உலகளாவிய நிலையில் பொருளியல் பலவீனமடைந்து வரும் நிலையில், சிங்கப்பூர் அதன் பொருளியல், சமூக மீள்திறனை வலுப்படுத்திக்கொள்ள வேண்டும் என்று அதிபர் தர்மன் சண்முகரத்னம் சனிக்கிழமை (மார்ச் 15) தெரிவித்தார்.
பொருளியல், சமூக மீள்திறனுக்கான ஆற்றலையும் கட்டமைப்புகளையும் சிங்கப்பூர் மேம்படுத்திக்கொள்ள வேண்டும் என்றார் அவர்.
சவால்மிக்க காலகட்டங்களில் வாய்ப்புகளை சிங்கப்பூர் உருவாக்க வேண்டும் என்று அதிபர் தர்மன் வலியுறுயுத்தினார்..
அதிபர் தர்மன், சிங்கப்பூர் சீன வர்த்தக, தொழில் சபையின் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு இதனைத் தெரிவித்தார்.
நீடித்த நிலையின்மை, நிச்சயமற்ற சூழல் ஆகியவற்றை எதிர்கொள்ள சிங்கப்பூர் தன்னைத் தயார்ப்படுத்திக்கொள்ள வேண்டும் என்றார் அவர்.
“பலவீனம் அடையும் பொருளியல் சூழல் குறுகியகாலப் பிரச்சினை கிடையாது. அதன் விளைவாக வளர்ச்சி, அமைதி, நிலைத்தன்மை ஆகியவை தொடர்பாக உலகெங்கும் ஏற்படக்கூடிய சிரமங்களை யாராலும் கணிக்க முடியாது,” என்று திரு தர்மன் கூறினார்.
சிங்கப்பூரின் ஆற்றலை வலுப்படுத்த மும்முனை அணுகுமுறையை அதிபர் தர்மன் கோடிகாட்டினார்.
அவற்றில் ஒன்று ஏற்கெனவே நடப்பில் இருக்கும் மற்றும் புதிய பங்காளித்துவ உறவுகளை வலுப்படுத்துவது.
தொடர்புடைய செய்திகள்
இரண்டாவதாக, நிறுவனங்களின் உயர் திறன்களையும் ஆற்றல்களையும் மேம்படுத்தும் நடவடிக்கைகளை விரைவுபடுத்துதல்.
சமூக உணர்வை வலுபடுத்துவது மூன்றாவது அணுகுமுறையாகும்.
ஆசியான், சீனா, அமெரிக்கா, இந்தியா, ஐரோப்பா போன்ற பொருளியல் பங்காளிகளுடன் சிங்கப்பூர் தனது உறவை வலுப்படுத்துகிறது என்று திரு தர்மன் கூறினார்.
அதுமட்டுமல்லாது, ஆப்பிரிக்கா மற்றும் தென்அமெரிக்காவுடன் உறவுப் பாலத்தை சிங்கப்பூர் அமைத்து வருவதை அவர் சுட்டினார்.
ஜோகூர்-சிங்கப்பூர் சிறப்புப் பொருளியல் மண்டலம் போன்ற இருநாடுகள் இடையிலான திட்டங்கள் மூலம் ஆசியான் நிலையிலும் மேலும் பல இலக்குகளை எட்ட சிங்கப்பூருக்கு வாய்ப்பு இருப்பதாக அதிபர் தர்மன் தெரிவித்தார்.

