நாம் தினமும் உண்ணும், பருகும், வாங்கும், பயன்படுத்தும் ஒவ்வொரு பொருளிலும் எவ்வளவு கழிவை உருவாக்குகிறோம் என்று யோசிக்கும் வரைக்கும் சிங்கப்பூரின் கழிவுப் பிரச்சனை நமக்கு தூரமான ஒன்றாகத் தோன்றலாம்.
2025ல் சிங்கப்பூரில் ஒவ்வொருவரும் தினமும் சராசரியாக 0.83 கிலோ கழிவை உருவாக்கினர். அந்த கழிவுகளில் பெரும்பாலானவை இறுதியில் சிங்கப்பூரின் ஒரே குப்பைக் கிடங்கான செமக்காவ் குப்பைக் கிடங்கில் சேர்கின்றன. இதே வேகத்தில் நாம் கழிவுகளை கொட்டிக்கொண்டே போனால், 2035-க்குள் செமக்காவ் தீவு முழுமையாக நிரம்பிவிடும் என்று கணிக்கப்பட்டுள்ளது.
உண்மையில், விரயமாக்குவதற்கும் ஒரு விலை இருக்கிறது. அந்த விலை பணத்தினால் மட்டும் ஈடுசெய்யப்படுவதில்லை. நாம் பயன்படுத்தும் பொருள்களைத் தயாரிக்கவும், எடுத்துச் செல்லவும் பயன்படுத்தப்படும் வளங்களிலும், அவற்றைக் குப்பையாக வீசி எறிந்த பிறகு கையாள மிச்சமிருக்கும் குறைந்த அளவிலான நிலத்திலும் அதற்கான விலையை நாம் தினமும் கொடுத்துக்கொண்டே இருக்கிறோம்.
இதற்கான தீர்வு வெறுமனே கழிவுகளைக் குறைப்பதில் மட்டும் இல்லை. பயனீடு சார்ந்த பழக்கத்தை மாற்றுவதிலும் இருக்கிறது. வளங்களை ஒருமுறை பயன்படுத்தி அப்புறப்படுத்தாமல், மீண்டும் பயன்படுத்துதல், செப்பனிடுதல், மறுபயனீடுதல், மறுசுழற்சி செய்தல் ஆகியவற்றின் வழியே நீண்ட காலம் பயன்பாட்டில் வைத்திருக்கும் மனப்பாங்கை உருவாக்க வேண்டும்.
இதுவே தேசியச் சுற்றுச்சூழல் அமைப்பின் ‘சே எஸ் டு வேஸ்ட் லெஸ்’ இயக்கத்தின் நோக்கமாகும். இந்த இயக்கத்தில் வணிக நிறுவனங்கள், சமூக அமைப்புகள், பள்ளிகள், அடிமட்டக் குழுக்கள் உள்ளிட்ட 180-க்கும் மேற்பட்ட பங்காளிகள் இணைந்துள்ளனர். மக்களின் அன்றாட வாழ்வில் கழிவுகளைக் குறைக்கும் பழக்கங்களை ஊக்குவிக்கும் பல்வேறு முயற்சிகளை அவர்கள் முன்னெடுத்து வருகின்றனர்.
இத்தகைய முயற்சிகள் அனைத்தும் இணைந்து சுழற்சிப் பொருளாதாரத்துக்கு வழிவகுக்கின்றன. அதாவது, தேவையற்ற நுகர்வைக் குறைத்து, பொருட்களை மீண்டும் பயன்படுத்தி, பழுதுபார்த்து, புதிய பயன்பாட்டுக்கு ஏற்றவாறு மாற்றி, சரியான முறையில் மறுசுழற்சி செய்வதன் மூலம் வளங்களை முடிந்தவரை நீண்ட காலம் பயன்பாட்டில் வைத்திருப்பதே இதன் நோக்கமாகும்.
கழிவுகளைக் குறைப்பது என்பது வாழ்க்கை முறையையே முற்றிலும் மாற்றிக்கொள்வதாக அர்த்தமல்ல. அது மிக எளிய ஒரு செயலில் கூட தொடங்கலாம். மீண்டும் பயன்படுத்தும் கோப்பையை எடுத்துச் செல்வது, தண்ணீர் போத்தலை நிரப்பிக்கொள்வது, புதிதாக வாங்குவதற்கு பதில் உடைந்ததை செப்பனிடுவது, தேவைக்கு மட்டும் வாங்குவது, முறையாக மறுசுழற்சி செய்வது, இவை அனைத்துமே அந்தத் தொடக்கமாக அமையலாம்.
