போப் மனித சகோதரத்துவம், சுற்றுச்சூழல் நிலைத்தன்மை ஆகியவற்றின் முதன்மைக் குரலாகத் திகழ்ந்துவருவதாகக் குறிப்பிட்ட அதிபர் தர்மன் சண்முகரத்னம், இந்த அம்சங்கள் குறித்து தென்கிழக்காசியப் பயணத்தின்போது வாஞ்சையோடு பேசியதைச் சுட்டினார்.
மேற்கூறிய இரண்டு அம்சங்களும் இன்றைய உலகின் முக்கியமான சவால்கள் என்றும் உலகச் சமூகங்களுக்கு இடையே சகிப்புத்தன்மை அற்ற நிலை வளர்ந்து வருகிறது என்றும் அக்கறை தெரிவித்த அதிபர் தர்மன், மறுபுறம் வேகமெடுக்கும் பருவநிலை மாற்றம் உலகின் மனிதர்களுக்கான பாதுகாப்பை குறைத்துவிடுவதாகவும் குறிப்பிட்டார்.
சிங்கப்பூர் தேசிய பல்கலைக்கழகத்தின் கலாசார நிலையத்திற்கு வியாழக்கிழமை (செப்டம்பர் 12) காலை வருகை அளித்த போப் ஃபிரான்சிஸின் முன்னிலையில் திரு தர்மன் உரையாற்றியபோது இந்தக் கருத்துகளை முன்வைத்தார்.
“இதன் தொடர்பில் அனைத்துலகச் சமூகம் இந்தச் சவால்களை கையாளும் வகையில் மிகவும் உறுதியான, ஒளிவுமறைவற்ற, நேரடி முயற்சிகளை மேற்கொள்வது அவசியம்,” என்று அதிபர் வலியுறுத்தினார்.
சிங்கப்பூருக்கு முதன்முறையாக வருகை தந்துள்ள போப் பிரான்சிசை அகமகிழ வரவேற்பதாகக் கூறிய அதிபர் தர்மன், கத்தோலிக சமயத் தலைவரான போப், சிங்கப்பூருக்கு வருகை அளித்திருப்பது இது இரண்டாவது முறை என்றும் அவர் கூறினார்.
போருக்கு எதிராக வலுவாகக் குரல் கொடுத்துவரும் போப் ஃபிரான்சிஸ், வெவ்வேறு சமயங்களுக்கும் குழுக்களுக்கும் இடையே நல்லிணக்கத்தையும் கலந்துரையாடலையும் தொடர்ந்து கேட்டுவருவதாகத் திரு தர்மன் குறிப்பிட்டார்.
“இது குறித்து நீங்கள் எங்கள் இளையர்களிடம் நாளை பேசுவீர்கள். இது பல சிங்கப்பூரர்களிடம் எதிரொலிக்கும் விவகாரமாக உள்ளது,” என்று அவர் குறிப்பிட்டார்.
பல்வேறு இன, சமய சமூகங்கள் நிம்மதியுடன் ஒன்றாக வாழக்கூடிய நாட்டில் இருப்பதைச் சிங்கப்பூரர்கள் நிம்மதியாக உணர்வதாகத் திரு தரம்பன் குறிப்பிட்டார்.
தொடர்புடைய செய்திகள்
“பன்முகத்தன்மை சிங்கப்பூரில் சகிப்புத்தன்மையைத் தாண்டி அது அரவணைக்கப்பட்டு எங்கள் வாழ்க்கையில் செழுமையைக் கொண்டுவருவதாகக் காணப்படுகிறது. எங்களது நாட்டின் அடையாளத்தை (பன்முகத்தன்மை) உறுதி செய்து சிங்கப்பூரர்கள் என்ற பெருமையை அளிக்கிறது,” என்று அவர் கூறினார்.
இது எதுவுமே இயற்கையாக வந்ததல்ல, மாறாக பல ஆண்டுகளாக நாட்டை கட்டமைக்கும் பணியாக உருவெடுத்தது என்றார் திரு தர்மன். நம் பள்ளிகளிலும் பொதுக்குடியிருப்புகளிலும் இளம் ஆடவர்கள் மேற்கொள்ளும் தேசிய சேவையிலும் இன, சமய நல்லிணக்கத்தை மேம்படுத்த பாடுபட்டோம். சக மாணவர்கள், அண்டை வீட்டார், சக குடிமக்கள் ஆகிய நிலைகளில் சிங்கப்பூரர்கள் இயல்பாக இருப்பதன் விளைவாகவும் இது உள்ளது என்று அவர் கூறினார்.
சிங்கப்பூர் தொடங்கும் ஒன்றிணைந்த சமூகங்களைப் பற்றிய அனைத்துலக மாநாடு சிந்தனைக்குப் பங்களித்து மதிப்புமிக்க பாடங்களைப் பரிமாற முற்படுவதாகவும் அவர் கூறினார். “இதில் வத்திகனின் தொடர் பங்களிப்புக்காக நான் நன்றி கூறுகிறேன்,” என்று அதிபர் கூறினார்.
சுற்றுப்புறத்தின் நீடித்த நிலைத்தன்மைக்காக கத்தோலிக்க தேவாலயத்தைப் பாராட்டிய அதிபர் தர்மன், 2015 பாரிஸ் உடன்பாட்டுக்கு போப் அளித்த ஆதரவு பலரை உற்சாகப்படுத்தியதாகவும் சுட்டினார்.
அனைவரும் பகிரும் நம் பொதுவான இல்லத்திற்கு நாமே பராமரிப்பாளர்களும் காப்பாளர்களாகவும் இருக்கிறோம் என்பதை நீங்கள் எல்லா இடங்களிலும் மக்களை ஊக்குவித்துள்ளீர்கள் என்றார் அதிபர்.