‘ரிட்டர்ன் ரைட்’ சின்னம் இல்லாத பானங்களின் விலை குறைப்பு

‘ரிட்டர்ன் ரைட்’ சின்னம் இல்லாத பானங்களின் விலை குறைப்பு

2 mins read
ada484bb-d314-449d-bac3-65c03ae4fc1d
ஏப்ரல் 1ஆம் தேதி முதல் 1,000க்கும் மேற்பட்ட தானியங்கி மீட்பு இயந்திரங்கள் பயன்பாட்டுக்கு வந்த போதிலும், இத்திட்டத்தை நிர்வகிக்கும் தேசிய சுற்றுப்புற வாரியம், தயாரிப்பாளர்களும் சில்லறை வர்த்தகர்களும் தங்கள் பழைய இருப்புகளை விற்றுத் தீர்ப்பதற்காக மேலும் ஆறு மாத கூடுதல் கால அவகாசத்தை வழங்கியது. இந்த இடைக்கால மாறுதல் காலம் வரும் செப்டம்பர் 30ஆம் தேதியுடன் முடிவடைகிறது. - படம்: பிசிஆர்எஸ்
multi-img1 of 2

பானக் கொள்கலன்களைத் திருப்பித் தரும் திட்டத்தை முழுமையாக அமல்படுத்துவதற்கு இன்னும் இரண்டு வாரங்களுக்கும் மேலான கால அவகாசம் உள்ள நிலையில், சிங்கப்பூரில் உள்ள சில சில்லறை வர்த்தகர்களும் விநியோகிப்பாளர்களும் தேவையான ‘ரிட்டர்ன் ரைட்’ சின்னம் இல்லாத பானக் கொள்கலன்களை 50 விழுக்காடு வரையிலான தள்ளுபடி விலையில் விற்பனை செய்து வருகின்றனர்.

இந்தத் திட்டத்தின்கீழ், வரும் அக்டோபர் மாதம் 1ஆம் தேதி முதல் 150 மில்லி லிட்டர் முதல் 3 லிட்டர் வரையிலான அனைத்து பிளாஸ்டிக் போத்தல்கள் மற்றும் தகரக் கலன்களில் 10 காசு வைப்புத்தொகைக்கான அடையாளம் அச்சிடப்பட்டிருக்க வேண்டும்.

அவ்வாறு சின்னம் இல்லாத பானங்களை விற்பனை செய்ய முடியாது. இத்திட்டத்தின்கீழ் பானங்களை வாங்கும் வாடிக்கையாளர்கள் ஒவ்வொரு பானத்துக்கும் கூடுதலாக 10 காசு செலுத்த வேண்டும். ஆனால், பயன்படுத்தப்பட்ட கொள்கலன்களை ‘ரிட்டர்ன் ரைட்’ இயந்திரம் என்று அழைக்கப்படும் தானியங்கி மீட்பு இயந்திரத்தில் போடும்போது, அவர்கள் செலுத்திய தொகையைத் திரும்பப் பெற்றுக்கொள்ளலாம்.

ஏப்ரல் 1ஆம் தேதி முதல் 1,000க்கும் மேற்பட்ட தானியங்கி மீட்பு இயந்திரங்கள் பயன்பாட்டுக்கு வந்த போதிலும், இத்திட்டத்தை நிர்வகிக்கும் தேசிய சுற்றுப்புற வாரியம், தயாரிப்பாளர்களும் சில்லறை வர்த்தகர்களுக்கும் தங்கள் பழைய இருப்புகளை விற்றுத் தீர்ப்பதற்காக மேலும் ஆறு மாத கூடுதல் கால அவகாசத்தை வழங்கியது.

இந்த இடைக்கால மாறுதல் காலம் வரும் செப்டம்பர் 30ஆம் தேதியுடன் முடிவடைகிறது. அக்டோபர் 1ஆம் தேதி முதல், பேரங்காடி நடத்துபவர்கள் உட்பட எவரேனும், இத்திட்டத்தின் வைப்புத்தொகை அடையாளமும் பட்டைக் குறிமுறையும் இல்லாத கட்டுப்படுத்தப்பட்ட பானங்களை விநியோகம் செய்தால் அது குற்றமாகக் கருதப்படும்.

சிங்கப்பூரில் உள்ள கோல்ட் ஸ்டோரேஜ் கடைகளில், மீதமுள்ள பொருள்களின் அளவு, பொருள்களைப் பயன்படுத்தும் காலவரையறை மற்றும் விநியோகிப்பாளர்களுடனான வர்த்தக ஏற்பாடுகளைப் பொறுத்து, இருப்புத் தீர்வு விற்பனை தேர்ந்தெடுக்கப்பட்ட முறையில் பயன்படுத்தப்படலாம் என்று கோல்ட் ஸ்டோரேஜ், ஜெயன்ட் நிறுவனங்களின் செய்தித் தொடர்பாளர் கூறினார்.

தற்போது, ​​ஜெயன்ட், கோல்ட் ஸ்டோரேஜ் கடைகள் முழுவதும் சுமார் 5,000 சின்னம் இல்லாத கொள்கலன்கள் உள்ளன என்று அந்தச் செய்தித் தொடர்பாளர் கூறினார்.

“காலக்கெடுவுக்குள் மீதமுள்ள சின்னம் இல்லாத சரக்குகளைப் பொறுப்புடன் விற்பனை செய்வதே எங்கள் முன்னுரிமை,” என்று கூறிய செய்தித் தொடர்பாளர், தகுதியான சரக்குகளை விநியோகிப்பாளர்களுக்குத் திருப்பி அனுப்புதல், அதிக விற்பனைத் தேவை உள்ள கடைகளுக்கு சரக்குகளை மீண்டும் ஒதுக்குதல் போன்ற சில நடவடிக்கைகளைத் தாங்கள் செயல்படுத்தியுள்ளதாகவும் அல்லது பரிசீலித்து வருவதாகவும் மேலும் கூறினார்.

வளங்கள் நீடித்த நிலைத்தன்மைச் சட்டத்தின்கீழ், இந்தக் குற்றத்தைப் புரிந்தவர்கள் என நிரூபிக்கப்படுபவர்களுக்கு $10,000 வரை அபராதமோ அல்லது மூன்று மாதங்கள் வரை சிறைத் தண்டனையோ அல்லது இரண்டும் விதிக்கப்படலாம்.

குறிப்புச் சொற்கள்
மறுசுழற்சிபானம்நீடித்த நிலைத்தன்மை