நீடித்த நிலைத்தன்மைமிக்க வாழ்விற்கான தேர்வுகள் நாம் பொருள் வாங்க செல்லும் கடைகளில், உணவருந்தும் இடங்களில், பணிபுரியும் அலுவலகங்களில், நேரம் செலவிடும் பகுதிகளிலேயே ஒருங்கிணைக்கப்பட்டு வருகின்றன. இதனால் கழிவுகளைக் குறைப்பது இப்போது எளிதாகவும், எல்லோருக்கும் கட்டுப்படியாகும் வகையிலும், சிக்கனமாகவும் மாறி வருகிறது.
நம் அன்றாட வாழ்வு காலை காப்பிக்காகச் செல்லும் கஃபே, மளிகை மற்றும் அத்தியாவசியப் பொருள்கள் வாங்கும் கடைகள், நாம் வாழும் அக்கம்பக்கம் போன்ற ஒரே சில இடங்களில்தான் சுழல்கிறது. இந்த அன்றாடப் பழக்கங்களோடே, “கழிவுகளைக் குறைப்பது” என்பதும் ஒரு இயல்பான அங்கமாகிவிட்டால் எப்படி இருக்கும்?
உங்கள் அன்றாட காப்பி பயணம்
பலருக்கும், காலை நேர காப்பி வாங்கும் பழக்கம் அன்றாட வாழ்வின் ஒரு அங்கமாகிவிட்டது. ஸ்டார்பக்ஸ் போன்ற இடங்களில், மீண்டும் பயன்படுத்தும் கோப்பை அல்லது குவளையை எடுத்துச் செல்வது போன்ற சிறு தேர்வுகள் கூட அந்த அனுதின சடங்கை கழிவுகள் குறைந்த ஒன்றாக மாற்றிவிடும்.
32 வயதான யக்ஷ் ஸ்ரீ ராவ், ஸ்டார்பக்ஸ் சிங்கப்பூரின் கற்றல், மேம்பாட்டுப் பிரிவின் உதவி மேலாளர். கடந்த 10 ஆண்டுகளாக ஸ்டார்பக்ஸுடன் பயணிக்கும் அவருக்கு, மேற்கூறிய அந்தத் தேர்வு இப்போது இயல்பாகிவிட்டது.
அவர் தம் சொந்தக் கோப்பையை எடுத்துச் செல்வதன் மூலம், ஒவ்வொரு நாளும் குறைந்தது ஒரு காகிதக் கோப்பையைப் பயன்படுத்துவதை தவிர்க்கிறார்.
இது அவர் தாயிடமிருந்து கற்றுக்கொண்ட பழக்கம். வீட்டை விட்டு வெளியே செல்லும் போதெல்லாம் கையில் மறுபயன்பாட்டிற்கான ஒரு போத்தல் அவரது தாயாரிடம் இருக்கும். இப்போது இவருக்கும் இந்த பழக்கம் வந்துவிட்டது. வசதிக்காகத் தொடங்கிய அந்தப் பழக்கம் இன்று கழிவுகளைக் குறைப்பதற்கான அவர் தேர்ந்தெடுத்த பாதையாகிவிட்டது.
அவரது கோப்பை இப்போது அவரது அடையாளமாகவே மாறிவிட்டது. அதில் அவருக்குப் பிடித்த ஒட்டுவில்லைகள் பளிச்சிடுகின்றன.
நீடித்த நிலைத்தன்மைமிக்க வாழ்வை சிரமமாக நினைப்பவர்களுக்கு, அவரது அறிவுரை மிக எளிமையானது: உங்கள் முழு வாழ்க்கையையும் ஒரே நாளில் மாற்ற முயலாதீர்கள். மாறாக ஒரேயொரு பழக்கத்தில் இருந்து தொடங்குங்கள்.
நாளொன்றிற்கு ஒரு காகிதக் கோப்பையைத் தவிர்த்தால் ஒரு வருடத்திற்கு 365 கோப்பைகள் மிச்சமாகும். ஒருவர் புரியும் சிறு செயல் முக்கியமற்றதாக தோன்றலாம். ஆனால் அது தினமும் தொடர்ந்து, பிறகு பலராலும் பின்பற்றப்படும்போது, அது பெரிய மாற்றமாக உருவெடுக்கும்.
ஸ்டார்பக்ஸும் தனது வாடிக்கையாளர்களின் அன்றாட பழக்கத்துடன் மறுபயன்பாட்டை இணைத்துள்ளது. “உங்கள் சொந்த கோப்பையைக் கொண்டு வாருங்கள்” (பிவைஓடி) என்ற திட்டத்தின் மூலம் பானம் அருந்த தங்கள் சொந்த கோப்பையைக் கொண்டு வரும் வாடிக்கையாளர்களுக்கு, 0.50 டாலர் தள்ளுபடி வழங்குகிறது.
