சிங்கப்பூரில் வெவ்வேறு இனங்களின் சோறு வகைகளை எவ்வாறு அனைவரும் உண்டு மகிழ்கிறோமோ அதேபோல சிங்கப்பூரின் பல கலாசாரங்களின் மரபுடைமையை வெவ்வேறு பின்னணியிலிருந்து வருவோர் அனுபவித்து மகிழ்கின்றனர் என்று அதிபர் தர்மன் சண்முகரத்னம் கூறியுள்ளார்.
நோன்புப் பெருநாளை முன்னிட்டு சமூக ஊடகத்தில் வாழ்த்துகளைப் பதிவிட்ட அதிபர் தர்மன், நாசி லெமாக், சிக்கன் ரைஸ், பிரியாணி ஆகிய பல இனத்தவரின் சோறு வகைகளைப் பட்டியலிட்டார்.
இவை அனைத்தையும்விட அண்மையில் தம்மை வெகுவாகக் கவர்ந்தது நாசி உலாம் என்ற ஒருவகை சோறு என்றார் அதிபர் தர்மன். “காய்கறிகள், உண்ணக்கூடிய பூக்கள், சில வகை மூலிகைகள் ஆகியவற்றை ஒன்றாகச் சோற்றில் கலப்பதுதான் நாசி உலாம்,” என்றார் அவர்.
தேசியப் பாதுகாப்புக்கான ஒருங்கிணைப்பு அமைச்சருமான கா. சண்முகம், சிங்கப்பூர், சமூக ஒற்றுமையால் ஏற்படும் அமைதிக்கான ஓர் இடம் என்று குறிப்பிட்டார்.
நமது பண்டிகைகள் அனைத்தையும் நண்பர்களுடனும் பிற சமூகத்தினர், சமயத்தினர் ஆகியோருடனும் ஒன்றாகக் கொண்டாடக்கூடிய நிலைமைக்கு நாம் நன்றியுள்ளவர்களாக இருக்கவேண்டும் என்று திரு சண்முகம் வலியுறுத்தினார்.
முஸ்லிம் விவகாரங்களுக்குப் பொறுப்பு வகிக்கும் தற்காலிக அமைச்சர் ஃபைஷால் இப்ராஹிம், திரு சண்முகத்தின் கருத்தை வழிமொழிந்தார்.
சனிக்கிழமை (மார்ச் 21) காலை சுல்தான் பள்ளிவாசலின் நோன்புப் பெருநாள் கொண்டாட்டத்தில் கலந்துகொண்ட இணைப் பேராசிரியர் ஃபைஷால், உலக அளவில் நிலவும் நிச்சயமற்ற சூழலையும் நிகழ்வுகளையும் பார்க்கும்போது சிங்கப்பூரில் நாம் அனுபவிக்கும் அமைதிக்கும் நல்லிணக்கத்துக்கும் இங்குள்ள முஸ்லிம் சமூகம் நன்றி உணர்வுடன் இருக்கிறது என்றார்.
சிங்கப்பூரில் உள்ள எதிர்காலத் தலைமுறைகளும் இப்போது அனுபவிக்கும் அமைதியையும் நல்லிணக்கத்தையும் கட்டிக்காக்கும் என்று நம்புவதாகத் திரு ஃபைஷால் கூறினார்.
தொடர்புடைய செய்திகள்
வெளிநாடுகளில் உள்ள நிலவரம் இப்போது சாதகமாக இல்லாததைக் குறிப்பிட்ட அவர், வீட்டைவிட்டு வெவ்வேறு இடங்களில் நோன்புப் பெருநாளைக் கொண்டாடுவோரையும் சிங்கப்பூரில் உள்ள முஸ்லிம் சமூகம் நினைவுகூர்வதாகக் குறிப்பிட்டார்.

