பாரிஸ்: உலகின் ஆகப் பெரிய விளையாட்டுத் திருவிழாவான ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகள் பிரான்ஸ் தலைநகர் பாரிசில் வெள்ளிக்கிழமை (ஜூலை 26) அதிகாரபூர்வமாகத் தொடங்குகின்றன.
33வது முறையாக நடத்தப்படும் கோடைக்கால ஒலிம்பிக் போட்டிகளுக்காக பிரான்ஸ் பாதுகாப்பு ஏற்பாடுகளைப் பலப்படுத்தி இருக்கிறது.
சிங்கப்பூர் நேரப்படி வெள்ளிக்கிழமை பின்னிரவு 1.30 மணியளவில் இடம்பெறும் தொடக்க விழாவை முன்னிட்டு, கிட்டத்தட்ட 45,000 காவல்துறையினரும், ராணுவத்தினரும், தனியார்த்துறைப் பாதுகாவலர்களும் பாதுகாப்புப் பணிகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
இம்முறை சிங்கப்பூரைப் பிரதிநிதித்து நட்சத்திர திடல்தட வீராங்கனை சாந்தி பெரேரா உட்பட 23 விளையாட்டாளர்கள் பதக்கங்களைக் குறிவைத்து பிரான்ஸ் சென்றுள்ளனர்.
இந்நிலையில், அதிகாரபூர்வ பயணமாக பிரான்ஸ் சென்றுள்ள அதிபர் தர்மன் சண்முகரத்னம் தொடக்கவிழாவில் கலந்துகொள்வார். 27, 28ஆம் தேதிகளில் நடக்கும் போட்டிகளின்போது சிங்கப்பூர் விளையாட்டாளர்களுக்கு அவர் ஆதரவு வழங்குவார் என வெளியுறவு அமைச்சு தெரிவித்துள்ளது.
முன்னதாக, புதன்கிழமையன்று (ஜூலை 24) அதிபர் தர்மனும் அவருடைய துணைவியார் ஜேன் இத்தோகியும் பாரிசில் விளையாட்டாளர்களைச் சந்தித்து ஊக்கமளித்தனர்.
இதுபற்றித் தமது சமூக ஊடகப் பக்கங்களில் பதிவிட்டுள்ள அதிபர் தர்மன், “காலைப் பயிற்சிக்குப் பிறகு நம் சிங்கப்பூர் விளையாட்டாளர்களுடன் ஒன்றாக நண்பகல் உணவு அருந்தி மகிழ்ந்தோம். விளையாட்டுமீதான அவர்களின் ஆர்வத்தையும் ஒவ்வொரு நாளும் அவர்களின் பயிற்சி, ஓய்வு குறித்தும் கேட்டறிந்தோம்.
“ஒலிம்பிக்கில் பங்கேற்பவர்கள், வெற்றியாளர்கள் மட்டுமின்றி, நம் விளையாட்டாளர்கள் அனைவரையும் கொண்டாடுவோம்,” என்று குறிப்பிட்டுள்ளார்.
தொடர்புடைய செய்திகள்
பாரிசில் உள்ள சிங்கப்பூர் இல்லத்தில், அங்கு வசிக்கும் சிங்கப்பூர் சமூகத்தினரை அதிபரும் அவருடைய துணைவியாரும் சந்தித்து உரையாடினர்.
ஒலிம்பிக் போட்டிகள் ஆகஸ்ட் 11ஆம் தேதிவரை நடைபெறும்.

