இவ்வாண்டிற்கான வரவுசெலவுத் திட்டத்திற்கு அதிபர் தர்மன் சண்முகரத்னம் ஒப்புதல் அளித்துள்ளார்.
இதுகுறித்து அவர் தமது ஃபேஸ்புக் பக்கத்தில் புதன்கிழமை (மார்ச் 19) பதிவிட்டார்.
தொலைநோக்குப் பார்வைப் பழக்கத்தை சிங்கப்பூர் இழந்துவிடக்கூடாது என்று தமது பதிவில் அதிபர் தர்மன் வலியுறுத்தியுள்ளார்.
வாழ்க்கைச் செலவினம் போன்ற தற்போதைய பிரச்சினைகளைச் சமாளித்து வரும் நிலையிலும் எதிர்காலத்தைப் பற்றிய திட்டங்களைக் கைவிட்டுவிடக்கூடாது என்று அவர் தெரிவித்துள்ளார்.
எதிர்காலத்தில் எழக்கூடிய பிரச்சினைகளிலிருந்து சிங்கப்பூரர்கள் தங்களைப் பாதுகாத்துக்கொள்ள வேண்டும் என்றும் சிங்கப்பூரர்களின் நலன் காக்க வாய்ப்புகளை உருவாக்க வேண்டும் என்றும் அதிபர் தர்மன் கூறியுள்ளார்.
பொருளியல் மற்றும் புவிசார் அரசியல் இடையூறுகள் எதிர்பார்க்கப்படுவதாக அவர் தெரிவித்துள்ளார்.
கொவிட்-19 நெருக்கடிநிலையை ஒரு கசப்பான கனவாக எண்ணி அதை மறந்துவிட மக்கள் விரும்பும் அதே சமயம், இன்னொரு தொற்றுநோயால் நெருக்கடிநிலை ஏற்படும் நிலை எதிர்பார்த்ததைவிட விரைவில் நிகழக்கூடும் என்று திரு தர்மன் எச்சரித்துள்ளார்.
அப்படி ஒரு நிலை ஏற்பட்டால், அது கொவிட்-19 நெருக்கடிநிலையைவிட மோசமானதாக இருக்கக்கூடும் என்று விஞ்ஞானிகள் எச்சரிக்கை விடுத்திருப்பதை அவர் நினைவூட்டி இருக்கிறார்.
தொடர்புடைய செய்திகள்
இது ஒருபுறம் இருக்க, பருவநிலை மாற்றம் அபாயகரமான நிலையை எட்டியிருப்பதை அதிபர் தர்மன் சுட்டினார்.
கடல்மட்ட உயர்வு, பல உயிரினங்களின் அழிவு ஆகியவை குறித்து அவர் கவலை தெரிவித்தார்.
இருப்பினும், இந்தச் சவால்கள் குறித்து அளவுக்கு அதிகமாக யோசிக்கத் தேவையில்லை என்றார் அதிபர் தர்மன்.
இப்பிரச்சினைகளை எதிர்கொள்ள சிங்கப்பூர் தயாராக இருக்கிறது என்றும் அவர் குறிப்பிட்டார்.
கடந்த பல ஆண்டுகளாக வரவுசெலவுத் திட்டம் தொடர்பாகவும் நாட்டின் காப்புநிதியைப் பாதுகாப்பது தொடர்பாகவும் அரசாங்கம் கடைப்பிடித்து வரும் அணுகுமுறை மிகவும் பழமையானது என்று பலருக்குத் தோன்றியிருக்கலாம் என்றார் அதிபர் தர்மன்.
ஆனால், இந்த அணுகுமுறைதான் நிச்சயமற்ற எதிர்காலத்தைச் சமாளிக்க சிங்கப்பூருக்கும் சிங்கப்பூரர்களுக்கும் பேருதவியாக இருக்கும் என்றார் அவர்.

