இரண்டு மாத சீரமைப்புப் பணிகளுக்குப் பிறகு, ஏபிசி பிரிக்வொர்க்ஸ் சந்தை, திங்கட்கிழமை (ஜூன் 8) மீண்டும் செயல்படத் தொடங்கியது. அங்குள்ள கடைக்காரர்கள் சிலர் தங்கள் உணவு விலையை $1 வரை உயர்த்தியுள்ளனர்.
புக்கிட் மேராவில் உள்ள இந்தப் பிரபலமான உணவங்காடி நிலையத்தில், இந்த ஆண்டு ஏப்ரல் 9ஆம் தேதி முதல் ஜூன் 7ஆம் தேதி வரை பழுதுபார்ப்பு, மறு அலங்காரப் பணிகள் மேற்கொள்ளப்பட்டன.
இந்த மேம்பாடுகளில், சக்கர நாற்காலி பயன்படுத்துவோர்க்கான புதிய நீல நிற மேசைகள், நாற்காலிகள், அத்துடன் விற்பனையாளர்கள் தங்கள் பொருள்களைச் சேமித்து வைப்பதற்காக 14 புதிய சேமிப்பு அறைகள் ஆகியவை அடங்கும் என்று லியன்ஹ சாவ்பாவ் செய்தி வெளியிட்டுள்ளது.
பெரும்பாலான வியாபாரிகள் விலையை மாற்றாமல் வைத்திருந்தாலும், சிலர் சுமார் 30 காசு முதல் ஒரு வெள்ளி வரை விலையை உயர்த்தியுள்ளதாக பிரிக்வொர்க்ஸ் உணவங்காடிக் கடைக்காரர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
உயர்ந்து வரும் உணவுப் பொருள்களின் விலை மற்றும் செயல்பாட்டுச் செலவுகளுக்கு மத்தியில், கடைக்காரர்கள் ‘மிகவும் கடினமாக உழைத்து, மிகுந்த அழுத்தத்தை எதிர்கொள்கின்றனர்’ என்று சங்கத்தின் தலைவர் லிம் கிம் ஹாக் கூறினார்.
ஹுவா லிங் வான்தான் நூடல்ஸ் கடையை நடத்தும் பான் சியூலிங், மூலப்பொருள் மற்றும் பொட்டலமிடும் செலவுகள் அதிகரித்ததால் விலையை உயர்த்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டதாகச் செய்தியாளர்களிடம் தெரிவித்தார். உதாரணமாக, ஒரு கிண்ணம் நூடல்ஸின் விலை $4லிருந்து $4.50ஆக உயர்ந்துள்ளது.
‘சிக்கன் விங்ஸ்’ மற்றும் ‘சாத்தே’ விற்கும் கடைக்காரர் ஒருவர், விலையை 10 காசு உயர்த்தியுள்ளதாக சாவ்பாவ் செய்தி வெளியிட்டுள்ளது.
கடைக்காரர் லின் டெசாங், தனது விநியோகிப்பாளர் விலைகளை உயர்த்தியதைச் சுட்டிக்காட்டி, “என்னால் எதுவும் செய்ய முடியாது,” என்று கூறினார்.
தொடர்புடைய செய்திகள்
ஜூன் 8ஆம் தேதி அந்த உணவு மையத்திற்கு வருகை தந்த வாடிக்கையாளர் ஒருவர், புதுப்பிப்புப் பணிகளுக்குப் பிறகு அந்தப் பகுதி மிகவும் வசதியாகவும், நல்ல காற்றோட்டத்துடனும் இருப்பதாகவும் புதிய மின்விசிறிகளால் இப்போது குளிர்ச்சியாகவும் முன்பைவிடச் சுத்தமாகவும் இருப்பதாகவும் கூறினார்.
பல ஆண்டுகளாகப் பறவைகளின் தொல்லைகளைச் சமாளித்து வந்த நிலையில், பறவைகள் உள்ளே பறந்து வருவதைத் தடுப்பதற்காக, கூரைகளுக்கு அருகில் பச்சை நிறக் கம்பி வலைகளும், பறவை முள்களும் வைக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

