உலகின் தெற்குப் பகுதியில் இருக்கும் நாடுகளில் நிலவும் வேலையில்லாத் திண்டாட்டத்தைக் கையாள்வது குறித்து ஆலோசனை வழங்க புதிய ஆலோசனை மன்றத்தை உலக வங்கி உருவாக்கியது.
அந்தப் புதிய ஆலோசனை மன்றத்தின் இணைத் தலைவராக சிங்கப்பூர் அதிபர் தர்மன் சண்முகரத்னம் பணியாற்றவிருக்கிறார்.
அதிபர் தர்மனுடன் இணைந்து சிலியின் முன்னாள் அதிபர் மிஷெல் பேச்சேலேயும் ஈராண்டுக் காலம் உலக வங்கியின் வேலைக்கான ஆலோசனை மன்றத்தின் இணைத் தலைவராக இருப்பார்.
இந்தப் பதவியில் அதிபர் தர்மன் தனிப்பட்ட முறையில் பணியாற்றுவார் என்றும் நாட்டின் நலன்கருதி இந்தப் பதவியை ஏற்றுகொள்ளும்படி அமைச்சரவை அதிபர் தர்மனுக்கு ஆலோசனை வழங்கியது என்றும் இஸ்தானா ஆகஸ்ட் 12ஆம் தேதி வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவித்தது.
“எந்தவொரு தனிநபருக்கும் அவர்களின் வெற்றிக்கான மிகவும் அர்த்தமுள்ள அளவுகோலாக இருப்பது அவர்களுக்குக் கிடைக்கும் வேலை. உங்களுக்கும் உங்கள் குடும்பத்திற்கும் பெருமை, கௌரவம் ஆகியவற்றை அந்த வேலை உருவாக்கித் தரும்,” என்று உலக வங்கிக் குழுமத்தின் தலைவர் அஜய் பங்கா கூறினார்.
“உலகின் அனைத்து மூலைகளிலும் வேலை வாய்ப்புகளை உருவாக்கும் நோக்கில் வளர்ச்சி உத்திகளை அமைப்பதற்காக நாங்கள் இந்தப் புதிய மன்றத்தைத் தொடங்குகிறோம்,” என்றும் அவர் தெரிவித்தார்.
உலகின் தெற்குப் பகுதியில் இருக்கும் வளர்ந்துவரும் நாடுகளில் இருக்கும் கிட்டத்தட்ட 1.2 பில்லியன் இளையர்கள் அடுத்த 10 ஆண்டுகளில் பணிக்குச் செல்லும் வயதை அடைவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
அந்தக் காலகட்டத்தில் வேலை சந்தையில் 420 மில்லியன் வேலைகள் உருவாக்கப்படும் என்றும் கிட்டத்தட்ட 800 மில்லியன் இளையர்கள் தெளிவான வாழ்க்கைத் தொழில் பாதையைத் தேர்ந்தெடுக்க முடியாமல் சிரமத்திற்கு உள்ளாவர் என்றும் முன்னுரைக்கப்படுகிறது.
தொடர்புடைய செய்திகள்
அரசாங்கம், வர்த்தகங்கள், கல்வி நிலையங்களின் நிபுணர்கள் புதிய ஆலோசனை மன்றத்தில் இடம்பெறுவர்.
அவர்கள் அனைவரும் இணைந்து சிறந்த தலைமையையும் பெரிய அளவிலான வேலை வாய்ப்புகளை உருவாக்குவதற்கான உத்திகளையும் வழங்குவர்.
“நல்ல வேலை கிடைக்க வேண்டும் என்பது எல்லோருடைய ஆசையாக இருக்கிறது. ஆனால், வேகமாக முன்னேறும் தொழில்நுட்பங்கள், புவிசார் பொருளியலின் நிச்சயமற்ற தன்மை, காலநிலை மாற்றத்தின் அச்சுறுத்தல்களை எதிர்கொள்வது ஆகியவை வளர்ந்துவரும் சவால்களாக இருக்கின்றன,” எனத் திரு தர்மன் கூறினார்.
“நிலையான வேலைகள், வருமான வளர்ச்சி ஆகியவற்றை அடைய வளர்ந்துவரும் இளையர் சமூகத்திடம் புதிய உத்திகள் தேவை. அவை உலகப் பொருளியலுக்கும் அனுகூலத்தைத் தரும்,” என்றார் அதிபர் தர்மன்.