தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

இந்தியா செல்கிறார் அதிபர் தர்மன்

2 mins read
29ecc3d0-df8d-48a2-bf34-d9923c46eddf
அதிபர் தர்மன் சண்முகரத்னம். - கோப்புப் படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

அதிபர் தர்மன் சண்முகரத்னம் அரசுமுறைப் பயணம் மேற்கொண்டு செவ்வாய்க்கிழமை (ஜனவரி 14) இந்தியா செல்கிறார்.

இந்திய அதிபர் திரௌபதி முர்முவின் அழைப்பை ஏற்று திரு தர்மன் இந்தியா செல்வதாக சிங்கப்பூர் வெளியுறவு அமைச்சு ஜனவரி 13ஆம் தேதி தெரிவித்துள்ளது.

சிங்கப்பூருக்கும் இந்தியாவிற்கும் இடையிலான அரசதந்திர உறவுகள் தொடங்கி 60 ஆண்டுகள் நிறைவடைந்ததைக் குறிக்கும் வகையில் அதிபர் தர்மனின் அரசுமுறைப் பயணம் அமைகிறது.

திரு தர்மன், ஜனவரி 15, 16ஆம் தேதிகளில் புதுடெல்லிக்கும் 17, 18ஆம் தேதிகளில் ஒடிசாவிற்கும் செல்கிறார். அவருக்கு இந்திய அதிபர் மாளிகையில் சடங்குபூர்வ வரவேற்பு அளிக்கப்படும். இந்திய அதிபர், திரு தர்மனுக்கு அரசுமுறை விருந்தளிப்பார் என்று கூறப்பட்டது.

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியையும் சில அமைச்சர்களையும் திரு தர்மன் சந்தித்துப் பேசுவார்.

மேலும், மகாத்மா காந்தியின் நினைவிடமான ராஜ்காட்டிற்குச் சென்று அதிபர் தர்மன் அஞ்சலி செலுத்துவார்.

பின்னர், புதுடெல்லியில் உள்ள சிங்கப்பூரர்களை அவர் சந்திப்பார்.

சிங்கப்பூருக்கும் இந்தியாவுக்கும் இடையிலான அரசதந்திர உறவுகளின் 60 ஆண்டு நிறைவையும் சிங்கப்பூர் சுதந்திரம் பெற்று 60 ஆண்டுகள் நிறைவடைந்ததையும் குறிக்கும் விதமாக ஏற்பாடு செய்யப்படும் விருந்து நிகழ்ச்சியில் அவர்களை அதிபர் சந்திப்பார்.

இந்தியத் தொழில்துறைக் கூட்டமைப்பின் முன்னாள் தலைமை இயக்குநர் தருண் தாசுக்கு கௌரவக் குடிமகன் விருதை அதிபர் தர்மன் வழங்குவார் என்று கூறப்பட்டது.

ஒடிசாவின் புவனேஸ்வர் நகரில் மாநில முதல்வர் மோகன் சரண் மஹ்ஜி திரு தர்மனைச் சந்தித்து, மாநிலத்தின் பொருளியல் உத்திகள், வாய்ப்புகள் குறித்து விளக்கமளிப்பார்.

அதிபருக்கு அவர் அதிகாரபூர்வ விருந்து அளிப்பார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

திரு தர்மன் அங்குள்ள உலகத் திறன்கள் நிலையத்தைப் பார்வையிடுவார். சிங்கப்பூர் தொழில்நுட்பக் கல்விக்கழக கல்விச் சேவைப் பிரிவு (ITEES), ஆசிய மேம்பாட்டு வங்கியின் நிதியுதவியுடன் அந்த நிலையத்தை அமைத்துள்ளது.

அதிபர் தர்மன், ‘பாரத் பயோடெக்’ நிறுவனத்தின் தடுப்பூசித் தயாரிப்பு ஆலைக்கும் ஒடிசாவின் கலாசார மரபுடைமையை எடுத்துக்கூறும் சில இடங்களுக்கும் செல்வார்.

அதிபருடன் புதுடெல்லிக்கும் ஒடிசாவிற்கும், அவரது மனைவி ஜேன் இத்தோகி சண்முகரத்னம், போக்குவரத்து அமைச்சரும் நிதி இரண்டாம் அமைச்சருமான சீ ஹொங் டாட், வெளியுறவு, தேசிய வளர்ச்சி மூத்த துணையமைச்சர் சிம் ஆன், நாடாளுமன்ற உறுப்பினர்கள் லிம் பியாவ் சுவான், ஜோன் பெரேரா, வான் ரிஸால் ஆகியோருடன் அதிபர் அலுவலகம், வெளியுறவு, போக்குவரத்து, வர்த்தக தொழில் அமைச்சுகள், என்டர்பிரைஸ் சிங்கப்பூர் அமைப்பு ஆகியவற்றின் அதிகாரிகளும் செல்கின்றனர்.

வர்த்தகப் பேராளர் குழு ஒன்று, ஒடிசாவில் அதிபருடன் இணைந்துகொள்ளும் என்று வெளியுறவு அமைச்சு தெரிவித்துள்ளது.

குறிப்புச் சொற்கள்