தகவல்தொடர்பு ஊடக மேம்பாட்டு ஆணையம், ஆகஸ்ட் 24, 30ஆம் தேதிகளில் இடம்பெறவிருக்கும் அதிபர் வேட்பாளர்களின் இரண்டு 10 நிமிட ஒலிபரப்புகளுக்கான விவரங்களை வெளியிட்டுள்ளது.
சிங்கப்பூரர்கள் 19 இலவச ஒலி ஒளிவழிகளிலும் மூன்று அதிபர் வேட்பாளர்களின் உரைகளையும் காணலாம் அல்லது கேட்கலாம்.
அவை நான்கு அதிகாரத்துவ மொழிகளிலும் இடம்பெறும்.
வேட்பாளர் பேசும் மொழி அந்த ஒளிவழியின் அதிகாரத்துவ மொழியாக இல்லாவிடில், மீடியாகார்ப் நிறுவனம் வேட்பாளர் சமர்ப்பித்த உரையின்படி, குரல் பதிவையும் துணைவாசகங்களையும் வழங்கும்.
அரசாங்க முதலீட்டு நிறுவனத்தின் முன்னாள் முதலீட்டுத் தலைவர் இங் கொக் சொங், 75, முன்னாள் மூத்த அமைச்சர் தர்மன் சண்முகரத்னம், 66, என்டியுசி இன்கம் நிறுவனத்தின் முன்னாள் தலைமை நிர்வாகி டான் கின் லியான், 75 ஆகிய மூவரும் அதிபர் தேர்தலில் போட்டியிடுகின்றனர்.
செப்டம்பர் 1ஆம் தேதி 2.7 மில்லியனுக்கும் அதிகமான சிங்கப்பூரர்கள், நாட்டின் ஒன்பதாவது அதிபரைத் தேர்ந்தெடுப்பதற்கு வாக்களிக்கத் தகுதிபெற்றுள்ளனர்.
முதலாவது ஒலிபரப்பு ஆகஸ்ட் 24ஆம் தேதி இடம்பெறும். அகரவரிசைப்படி, முதலில் திரு இங்கும் அவரைத் தொடர்ந்து திரு தர்மனும் அவருக்குப் பிறகு திரு டானும் உரையாற்றுவார்கள்.
ஆகஸ்ட் 30ஆம் தேதி இடம்பெறவிருக்கும் இரண்டாவது ஒலிபரப்பில், அந்த வரிசை தலைகீழாக இருக்கும்.
தொடர்புடைய செய்திகள்
வேட்பாளர்கள் தங்களின் பிரசாரச் செய்திகளை நான்கு அதிகாரத்துவ மொழிகளிலும் அல்லது அவற்றில் எந்தவொரு மொழியிலும் வழங்கலாம்.
தமிழ் ஒலி ஒளிபரப்பு இரவு ஒன்பது மணிக்கு வசந்தத்திலும் ஒலி 96.8லும் இடம்பெறும்.