இந்த வசதி கடையின் கைபேசி செயலியில் ஆர்டர் செய்யும்போதும் கிடைக்கிறது.
“அன்றாட வழக்கத்தோடு இயல்பாக கலக்கும் நீடித்த நிலைத்தன்மை வாய்ந்த தேர்வுகளே, நெடுநாள் நீடிக்கும் பழக்கங்களாக மாற வாய்ப்பு அதிகம்,” என்கிறார் ஸ்டார்பக்ஸ் சிங்கப்பூரின் வணிகப் பிரிவுத் தலைவர் ரூத் யாம்.
நிறுவனம் மீண்டும் பயன்படுத்தும் பைகளைப் பயன்படுத்தவும், உறிஞ்சு குழாயின் பயன்பாட்டையும் குறைக்கவும் ஊக்குவிக்கிறது. அதற்கு பதிலாக நேரடியாக அருந்தக்கூடிய மூடியுடன் கூடிய கோப்பைகளை அறிமுகப்படுத்தியுள்ளது.
ஸ்டார்பக்ஸ் வெகுமதிகளைப் பெற உறுப்பினர்களுக்கு ஒரு சிறப்பு சலுகை உண்டு. அதாவது நிறுவனத்தின் மறுபயனீட்டுக் கோப்பையை வாங்கும்போது, ஒரு கோப்பை பானம் இலவசமாக வழங்கப்படுகிறது. இது போன்ற சிறிய ஊக்கங்கள், முதன்முதலாக மறுபயனீட்டுக் கோப்பையை உபயோகிக்க முயற்சிக்கும் வாடிக்கையாளர்களுக்கு எளிய உந்துதலாக அமைகின்றன என்கிறார் திருவாட்டி ரூத் யாம். அவ்வப்போது செய்யும் ஒரு தேர்வு, அன்றாடக் காப்பி பழக்கத்தின் ஒரு பகுதியாக மாற இது உதவுகிறது.
ஸ்டார்பக்ஸின் “பயன்படுத்திய காப்பி தூள் சேகரிப்பு” திட்டத்தின் மூலம், வாடிக்கையாளர்கள் கடைகளில் பயன்படுத்திய காப்பித் தூளைக் கேட்டு பெறலாம். அதற்காக அவர்கள் தங்கள் சொந்த கலனை எடுத்து வர வேண்டும். அந்த காப்பித் தூளை வீட்டில் தோட்டம் வளர்க்கவும், உரம் தயாரிக்கவும், துர்நாற்றத்தைப் போக்கவும் மீண்டும் பயன்படுத்தலாம்.
ஸ்டார்பக்ஸின் காப்பி ஈடுபாட்டு குழுவின் ஒரு பகுதியாக, காப்பி குறித்த கருத்தரங்குகளை நடத்தும் திருவாட்டி ராவிற்கு, காப்பியின் பயணம் வெறும் வடிகட்டுதலுடன் முடிந்துவிடுவதில்லை என்பதை வாடிக்கையாளர்களுக்கு காட்டுவதற்கான முக்கியமான வாய்ப்பு இது. பயன்படுத்திய காப்பித் தூளை தனது செடிகளுக்கு தேவையான அளவில் அவர் தனிப்பட்ட முறையில் பயன்படுத்தியுள்ளார். அதே போல காப்பி கொண்டு உடல் தேய்ப்பு கலவை தயாரிப்பது போன்ற வேறு பயன்களையும் அவர் செயல்முறைப்படுத்திக் காட்டுகிறார்.
வழக்கமாக தூக்கி எறியப்படும் ஒன்றை, எப்படி மீண்டும் பயன்படுத்த முடியும் என்பதற்கு இந்த முயற்சி ஒரு எளிய உதாரணம்.
யாம் கூறுவதுபோல கழிவை குறைப்பதும், சுழற்சி பொருளியலை முன்னெடுப்பதும் தனிநபர்கள், நிறுவனங்கள், கொள்கை வகுப்பாளர்கள் அனைவரின் ஒத்துழைப்புடன் மட்டுமே சாத்தியப்படும். நீடித்த நிலைத்தன்மைமிக்க தேர்வுகளை எளிதாகவும், வசதியாகவும்,
பலனளிப்பதாகவும் மாற்றுவதன் மூலம் நிறுவனங்களும் தங்கள் பங்கை செய்ய முடியும்.
