சிங்கப்பூரின் முதல் பிரதமர் லீ குவான் யூ இல்லாவிட்டால் இந்நாடு மிகவும் மாறுபட்ட இடமாக இருந்திருக்கும். அதிபர் தர்மன் சண்முகரத்னம், அமரர் லீயைப் பற்றி ஞாயிற்றுக்கிழமை (மார்ச் 23) வெளியிட்ட தமது ஃபேஸ்புக் பதிவில் அவ்வாறு குறிப்பிட்டார்.
“புதிய உற்சாகம், ஆற்றல், துடிப்பு ஆகியவற்றை ஒவ்வொரு தலைமுறையும் தன்னுடன் கொண்டுவருகிறது. மிகச் சிறந்த உலகிலுள்ள மிகச் சிறந்த சமூகம் எப்படி இருக்கவேண்டும் என்ற கண்ணோட்டத்தை ஒவ்வொரு தலைமுறையும் கொண்டிருக்கும். அந்தக் கண்ணோட்டம் அடையப்படாவிட்டாலும் சீர்மை பற்றிய மனிதர்களின் சிந்தனைகளால் சமூகங்கள் முன்னேறுகின்றன,” என்ற திரு லீயின் வாசகத்துடன் திரு தர்மனின் பதிவு தொடங்குகிறது.
சிறிய நாடாகப் பிழைத்து வந்த சிங்கப்பூர், பல்லினச் சமூகமாக உருவெடுத்து உலகில் முன்னேறி வருவதற்கு திரு லீயுடன் அவர் வழிநடத்திய குழு ஒரு காரணம் என்று திரு தர்மன் கூறினார்.
ஒவ்வொரு தலைமுறையும் தனக்குரிய தலைவர்கள், சிந்தனைகள், நோக்கங்கள் ஆகியவற்றைக் கொண்டிருக்கவேண்டும் என்று திரு லீ வலியுறுத்தியதும் மற்றொரு காரணம் என்றும் திரு தர்மன் கூறினார்.
திரு லீயின் நற்பெயருக்கு ஏற்றபடி வாழ்வது என்பது நல்லதோர் எதிர்காலத்தைத் தொடர்ந்து கற்பனை செய்து அதனை நனவாக்குவதாகும் என்றார் அவர்.
1959 முதல் 1990 வரை பிரதமராகச் செயலாற்றிய அமரர் லீ, 2015 மார்ச் 23ல் உயிர் நீத்தார்.