடையே பலதுறைகளில் வலுவான ஒத்துழைப்பு இருப்பதைப் பிரதமர் லாரன்ஸ் வோங் சுட்டிக்காட்டியுள்ளார்.
தொடர்புடைய செய்திகள்
மின்னிலக்கப் பொருளியல், எரிசக்தி மற்றும் நீடித்த நிலைத்தன்மை, செயற்கை நுண்ணறிவு, உணவுப் பாதுகாப்பு போன்ற புதிய, வளர்ந்து வரும் துறைகளில் இருநாடுகளும் இணைந்து செயல்படுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
வட்டார, அனைத்துலக விவகாரங்கள் பலவற்றில் இருநாடுகளும் ஒத்த கருத்துகளைக் கொண்டுள்ளதாகப் பிரதமர் வோங் தெரிவித்தார்.
கொரியத் தீபகற்பத்தில் அமைதி நிலவுவதன் முக்கியத்துவமும் அதில் அடங்கும் என்றார் அவர்.
அதுமட்டுமல்லாது, வெளிப்படையான, விதிமுறைகளுக்கு உட்பட்ட அனைத்துலக வர்த்தக முறைக்கு இருநாடுகளும் முக்கியத்துவம் கொடுப்பதாகப் பிரதமர் வோங் கூறினார்.
இவ்வாண்டு ஆசிய பசிபிக் பொருளியல் ஒத்துழைப்பு (ஏபெக்) பொருளியல் தலைவர்களின் கூட்டத்தில் கலந்துகொள்ள தென்கொரியாவுக்குப் பயணம் மேற்கொள்ள இருப்பதாகத் திரு வோங் தெரிவித்துள்ளார்.
அங்கு அதிபர் லீயைச் சந்தித்து சிங்கப்பூர்-தென்கொரிய உத்திபூர்வப் பங்காளித்துவத்தை இணைந்து தொடங்கிவைக்க ஆவலுடன் காத்திருப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.

