சிங்கப்பூர் செல்லும் ஸ்கூட் மலிவுக் கட்டண விமானத்தில் இருந்த பயணிகள் விமானம் புறப்படுவதற்கு முன்பு கைதட்டி ஆரவாரம் செய்தனர்.
மலேசியாவின் ஈப்போவிலிருந்து சிங்கப்பூர் திரும்பிக் கொண்டிருந்தபோது, சிங்கப்பூர் அதிபர் தர்மன் சண்முகரத்னம், தங்களுடன் விமானத்தில் இருப்பதை அவர்கள் உணர்ந்த பிறகு அவர்கள் அவ்வாறு செய்தனர். திரு தர்மன் எழுந்து நின்று அனைவரையும் நோக்கி கையசைத்தார்.
பேராக் தலைநகர் ஈப்போவுக்கு இரண்டு நாள் அலுவல் பயணத்தை முடித்துக்கொண்டு அதிபர் தர்மன் ஆகஸ்ட் 26ஆம் தேதி, ஈப்போ சுல்தான் அஸ்லான் ஷா விமான நிலையத்திலிருந்து மாலை 5.25 மணிக்கு சிங்கப்பூர் திரும்பிச் சென்றதாக சின் சியூ டெய்லி செய்தி வெளியிட்டுள்ளது.
பயணிகள் விமானத்தில் ஏறும்போது, விமானத்தின் அருகில் நிறுத்தப்பட்டிருந்த ஒரு முக்கிய பிரமுகருக்கான வாகனத்தைக் கண்டதாகக் கூறப்பட்டது.
அதிபர் தர்மன்தான் கடைசியாக ஏறி, முன் வரிசையில் அமர்ந்தார்.
அவரைப் பார்த்தவுடன் சக பயணிகள் இன்ப அதிர்ச்சிக்குள்ளாயினர். அவர்கள் தங்கள் கைப்பேசிகளை எடுத்து காட்சியைப் பதிவு செய்தனர்.
விமானத்தின் பின்புறத்தில் இருந்த பயணிகள் கைதட்டுவதைக் கேட்டதும், அதிபர் பணிவுடன் எழுந்து நின்று, திரும்பி, கையசைத்தார்.
ஆகஸ்ட் 25 பிற்பகல் அதிபர் தர்மன் ஸ்கூட் விமானத்தில் ஈப்போவிற்கு வந்ததாகவும், அவர் விமானத்தில் இருந்து இறங்கியவுடன், விமானத்தில் ஏறக் காத்திருந்த பயணிகளால் அடையாளம் காணப்பட்டதாகவும் சின் சியூ டெய்லி மேலும் செய்தி வெளியிட்டுள்ளது.
தொடர்புடைய செய்திகள்
திரு தர்மன் மற்றும் அவரது மனைவி ஜேன் இத்தோகியை செவ்வாய்க்கிழமை பேராக் சுல்தான் நஸ்ரின் ஷா வரவேற்றார்.