நீடித்த சமூக தாக்கத்தை நிலைநாட்டும் பொருட்டு, உடற்குறை உள்ளவர்கள் தங்கள் முழுத் திறன்களை அடைய, புதுப்பிக்கப்பட்ட அதிபர் சவால் 2025 உதவும் என்று அதிபர் தர்மன் சண்முகரத்தினம் தெரிவித்துள்ளார்.
புதிய பரிமாணத்தில் வலம்வர உள்ள அதிபர் சவால் 2025இன் முக்கிய வருங்கால முயற்சிகளைப் பற்றி செப்டம்பர் 4ஆம் தேதி (புதன்கிழமை) டெல்டா விளையாட்டு மையத்தில் அறிமுகப்படுத்திய அதிபர், சமூகத் தேவைகளை நிறைவு செய்வதில் அரசாங்கத்தின் பங்கு அதிகரித்துள்ளது என்று சுட்டிக்காட்டினார்.
“கலை மற்றும் விளையாட்டுத் துறைகளில் உடற்குறை உள்ளவர்கள் சிறந்து விளங்க மேற்கொள்ளும் முயற்சிகளுக்குப் புதுப்பிக்கப்பட்ட அதிபர் சவால் 2025 ஆதரவளிக்கும்,” என்று உறுதி அளித்தார்.
அதிபர் சவால் 2025 குறித்த அறிமுக நிகழ்வில் அதிபர் தர்மன், அவருடைய மனைவி திருவாட்டி ஜேன் இத்தோகி கலந்துகொண்டு உடற்குறையுள்ள விளையாட்டு வீரர்கள், தொண்டூழியர்கள் என பலருடன் கலந்துரையாடி மகிழ்ந்தனர்.
இதையடுத்து, அதிபர் சவால் 2025 நீண்டகால நிதியுதவித் திட்டமாக விளங்கும் என்றார்.
கூடுதலாக, இளம் சமூகத் தலைவர்களை உருவாக்கவும் வாழ்க்கையில் இரண்டாவது வாய்ப்புகளை நாடும் நபர்களை அங்கீகரிக்கவும் புதிய துறை சார்ந்த கல்வியாளர் திட்டங்களை (fellowship programmes) வழங்கும் என்று அறிவித்தார்.
அத்துடன், உடற்குறையுள்ள விளையாட்டு வீரர்களுக்கு அதிக வாய்ப்புகள் அளிக்க அதிபர் சவால் 2025 ‘ஸ்போர்ட்ஸ் எஸ்ஜி’யுடன் இணைந்து கற்றல் திட்டங்களை மேம்படுத்தும்.
பிறவியிலிருந்து “உல்ரிச்” தசை சிதைவுக்கு ஆளான பிரேம்குமார் பிரம்மரூபன், 13, அதிபர் சவால் 2024ன் ஒரு பயனாளியாக உள்ளார். தனது பள்ளி ஆசிரியர் ஊக்கத்தில் ‘பவர் சாக்கர்’ எனும் உடற்குறை உள்ளோருக்கான காற்பந்து விளையாட்டில் ஓராண்டு காலமாக பங்கேற்று வருகிறார்.
தொடர்புடைய செய்திகள்
உடல் குறையுள்ளவர்கள் வளர்ச்சிக்கும் விளையாட்டுத் திறனுக்கும் இடங்கொடுக்கும் புதுப்பிக்கப்பட்ட அதிபர் சவாலைப் பாராட்டிய ரூபனின் தந்தை பிரேம்குமார், “ரூபன் போன்ற சிறுவர்கள், அவர்கள் ஈடுபடும் வெவ்வேறு விளையாட்டுகள், சந்திக்கும் சவால்கள் பற்றிய சமூக கற்றல் நடவடிக்கைகள் மிக முக்கியம் என்று நான் நம்புகிறேன்,” என்றார்.
2000ஆம் ஆண்டில் முதன்முதலாக நிறுவப்பட்ட அதிபர் சவால் அக்கறையுள்ள, ஒருங்கிணைந்த சிங்கப்பூர் சமுதாயத்தை உருவாக்கும் நோக்கம் கொண்டது. காலப்போக்கில் அதன் நோக்கத்தை விரிவுபடுத்தி அண்மைய ஆண்டுகளில் பல சமூக குழுக்களுக்கு உதவிக்கரம் நீட்டியுள்ளது.
அதிபர் சவால் புத்துணர்ச்சி பெறும் முக்கியத்துவத்தை எடுத்துரைத்த அதிபர் தர்மன், சிங்கப்பூரர்களாகிய நாம் ஒருவருக்கு ஒருவர் பின்னணி பாராமல் ஆதரவளிக்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.
“துடிப்பான, ஒருங்கிணைந்த சிங்கப்பூர் சமூகத்தை உருவாக்க அதிபர் சவால் முற்படும். இது ஒரு தொடர்ச்சியான முயற்சி,” என்றார்.

