ஆசிரியர் பணியில் தலைசிறந்து விளங்கும் எட்டு கல்வியாளர்களுக்கு ஆகஸ்ட் 29ஆம் தேதி ஆசிரியர்களுக்கான அதிபர் விருது வழங்கப்பட்டது. இவ்வாண்டின் ஆசிரியர் தின வரவேற்பு விழாவில் அதிபர் தர்மன் சண்முகரத்னம் இவ்விருதுகளை வழங்கி ஆசிரியர்களைச் சிறப்பித்தார்.
“நமது ஆசிரியர்கள் நமது தேசத்தைச் செதுக்கும் சிற்பிகள் ஆவார்கள். சமூகத்தின் நன்மைக்காக தங்கள் பங்கை ஆற்றவுள்ள அடுத்த தலைமுறை சிங்கப்பூரர்களை அவர்கள் உருவாக்குகிறார்கள்,” என்றார் அதிபர் தர்மன்.
விளையாட்டுவழி விழுமியம்
ஒரு கல்வியாளராக மாணவர்களின் கற்றல் தேவைகளை அறிந்து, அவர்களது திறன்களுக்கேற்ப கற்பிப்பது மிகவும் அவசியம் என்றார் இவ்வாண்டின் ஆசிரியர்களுக்கான அதிபர் விருதைப் பெற்ற திரு கெவின் ஜோசஃப் ஃபிரான்சிஸ், 39.
நன்யாங் தொழில்நுட்பப் பல்கலைக்கழகத்தில் உளவியல் பட்டத்தைப் பெற்ற திரு கெவின், குழந்தை வளர்ச்சியைப் பற்றிய தமது புரிதலை வளர்த்துக்கொள்ள வேண்டும் என்ற உந்துதலால் ஆசிரியராக முடிவு செய்தார். ஆசிரியர் துறையில் தமது பயணத்தைச் சிறப்புக் கல்வி வழங்கும் ஸ்பெக்டிரா உயர்நிலைப்பள்ளியில் தொடங்கிய திரு கெவின், 10 ஆண்டுகளுக்குப் பிறகு சொங்சங் தொடக்கப்பள்ளிக்கு மாறினார். கடந்த நான்கு ஆண்டுகளாக அங்குள்ள இவர், தற்போது மூன்றாம், நான்காம் நிலைகளுக்கான தலைவராகவும் நற்குணம், குடியியல் கல்விக்குமான துறைத் தலைவராகவும் உள்ளார்.
கணிதப் பாடத்தில் மாணவர்களின் ஈடுபாட்டை வளர்க்க, செயல்வழிக்கற்றல், நன்நடத்தைக்கு ஒட்டுவில்லைகள் வழங்குதல், பாத்திரமேற்று நடித்தல் முதலிய உத்திகளைத் தமது பாடங்களில் இணைத்து கற்பிக்கிறார். “மாணவர்களுக்கு அவர்களின் ஆசிரியரைப் பிடித்திருந்தால், பாடத்தையும் விரும்பிப் படிப்பார்கள் என்று நான் நம்புகிறேன். நேர்மறையான கற்றல் சூழலை வளர்ப்பதை என் நோக்கமாகக் கொண்டுள்ளேன்,” என்று அவர் கூறினார்.
விழுமியங்களை அடிப்படையாகக் கொண்ட ‘கேட்ச்!’ என்ற அட்டை விளையாட்டினை திரு கெவின் மாணவர்களுக்காக உருவாக்கியுள்ளார். இவ்விளையாட்டு மாணவர்களுக்குப் பள்ளியின் முக்கிய விழுமியங்களுடன் தங்களைத் தொடர்பு படுத்திக்கொள்ளவும் அவற்றை உள்வாங்கி அதன்படி நடக்கவும் ஊக்குவிக்கிறது.