கடையில் கழிவை குறைக்க மறுபயனீட்டுக் கோப்பையைக் கொண்டு செல்வது ஒரு வழி. அதே கொள்கை நமது வீட்டு பொருள்கள் வாங்குவதிலும் தொடரலாம்.
போத்தல்களுக்கு மறுவாழ்வு
துணி துவைக்கும் திரவமோ, பாத்திரம் கழுவும் திரவமோ ஒரு போத்தல் காலியானதும் இரண்டு வழிகள் உள்ளன: புதிய போத்தல் வாங்குவது, அல்லது இருப்பதை மீண்டும் பயன்படுத்துவது.
சிங்கப்பூர் முழுவதும் அனுதினம் நாம் செல்லும் இடங்களில் தானியக்க நிரப்பு நிலையங்களை அமைப்பதன் வாயிலாக இந்த இரண்டாவது வழியை எளிதாக்குகிறது உள்ளூர் நிறுவனமான ’ஈக்கோவொர்க்ஸ்’.
ஈக்கோவொர்க்ஸ் நிறுவனரான 42 வயது சீன் லாமை பொறுத்தவரையில், “தானியக்க நிரப்பும் நிலையங்கள் என்ற கருத்து ஒன்றும் புதிதல்ல.”
முன்னோடித் தலைமுறையினர் மண்ணெண்ணெய், சமையல் எண்ணெய், சலவைப் பொருள்கள், சோப்பு போன்றவற்றை
தனித்தனியே வாங்கி, அருகில் உள்ள கடைகளில் நிரப்பி வைப்பார்கள். ஆனால் முன்பே பொதியிடப்பட்ட, ஒருமுறை மட்டும் பயன்படும் நெகிழி மலிவாகவும், வசதியாகவும் மாறியதும் அந்தப் பழக்கம் குறையத் தொடங்கியது.
இப்போது ஈக்கோவொர்க்ஸ் அந்தப் பழக்கத்தை மீண்டும் கொண்டு வர இலக்கு கொண்டுள்ளது. ஆனால் இன்றையப் பயனீட்டாளர்களுக்கு ஏற்ற வடிவத்தில், தானியங்கி நிலையங்கள், மற்றும் தொடுதிரை மூலம் பணம் செலுத்தும் தொழில்நுட்பம் மூலம், புதிய பொருள் வாங்குவது போலவே விரைவாகவும் எளிதாகவும் மாற்றியுள்ளனர்.
ஒருமுறை பயன்படுத்திவிட்டு ஒரு போத்தலைத் தூக்கி எறிவதற்கு பதிலாக, குடியிருப்பாளர்கள் அதே போத்தலை மீண்டும் கொண்டு வந்து மறுமுறை பயன்படுத்தலாம். நல்ல முறையில் தயாரிக்கப்பட்ட ஒரு போத்தலை, மாற்ற வேண்டிய நிலை வருவதற்கு முன்பு பலமுறை கூட அதனை மீண்டும் நிரப்பி பயன்படுத்த இயலும்.
ஈக்கோவொர்க்ஸ் ஒன்றை கண்டறிந்துள்ளது. வெறும் விழிப்புணர்வு செய்திகளை விட, அருகாமையில் இருப்பதும், அதற்கான விலையும்தான் மக்களின் பழக்கத்தில் அதிகமாக தாக்கத்தை ஏற்படுத்துகிறதாம். அவ்வகையில் தானியக்க மறுபயனீட்டு நிலையம் அருகில் இருக்கும்போதும், நிரப்புவதற்கான செலவு புதிய பொருள் வாங்குவதை விட குறைவாக இருக்கும்போதும், மறுபயனீடு என்பது தானாகவே எளிதான தேர்வாக மாறிவிடுகிறது.
தற்போது 16-க்கும் மேற்பட்ட நிலையங்கள் செயல்பாட்டில் உள்ள நிலையில், ‘ஈக்கோவொர்க்ஸ்‘ தரவுகள், சலவைப் பொருள்கள் மற்றும் போத்தல்கள் தயாரிப்பின்போது வெளியாகும் 6,417 கிலோ கரியமில வாயு உமிழ்வை குறைக்க முடிந்ததாகவும், ஒருமுறை பயன்படுத்திவிட்டு தூக்கி எறியும் பிளாஸ்டிக் போத்தல்களில் 1,283 கிலோ வரை தவிர்த்துள்ளதாகவும் குறிப்பிடுகிறது. இது ஏறத்தாழ 256,704 நெகிழிப் பைகள், அல்லது 3,208,800 பிளாஸ்டிக் உறிஞ்சு குழாய்களை சேமித்ததற்கு சமம் என மதிப்பிடுகின்றனர்.
