தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

அதிபர் தர்மன்: கலாசாரப் பன்முகத்தன்மை தொடரவேண்டும்

2 mins read
9b519175-caa9-4ba6-bbea-b127bb8edce5
சிங்கப்பூர் இந்திய நுண்கலைக் கழகத்தின் 75ஆம் நிறைவு ஆண்டைக் கொண்டாடும் விருந்து நிகழ்ச்சியில் அதிபர் தர்மன் சண்முகரத்னம், கழகத் தலைவர் கே.வி. ராவிடமிருந்து வண்ண ஓவியம் ஒன்றை அன்பளிப்பாகப் பெறுகிறார். - படம்: த.கவி

கலாசாரப் பன்முகத்தன்மை தொடர்பில் இதுவரை சிறந்து விளங்கும் சிங்கப்பூர், இனியும் அதற்கான நோக்கத்தில் தொடர்ந்து கடப்பாடு கொண்டிருக்கவேண்டும் என அதிபர் தர்மன் சண்முகரத்னம் தெரிவித்துள்ளார்.

சிங்கப்பூர் இந்திய நுண்கலைக் கழகத்தின் (சிஃபாஸ்) 75வது ஆண்டு நிறைவு விழாவில் சனிக்கிழமையன்று (மார்ச் 8) கலந்துகொண்டு சிறப்பித்த அதிபர், சிங்கப்பூர் பெருமையாகக் கொண்டாடும் கழகத்தின் அதிபர்களாகச் செயலாற்றியோருக்கும் தொண்டு ஆற்றிய அனைவருக்கும் நன்றி நவின்றார்.

இந்திய கலை, கலாசாரத்திற்கு உரிய பன்முகத்தன்மையைக் கட்டிக்காக்க அது அதிகம் பங்காற்றி உள்ளதாகத் தெரிவித்தார்.

“(சிஃபாஸ் தலைவர்) கே.வி. ராவ் என்னிடம் இதுபற்றி வாட்ஸ்அப் செயலி வழியாகக் கேட்டபோது தயக்கமின்றி நான் உடனே ஒப்புக்கொண்டேன்,” என்று திரு தர்மன் கூறினார்.

சிங்கப்பூர் இந்திய நுண்கலைக் கழகத்திற்குப் பங்களித்த கலை ஆர்வலர்களுக்கும் தொண்டர்களுக்கும் நன்றி நவின்ற அதிபர் தர்மன் சண்முகரத்னத்துடன் கழகத்தின் தலைவர் கே. வி. ராவ் (இடது).
சிங்கப்பூர் இந்திய நுண்கலைக் கழகத்திற்குப் பங்களித்த கலை ஆர்வலர்களுக்கும் தொண்டர்களுக்கும் நன்றி நவின்ற அதிபர் தர்மன் சண்முகரத்னத்துடன் கழகத்தின் தலைவர் கே. வி. ராவ் (இடது). - படம்: த.கவி

சிங்கப்பூரின் வருங்கால கலைச்சூழல் குறித்த தம் ஆசைகளையும் அதிபர் தர்மன் வெளிப்படுத்தினார். இந்திய கலை நிகழ்ச்சிகளுக்கு வரும் பார்வையாளர்களில் மூன்றில் ஒருவர் இந்தியர் அல்லாதவராக இருக்கும் அளவுக்குக் கலாரசனை சமூகத்தில் பரவவேண்டும் என்பதே அவரின் விருப்பம்.

சிஃபாசின் 75வது ஆண்டு நிறைவைக் கொண்டாடும் நேரத்தில், கலாசாரப் பன்முகத்தன்மை என்ற பயணத்தின்மீது தொடர்ந்து கடப்பாடு காட்ட வேண்டும் என்று அவர் கூறினார்.

“மேற்கத்திய நடனங்களான ஃபிளமென்கோவும் பேலேயும் எப்படி ஒன்றோடு ஒன்று குழப்பப்படுவதில்லையோ அதேபோல் ஒருநாள் பரதநாட்டியத்தையும் குச்சிப்புடியையும் சிங்கப்பூரர்கள் வேறுபடுத்தி இனம் காண இயலும்,” என்று திரு தர்மன் கூறினார்.

சிங்கப்பூர் நுண்கலைக் கழகத்தின் 75வது ஆண்டு நிறைவு நிகழ்ச்சி மேடை.
சிங்கப்பூர் நுண்கலைக் கழகத்தின் 75வது ஆண்டு நிறைவு நிகழ்ச்சி மேடை. - படம்: த.கவி

ஒன் வோர்ல்டு அனைத்துலகப் பள்ளியில் நடைபெற்ற இந்த விருந்து நிகழ்ச்சியில் கலைப் பற்றாளர்கள், சமூக நல ஆர்வலர்கள் எனக் கிட்டத்தட்ட 400 பேர் இணைந்தனர்.

மிடில் ரோட்டிலுள்ள அதன் புதிய வளாகத்திற்கு வரும் ஜூன் மாதம் மாறவுள்ள அந்தக் கலைப்பள்ளிக்கான நிதித்திரட்டு நிகழ்ச்சியாகவும் இந்நிகழ்ச்சி அமைந்தது.

மகாகவி பாரதியாரின் கொள்ளுப் பேரன் டாக்டர் ராஜ்குமார் பாரதியின் படைப்பு ஒன்றை சிஃபாஸ் கலைஞர்கள் மேடையில் இசைத்தனர்.

அத்துடன், பள்ளியின் நடன ஆசிரியர்கள் பி.என்.விகாஸ், மினாஸ் கான் ஆகியோரின் நடன அமைப்பும் இசை ஆசிரியர் ஜோதிஷ்மதி ஷீஜித்தின் இசை அமைப்பும் கொண்ட படைப்பு ஒன்றையும் பார்வையாளர்கள் கண்டு ரசித்தனர். சிஃபாஸ் பற்றிய ஆவணக் காணொளி ஒன்றும் காண்பிக்கப்பட்டது.

மூன்று தலைமுறைகளைச் சேர்ந்தோருக்குக் கலைப்பணி ஆற்றி, உலகெங்கும் இந்திய கலைகளுக்கு விடிவெள்ளியாகத் திகழும் இந்த அமைப்பை உருவாக்கிக் காத்துவரும் சிங்கப்பூரின் இந்திய சமூகத்திற்கு இது பெருமைக்குரிய தருணம் என்று சிஃபாசின் தலைவர் கே.வி. ராவ் தெரிவித்தார்.

“புத்துணர்ச்சி பெற்ற நிலையில் நாங்கள் வருங்காலத்தை ஆர்வத்துடன் எதிர்நோக்குகிறோம். இளைய தலைமுறையினரிடமும் பிரதிநிதித்துவம் அற்றவர்களிடமும் கலையைக் கொணடு சேர்க்கவேண்டும் என்பதும் எங்களது நோக்கம்,” என்று திரு ராவ் கூறினார்.

குறிப்புச் சொற்கள்