இந்தியாவின் 80வது சுதந்திர தினத்தை முன்னிட்டு அதிபர் தர்மன் வாழ்த்து

இந்தியாவின் 80வது சுதந்திர தினத்தை முன்னிட்டு அதிபர் தர்மன் வாழ்த்து

1 mins read
66e10754-0f72-4798-8904-44019233244f
சிங்கப்பூருக்கும் இந்தியாவுக்கும் இடையே நெருங்கிய மக்கள் தொடர்புடன் கூடிய வலுவான, எதிர்கால நோக்குடைய விரிவான உத்திபூர்வக் கூட்டணி நிலவுவதாக அதிபர் தர்மன் தமது வாழ்த்துக் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார். - கோப்புப் படம்: சாவ்பாவ்
Google News Preferred Icon

அதிபர் தர்மன் சண்முகரத்னம், இந்தியாவின் 80வது சுதந்திர தினத்தை முன்னிட்டு அந்நாட்டு அதிபர் திரௌபதி முர்முவுக்கு வாழ்த்துக் கடிதம் அனுப்பியுள்ளார்.

சனிக்கிழமை (ஆகஸ்ட் 15) எழுதிய அக்கடிதத்தில், இரு நாடுகளுக்கும் இடையே நெருங்கிய மக்கள் தொடர்புடன் கூடிய வலுவான, எதிர்கால நோக்குடைய விரிவான உத்திபூர்வக் கூட்டணி நிலவுவதாகத் திரு தர்மன் குறிப்பிட்டுள்ளார்.

திறன் மேம்பாடு, மின்னிலக்கமயமாதல், நீடித்த நிலைத்தன்மை, அதிநவீன உற்பத்தி உள்ளிட்ட புதிய துறைகளில் இருதரப்பு ஒத்துழைப்பு விரிவடைந்து வருகிறது. இரு நாடுகளின் வலிமைகளைப் பயன்படுத்தி, மக்களின் நன்மைக்கான புதிய வாய்ப்புகளைத் தொடர்ந்து அடையாளம் காண்பது தொடர்பான நம்பிக்கையை அதிபர் தர்மன் வெளிப்படுத்தியுள்ளார்.

ஆசியானின் ஆகப் பழைமையான உரையாடல் பங்காளிகளில் ஒன்றான இந்தியாவுடன் இணைந்து, வர்த்தகம், மின்னிலக்கப் பொருளியல், எரிசக்திப் பாதுகாப்பு, ஆற்றல் நிலைமாற்றம் ஆகியவற்றில் வட்டார ஒருங்கிணைப்பையும் மீள்திறனையும் வலுப்படுத்தச் சிங்கப்பூர் நெருக்கமாகப் பணியாற்றும் என்றும் அவர் உறுதியளித்துள்ளார்.

அதிபர் முர்மு தொடர்ந்து உடல்நலத்துடனும் மனநிறைவுடனும் வாழத் தமது நல்வாழ்த்துகளைப் பகிர்ந்துகொண்ட அதிபர் தர்மன், இந்திய மக்களுக்குப் பொலிவான எதிர்காலமும் நீடித்த வளப்பமும் கிடைக்க வாழ்த்தினார்.

சிங்கப்பூரும் இந்தியாவும் 60 ஆண்டுகால இருதரப்புத் தூதரக உறவை 2025ஆம் ஆண்டில் கொண்டாடியது குறிப்பிடத்தக்கது.

குறிப்புச் சொற்கள்