400க்கும் அதிக பற்றுச்சீட்டுகளுடன் ஃபேர்பிரைசில் செப்டம்பர் வரை விலைத் தள்ளுபடி

400க்கும் அதிக பற்றுச்சீட்டுகளுடன் ஃபேர்பிரைசில் செப்டம்பர் வரை விலைத் தள்ளுபடி

2 mins read
43bb52f3-58d5-40f0-828d-500e9eab35f3
அடுத்த மூன்று மாதங்களில், ஃபேர்பிரைஸ் குரூப் செயலியில் 400க்கும் அதிகமான பற்றுச்சீட்டுகளைக் கொண்டு வாடிக்கையாளர்கள் $1,000க்கு மேல் சேமிக்கலாம். - படம்: ஃபேர்பிரைஸ் குழுமம்

ஃபேர்பிரைஸ் பேரங்காடிகள் ஜூன் 12 முதல் செப்டம்பர் 10 வரை தேர்ந்தெடுக்கப்பட்ட அன்றாட அத்தியாவசியப் பொருள்களையும் மின்னணுச் சாதனங்களையும் தள்ளுபடி உடனான விலையில் வாடிக்கையாளர்கள் வாங்கலாம்.

அடுத்த மூன்று மாதங்களில், ஃபேர்பிரைஸ் குரூப் செயலியில் 400க்கும் அதிகமான பற்றுச்சீட்டுகளைக் கொண்டு வாடிக்கையாளர்கள் $1,000க்குமேல் சேமிக்கலாம் என்று ஃபேர்பிரைஸ் வியாழக்கிழமை (ஜூன் 12) வெளியிட்ட ஓர் அறிக்கையில் தெரிவித்தது.

அனைத்து ஃபேர்பிரைஸ், ஃபேர்பிரைஸ் ஃபைனஸ்ட், ஃபேர்பிரைஸ் எக்ஸ்ட்ரா, யூனிட்டி கடைகளிலும் தாள் பற்றுச்சீட்டுகளும் கிடைக்கப்பெறும்.

எஸ்ஜி60-ஐ குறிக்கும் விதமாக ஃபேர்பிரைசின் கொண்டாட்டங்களில் ஒரு பகுதியாக ‘சேவ் எவரி டே’ எனும் இந்த இயக்கம் மீண்டும் இடம்பெறுகிறது.

அரிசி, எண்ணெய், பால், சாக்லெட்டுகள் போன்ற பொருள்களை உள்ளடக்கும் 100க்கும் மேற்பட்ட எஸ்ஜி60 பற்றுச்சீட்டுகள் உள்ளன. சாம்சுங், சியாவ்மி, ஜிசுலைஃப் போன்ற பிரபல நிறுவனங்களைச் சேர்ந்த மின்னணுச் சாதனங்களுக்கான பிரத்தியேக இணையப் பற்றுச்சீட்டுகளையும் ஃபேர்பிரைஸ் தெரிவுசெய்துள்ளது.

இந்த விலைத் தள்ளுபடிகளைப் பெற, ஃபேர்பிரைஸ் குரூப் செயலியில் கட்டணம் செலுத்தும்போது மின்னிலக்கப் பற்றுச்சீட்டுகளை வாடிக்கையாளர்கள் தேர்வுசெய்ய வேண்டும்.

ஒரு வாடிக்கையாளர் எத்தனைப் பற்றுச்சீட்டுகளைப் பயன்படுத்த முடியும் என்பதில் வரம்பு எதுவுமில்லை. மேலும், ஒரே பரிவர்த்தனையில் ஒன்றுக்கும் மேற்பட்ட பற்றுச்சீட்டுகள் பயன்படுத்தப்படலாம்.

மூத்தோர், முன்னோடித் தலைமுறை, மெர்டேக்கா தலைமுறை, சாஸ் நீல/ஆரஞ்சு அட்டைதாரர்களுக்கான ஃபேர்பிரைசின் வாராந்தர தள்ளுபடித் திட்டங்களுடன் இந்தப் பற்றுச்சீட்டுகளைச் சேர்த்துப் பயன்படுத்தலாம்.

2024ல் ‘சேவ் எவரி டே’ இயக்கம் வாடிக்கையாளர்களுக்கு கிட்டத்தட்ட $1.4 மில்லியன் சேமிப்புகளை வழங்கியது. 2021ல் இந்த இயக்கம் தொடங்கப்பட்டதிலிருந்து இதுவே ஆக அதிக சேமிப்புத் தொகையாகும்.

குறிப்புச் சொற்கள்