சிங்கப்பூரின் எஸ்ஜி60 கொண்டாட்டங்களை முன்னிட்டு ஃபேர்பிரைஸ் தனது சொந்த தயாரிப்புகளுக்கு குறிப்பிட்ட காலத்துக்கு விலைக் கழிவை வெள்ளிக்கிழமை (மார்ச் 7ஆம் தேதி) அறிவித்தது.
ஃபேர்பிரைஸ் பேரங்காடியின் குறைந்த விலையில் மக்கள் விரும்பும் பொருள்களை விற்கும் திட்டத்தின்படி, மார்ச் 6ஆம் தேதியிலிருந்து மே மாதம் 28ஆம் தேதிவரை வாடிக்கையாளர்கள் 60 பொருள்களை வாங்கிச் செல்லலாம்.
இதில் 12 வாரங்களுக்கு ஒவ்வொரு வாரமும் ஃபேர்பிரைஸ் ஐந்து பொருள்களுக்கு விலைத் தள்ளுபடி சலுகையை அறிவிக்கும்.
உணவு, அத்தியாவசிய பானங்கள், சிற்றுண்டிகள், சமையல், கழிவறை அத்தியாவசியப் பொருள்கள் இந்தத் திட்டத்தில் அடக்கம் என்று விளக்கமளிக்கப்பட்டுள்ளது.
அதில் இந்த வாரம், ஃபேர்பிரைஸ் முத்திரையிடப்பட்ட கெனோலா சமையல் எண்ணெய், தாய்லாந்து நாட்டு வெள்ளை அரிசி, வறுத்த கோழி இறக்கை உணவு, ‘டோர்டில்லா வறுவல்’ ஆகியவை அடங்கும். இவற்றுக்கு 36 விழுக்காடு வரை விலைக் கழிவு உண்டு என்று கூறப்பட்டுள்ளது.
இதுபற்றிக் கூறும் ஃபேர்பிரைஸ் குழுமத்தின் தலைமை நிர்வாக அதிகாரி விப்புல் சாவ்லா, “எங்கள் முத்திரையிட்ட பொருள்கள் மீது மக்கள் கொண்டுள்ள நம்பிக்கைக்கு திருப்பியளிக்கும் வகையில் பொருள்களில் சிறந்தவற்றை மேலும் பல சிங்கப்பூரர்களுக்கு கொண்டு செல்ல விரும்புகிறோம். இதன் மூலம் சிங்கப்பூரர்கள் அனைவரும் எஸ்ஜி60 கொண்டாட்டங்களில் பங்கேற்கும் விதமாக தங்களுக்கு தேவையான அத்தியாவசியப் பொருள்கள் பெறுவதை உறுதி செய்ய விரும்புகிறோம்,”என்று கூறினார்.
தற்போதைய நிலையில், 10 முதல் 15 விழுக்காடு வரையிலான விலைக் கழிவுடன் 3,500 ஃபேர்பிரைஸ் முத்திரையிட்ட பொருள்கள் விற்பனைக்கு உள்ளதாக அந்நிறுவனம் தெளிவுபடுத்தியுள்ளது.
இது குறித்த மேல் விவரங்களுக்கு https://www.fairpricegroup.com.sg/sg60/ என்ற இணையப்பக்கத்தை நாடலாம்.

