அமெரிக்க அதிபர் தேர்தலில் வெற்றி பெற்று அந்நாட்டின் 47வது அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள டோனல்ட் டிரம்ப்புக்கு அதிபர் தர்மன் சண்முகரத்னம் தமது வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொண்டார்.
பாதிப்புகளிலிருந்து மீண்டு வரும் நாட்டுக்கும் பிளவுகள் இருந்தாலும் பொதுவான இலக்கை மீண்டும் அடையாளம் காணும் தேவையைக் கொண்ட நாட்டு மக்களுக்கும் திரு டிரம்ப் தலைமை தாங்குவார் என்று நவம்பர் 6ஆம் தேதியன்று அதிபர் தர்மன் ஃபேஸ்புக்கில் பதிவிட்டார்.
இந்தச் சவால்களுக்கு மிக எளிதில், விரைவில் தீர்வு காணப்படும் என்று யாரும் எதிர்பார்க்க முடியாது என்று அதிபர் தர்மன் குறிப்பிட்டார்.
“ஒவ்வோர் அமெரிக்கருக்காகவும் அவர்களது குடும்பங்களுக்காகவும் அவர்களது எதிர்காலத்துக்காகவும் மிகக் கடுமையாகப் பாடுபடப்போவதாக தேர்தலில் வெற்றி பெற்ற பிறகு உரையாற்றியபோது அதிபர் டிரம்ப் உறுதி அளித்தார்.
“சிங்கப்பூருக்கும் அமெரிக்காவுக்கும் இடையிலான உறவு மிகவும் ஆழமானது, வலுவானது. அதிபர் டிரம்ப்புடனும் அவரது அமைச்சர்களுடனும் இணைந்து செயல்பட சிங்கப்பூர் ஆர்வத்துடன் காத்துக்கொண்டிருக்கிறது,” என்று அதிபர் தர்மன் தெரிவித்தார்.