ஏழு பள்ளிகளைக் கொண்ட குழுமத்திட்டத்தை வழிநடத்திவரும் திரு கெவின், அந்தக் குழுமப்பள்ளிகளின் விழுமியங்களுக்கேற்ப இந்த அட்டை விளையாட்டை மாற்றியமைத்துக் கொடுக்கும் முயற்சியிலும் ஈடுபட்டு வருகிறார்.
தொடர்புடைய செய்திகள்
இந்த விருதைப் பெற்றதில் தாம் மிகவும் பெருமிதம் கொள்வதாக தெரிவித்தார் திரு கெவின்.
“மாணவர்களுக்கு ஆதரவளிக்க மேலும் பல வழிகளைக் கண்டறிய இவ்விருது எனக்கு உத்வேகம் அளித்துள்ளது,” என்றார் அவர்.
சுற்றுச்சூழல் ஆர்வலர்
நிலைத்தன்மையையும் சுற்றுச்சூழலையும் பேணிக் காப்பதற்கு வயது ஒரு தடையல்ல என்றார் இவ்வாண்டின் ஆசிரியர்களுக்கான அதிபர் விருதைப் பெற்ற மற்றோர் ஆசிரியர் திரு மோஹன் கிருஷ்ணமூர்த்தி, 49.
இவர் 25 ஆண்டுகளாக கல்வித் துறையில் பணிபுரிந்து வருகிறார். கிரீன்டேல் தொடக்கப்பள்ளியில் அறிவியல் துறைக்கு நிலைத் தலைவராகவும் பள்ளியின் சுற்றுச்சூழல் சங்கத்தின் பொறுப்பாளராகவும் உள்ளார்.
முதலில் பொறியியல் படிப்பை மேற்கொள்ள நினைத்த திரு மோஹன், தாம் படித்துக்கொண்டிருந்த பலதுறைத் தொழிற்கல்லூரியில் தேசியக் கல்விக் கழகம் நடத்திய நிகழ்ச்சி ஒன்றினால் ஈர்க்கப்பட்டு ஆசிரியராக வேண்டும் எனத் தீர்மானித்தார்.
“குழந்தைகள்மீது நல்லதொரு தாக்கத்தை ஏற்படுத்துவதற்கு ஆசிரியர் பணி எனக்கு வாய்ப்பளிக்கிறது,” என்றார் திரு மோஹன்.
சிறுவயதிலிருந்து தாவரங்கள்மீதும் சுற்றுச்சூழல்மீதும் அதிக ஈடுபாடு கொண்டிருக்கும் இவர், தமது பள்ளியின் சுற்றுச்சூழல் சங்கத்தில் மாணவர்களுக்குப் பல்வேறு நடவடிக்கைகளையும் திட்டங்களையும் செயற்படுத்தி வருகிறார்.
“ஓர் அறிவியல் ஆசிரியராக, இயற்கைமீது அக்கறை கொள்வதால் ஏற்படும் நன்மைகளைப் பற்றி மாணவர்களிடம் அன்றாடம் எடுத்துரைப்பேன்,” என்று அவர் கூறினார். தமது படங்களைக் காணொளிவழி சொல்லித் தருவதைவிட அனுபவம்வழி கற்பித்துச் சுற்றுச்சூழல்மீது மாணவர்களுக்கு ஆர்வத்தை வளர்க்கிறார்.
அண்மையில் தமது பள்ளியில் சதுப்புநிலக் குளம் ஒன்றை உருவாக்க மாணவர்களை ஊக்குவித்து வழிநடத்தியதற்குத் திரு மோஹனுக்குத் தேசியப் பூங்காக் கழகத்தின் 2024 தலைசிறந்த ஆசிரியர் விருது வழங்கப்பட்டது.
“சுற்றுச்சூழல் திட்டங்களில் மாணவர்கள் மேற்கொண்ட முயற்சிகளை இந்த அதிபர் விருது அங்கீகரிப்பதோடு அவர்களின் ஈடுபாட்டை மேலும் மேம்படுத்தவும் என்னை ஊக்குவிக்கிறது,” என்றார் திரு மோஹன்.

