அதிபர் தர்மன் ஐந்து நாள் சுவீடன் பயணம்

அதிபர் தர்மன் ஐந்து நாள் சுவீடன் பயணம்

கோப்புப் படம்; ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

16 Oct 2026 - 8:56 pm

2 mins read

அதிபர் தர்மன் சண்முகரத்தினம் ஐந்து நாள் அதிகாரபூர்வ பயணம் மேற்கொண்டு சுவீடனுக்குச் செல்கிறார்.

அங்கு அந்நாட்டின் அரசியல், வர்த்தகத் தலைவர்களை அவர் சந்தித்துப் பேசுகிறார்.

அக்டோபர் 17 முதல் 21 வரை சுவீடனில் அவர் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொள்கிறார்.

சிங்கப்பூர் அதிபர் ஒருவர், சுவீடனுக்கு அதிகாரபூர்வமாகப் பயணம் மேற்கொள்வது இதுவே முதல் முறை.

மேலும், இரு நாடுகளுக்கும் இடையே தூதரக உறவுகள் ஏற்படுத்தப்பட்டு 60வது ஆண்டு நிறைவைக் குறிக்கும் வகையில் அவரது பயணம் அமைகிறது.

இதன் தொடர்பில் சிங்கப்பூர் வெளியுறவு அமைச்சு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

அதில், ஸ்டாக்ஹோம் நகரில் உள்ள அரண்மனையில் அதிபர் தர்மனுக்கு முறைப்படி வரவேற்பு அளிக்கப்படும் என்றும் சுவீடன் மன்னர் கார்ல் 16ஆம் கஸ்டாஃப்பும் அவரது அவரது துணைவியார் ராணி சில்வியாவும் அவருக்கு அரசு விருந்து அளிக்கின்றனர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சுவீடன் நாடாளுமன்ற நாயகர் ஆண்ட்ரியாஸ் நோர்லென், பிரதமர் உல்ஃப் கிறிஸ்டெர்சன், சுவீடன் நாடாளுமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்டோரை அதிபர் தர்மன் சந்திக்கிறார்.

செப்டம்பர் மாதம் நடைபெற்ற சுவீடன் பொதுத்தேர்தலுக்குப் பிறகு கிறிஸ்டெர்சன் ஒரு இடைக்கால அரசாங்கத்தை வழிநடத்தி வருகிறார். தேர்தலில் அவரது ஆளும் வலதுசாரி கூட்டணி, எதிர்க்கட்சியிடம் குறைந்த வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியடைந்ததை அடுத்து அவர் பதவியிலிருந்து விலகினார்.

ஸ்டாக்ஹோமில் அதிபர் தர்மனும் மன்னர் கார்லும் பல்வேறு துறைகளைச் சேர்ந்த சுவீடன் தொழில்முனைவர்களுடனும் வர்த்தகத் தலைவர்களுடனும் கலந்துரையாடுகின்றனர்.

ஸ்டாக்ஹோம் பொருளியல் பள்ளியில் அதிபர் தர்மன் சிறப்புரையாற்றுகிறார். அது மட்டுமல்லாமல் சுவீடனில் வசிக்கும் சிங்கப்பூரர்களுக்காக ஏற்பாடு செய்யப்பட்டுள்ள வரவேற்பு நிகழ்ச்சியிலும் அவர் பங்கேற்கிறார்.

குறிப்புச் சொற்கள்
அதிபர் தர்மன்சுவீடன்பிரதமர்மன்னர்

தொடர்புடைய செய்திகள்