‘தொடுவானம் நோக்கி!’ எனும் கருப்பொருளையொட்டிய தங்கள் கண்ணோட்டங்களைத் தேசிய தினத் தொகுப்புப் பைகளுக்கான ஓவியங்களாக உருவாக்கிய சிறப்புத் தேவையுடைய கலைஞர்களுடன் கலந்துரையாடினார் அதிபர் தர்மன் சண்முகரத்னம்.
அவர்களின் ஓவியங்கள், முழுமைத் தற்காப்பில் தொடங்கி, நமது எதிர்காலம், நமது ஒன்றிணைந்த நினைவுகள், ஒன்றிணைந்த பயணம், நம் மக்கள், தொடுவானம் நோக்கி ஆகிய தலைப்புகளில் தொகுக்கப்பட்டு பைகளில் அச்சிடப்பட்டுள்ளன.
தேசிய விளையாட்டு அரங்கில் செவ்வாய்க்கிழமை (ஜூன் 30) நடைபெற்ற நிகழ்ச்சியில், கலைப்படைப்புகளை உருவாக்கிய 36 சிறப்புத் தேவையுடைய கலைஞர்கள், அவர்களின் குடும்பத்தினர், பராமரிப்பாளர்களுடன் அதிபர் தர்மன் கலந்துரையாடினார்.
தேசிய தின அணிவகுப்புச் செயற்குழு, ‘எஸ்ஜி எனேபல்’ அமைப்புடன் இணைந்து சிறப்புத் தேவையுடையோரை ஒன்றிணைத்து தேசிய தினத் தொகுப்புக்கான கலைப்படைப்புகளை ஆண்டுதோறும் வடிவமைத்து வருகிறது.
இவ்வாண்டு சிறப்புக் கல்விப் பள்ளிகள், சமூகச் சேவை அமைப்புகள், ஆரம்பகாலத் தலையீட்டு மையங்களைச் சேர்ந்த கலைஞர்கள் இப்படைப்புகளை உருவாக்கும் பணிகளில் ஈடுபட்டிருந்தனர்.
ஆறு முதல் 65 வயது வரையுள்ள சிறப்புத் தேவையுடையோர் இணைந்து இவற்றை வடிவமைத்தனர். முதன்முறையாக இவ்வாண்டு ஆரம்பகாலத் தலையீட்டு மையங்களைச் சேர்ந்த கலைஞர்களின் ஓவியங்கள் இதில் இடம்பெற்றுள்ளன.
மேலும், சிறப்புத் தேவையுடையோருக்கான பள்ளிகளைச் சேர்ந்த 21 பேர், சமூக சேவை அமைப்புகளைச் சேர்ந்த ஒன்பது பேர் உள்ளிட்ட 36 பேரின் படைப்புகளை இணைத்து இவை உருவாக்கப்பட்டன.
கலைஞர்கள் தங்களது படைப்புகளையும் அவற்றுக்குப் பின்னால் உள்ள எண்ணங்கள், சிந்தனைகளையும் அதிபரிடம் காட்டி விளக்கினர். அவர்களிடம் தம் வாழ்த்துகளைத் தெரிவித்த அதிபர் தர்மன், அவற்றை உருவாக்கிய மாணவர்களின் அனுபவங்களைக் கேட்டறிந்தார்.
கலைஞர்களின் சிந்தனைகள், நம்பிக்கைகள், இலக்கு உள்ளிட்டவற்றைக் காட்டும் ஓவியங்களுடன் அவர்கள் கைப்பட எழுதிய சில வாழ்த்துச் செய்திகள், வாக்கியங்கள் இணைக்கப்பட்டு கைப்பைகளில் அச்சிடப்பட்டுள்ளன. பல்வேறு படைப்புகளை உள்ளடக்கிய மொத்தம் ஆறு விதமான பைகள் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தன.
இதில், ‘நமது ஒன்றிணைந்த பயணம்’ எனும் தலைப்பில் மாணவர் ஷர்வின் சிவகுமாரின் ஓவியங்கள் இடம்பெற்றன.
“நான் சிங்கப்பூரில் அன்றாடம் காணும் போக்குவரத்து, ஆர்க்கிட் மலர்கள் ஆகியவற்றைப் பயன்படுத்தி ஓவியங்களை உருவாக்கினேன். பயிலரங்கில் இதனை வரைந்தபோது சிங்கப்பூரின் தனித்துவத்தை நினைவுகூர்ந்து மகிழ்ந்தேன்,” என்றார் ஷர்வின், 15.
தமது ஓவியங்களைக் கொண்ட பைகளைப் பல சிங்கப்பூரர்கள் பார்ப்பதும், பயன்படுத்துவதும் தமக்கு மகிழ்ச்சியளிப்பதாகவும், அது பார்ப்போருக்கு நம்பிக்கையளிக்கும் வகையில் அமையுமெனக் கருதுவதாகவும் அவர் சொன்னார்.
கற்றல் குறைபாடுள்ள தம் மகனுக்கு ஓவியக்கலையில் ஆர்வம் உள்ளதைக் கண்டறிந்து, அதற்கேற்ற வகுப்புகளில் சேர்த்துள்ளதாகக் குறிப்பிட்ட ஷர்வினின் தந்தை சிவகுமார் டி ஆண்டி, “அவரது ஓவியங்கள் பலவும் பெருவிரைவு ரயில்கள், தேசிய தினத் தொகுப்புகளில் இடம்பெறுவது பெருமையானது,” என்றார்.
தேசிய தினத்தின் தொகுப்புப் பைகளைப் பலரும் எதிர்பார்ப்பதைச் சுட்டிய ‘எஸ்ஜி எனேபல்’ தலைமை நிர்வாக அதிகாரி லீ மே கீ, “இந்த முன்னெடுப்பு, அனைவரையும் உள்ளடக்கிய சிங்கப்பூரில், ஒவ்வொருவரது குரலும் முக்கியம் என்ற கருத்தை வெளிப்படுத்துகிறது,” என்றார்.
“தேசிய தின நிகழ்ச்சிகளில் பங்குபெறும் ஏறத்தாழ 240,000 பேருக்கு இந்தத் தொகுப்பு வழங்கப்படும். இது கலைஞர்களின் திறமைகளைக் கண்டறியவும் பாராட்டவும் சிங்கப்பூரர்களுக்கு வாய்ப்பளிக்கிறது. மேலும், நமது பயணத்தை வடிவமைப்பதில் ஒவ்வொருவருக்கும் பங்குண்டு என்பதை இது உணர்த்துகிறது,” என்றார் 2026 தேசிய தின அணிவகுப்புத் தொகுப்புக் குழுத் தலைவர் லெஃப்டினண்ட் கர்னல் சோங் குவான் டாட்.

