அதிபர் தர்மனுக்குப் பிடித்த பிரியாணி

அதிபர் தர்மனுக்குப் பிடித்த பிரியாணி

2 mins read
bdcaa728-edd4-4363-b734-ad36c8a4262c
சிராங்கூன் சாலையிலுள்ள ‘பொடி & பொரியல்’ உணவகத்தின் ஈரப்பலாக்காய் சேர்க்கப்பட்ட சைவ பிரியாணியைத் தமது ஃபேஸ்புக் பக்கத்தில் அதிபர் தர்மன் சண்முகரத்னம் பகிர்ந்துள்ளார். - படம்: அதிபர் அலுவலகம்

புத்தாண்டு கொண்டாடும் தமிழர்கள், சீக்கியர்கள், மலையாளிகள், வங்காளிகள் உள்ளிட்ட சிங்கப்பூரிலுள்ள இந்தியச் சமூகத்தினர் அனைவர்க்கும் அதிபர் தர்மன் சண்முகரத்னம் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

“பிரியாணியைப் பிடிக்காதவர்கள் எவரேனும் உண்டா?” என்று ஃபேஸ்புக் வழியாகப் பதிவிட்டுள்ள தமது வாழ்த்துச் செய்தியில் கேட்டுள்ளார் அதிபர் தர்மன்.

“யாருக்கேனும் பிரியாணி பிடிக்காமல் இருக்குமா? இன்று அது மிகச் சிறந்த இந்திய உணவாகக் கருதப்பட்டாலும், அதனைச் சுவைக்க இனம், சமயம் அல்லது பண்பாடு ஒரு தடையாக இராது.

“என்னைப் போல மாட்டிறைச்சியைத் தவிர்ப்பவர்கள் என்றாலும், கோழி பிரியாணி, ஆட்டிறைச்சி பிரியாணி, கடலுணவு பிரியாணி என எப்போதும் புகழ்பெற்ற பல தெரிவுகள் உண்டு.

“இப்போதெல்லாம் எனது தெரிவு காய்கறி பிரியாணிதான். அதில் இறைச்சிக்கு மாற்றாக, மெல்லுவதற்கு ஏதுவான ஈரப்பலாக்காய் சேர்க்கப்படுகிறது. இந்தியாவிலும் இது நலமிக்க, சுற்றுச்சூழலுக்கு உகந்த தெரிவாகப் புகழ்பெற்று வருகிறது,” என்று அதிபர் விளக்கமாகப் பதிவிட்டுள்ளார்.

பல்வேறு நிலப்பரப்புகளையும் பண்பாடுகளையும் கடந்து வந்த ஓர் உணவிற்கு பிரியாணி மற்றுமொரு சிறந்த எடுத்துக்காட்டு என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

“அதுபோல, தென்கிழக்காசியாவும் இந்த உணவிற்குத் தனக்கேற்றாற்போலப் புதிய மெருகூட்டியுள்ளது. சிங்கப்பூர் மற்றும் மலேசியாவிலுள்ள ‘நாசி பிரியாணி’, வழக்கமாக அச்சார் (காய்கறி ஊறுகாய்கள்) அல்லது சமைத்த அன்னாசிப் பழத் துண்டுகள் மற்றும் தால்ச்சாவுடன் (பருப்புக் குழம்பு) பரிமாறப்படுகிறது. இந்தோனீசியாவில், தேங்காய்ப்பால் மற்றும் உள்ளூர் மசாலாப் பொருள்களின் மணம் இதில் தூக்கலாக இருக்கும்,” என்று அதிபர் தர்மன் தெரிவித்துள்ளார்.

“காய்கறி பிரியாணி, பெரும்பாலும் தமிழ்நாட்டின் ‘சீரக சம்பா’ எனப்படும் ஒருவகை குறுணை அரிசியால் செய்யப்படுகிறது. இது குளூட்டன் (Gluten) அற்றது மற்றும் பல நீள ரக வெள்ளை அரிசிகளைவிட குறைவான கிளைசீமிக் குறியீட்டைக் கொண்டது. அரிசி விளையும் பகுதிகளில் தற்போது கடுமையான தண்ணீர்ப் பற்றாக்குறை நிலவும் வேளையில், இது குறைந்த தண்ணீரைக் கொண்டே விளைவிக்கப்படுகிறது,” என்றும் அவர் விவரித்துள்ளார்.

குறிப்புச் சொற்கள்