சிங்கப்பூரின் மொத்த கழிவு விகிதத்துடன் ஒப்பிடும்போது இந்த எண்கள் சிறியதாக தோன்றலாம். ஆனால் மேலும் நிலையங்கள் அமைக்கப்படும்போதும், இன்னும் அதிகளவில் பல வீடுகள் பங்கேற்கும்போதும், இந்த தாக்கம் பெரிதாக விரிவடையும்.
ஒவ்வொரு முறை மறுபயனீடு செய்யும்போதும் ஒரு புதிய போத்தல் தயாரிக்கப்படுவதும், அதைத் தருவிப்பதும், இறுதியில் அது குப்பையாக வீசப்படுவதும் தடுக்கப்படுகிறது. அதிகரித்து வரும் பயனீட்டு நிலையங்கள் குடும்பங்களின் வாயிலாக இதுபோன்ற செயல்கள் பல மடங்காகும்போது, பொருள்கள் நீண்ட காலம் பயன்பாட்டில் நீடிப்பதை உறுதி செய்ய முடியும். இதுவே சுழற்சிப் பொருளியலின் நடைமுறை உதாரணம்.
மறுபயனீடு என்பது இல்லங்களின் அன்றாட பழக்கமாக மாறக்கூடும் என்பதை மறுபயன்பாட்டு நிலையங்கள் உணர்த்துகின்றன என்றால், அடுத்த உதாரணம், கழிவைக் குறைத்தல், மீண்டும் பயன்படுத்துதல், மறுசுழற்சி செய்தல் ஆகிய மூன்றையும் ஒரே இடத்தில் ஒன்றிணைத்துக் காட்டுகிறது: அதுதான் நமது அக்கம்பக்க வட்டாரம்.
மூன்று கொள்கைகளையும் (3R) ஆதரிக்கும் அக்கம்பக்கம்
பிரிக்லேண்ட்-தெங்கா பசுமை கிராம நிலையத்தில், நீடித்த நிலைத்தன்மை என்பது ஒரு பொதுவான சமூக இடத்திற்குக் கொண்டுவரப்பட்டுள்ளது. அங்கு குடியிருப்பாளர்கள் உணவுப் பொருள்கள் வீணாவதைக் குறைத்தல், பொருள்களை மறுபயனீடு செய்தல், மற்றும் கழிவுகளை மறுசுழற்சி செய்தல் அல்லது மேம்படுத்தப்பட்ட மறுபயன்பாடு செய்தல் ஆகிய 3R கோட்பாடுகளைச் செயல்பாடுகள் மூலம் நடைமுறைப்படுத்த முடியும்.
நீடித்த நிலைத்தன்மை என்பது பெரியதும் கடினமானதுமான ஒரு கருத்து என்ற உணர்வை மாற்றி, குடியிருப்பாளர்கள் தினமும் செய்யும் சிறிய செயல்களின் மூலம் அதை கடைபிடிக்க கூடிய ஒன்றாக மாற்றுவது எனும் எளிய கனவுடன் இந்த நிலையம் உருவாக்கப்பட்டது.
பிரிக்லேண்ட்-தெங்கா சமூக ஆலோசனைக் குழுத் துணைத் தலைவரும், பசுமை கிராம நிலையத்தின் செய்தி தொடர்பாளருமான ஜீன் கோ, இந்த நிலையம் பல்வேறு திட்டங்களை சௌகரியமான ஒரே இடத்தில் ஒன்றிணைக்கிறது என்றும், இதன் மூலம் குடியிருப்பாளர்கள் இந்த நடைமுறைகளை நேரடியாக அறிந்து, தங்கள் வீடுகளிலும் இதேபோன்ற பழக்கவழக்கங்களை எவ்வாறு கடைப்பிடிப்பது என்பதைக் கற்றுக்கொள்ள முடிகிறது என்றும் தெரிவித்தார்.
இந்த நிலையத்தில், ‘முற்றிலும் குறைபாடற்றதாக இல்லாவிட்டாலும் பயன்படுத்தக்கூடிய’ நிலையில் மளிகைப் பொருள்கள் குடியிருப்பாளர்களுக்கு விநியோகிக்கப்படுகின்றன. அதாவது, பிற பொருள்களைப் போலப் பார்ப்பதற்கு கவரத்தக்க வகையில் இல்லாத அல்லது பயன்படுத்த வேண்டிய கடைசித் தேதியை நெருங்கிக்கொண்டிருக்கும், ஆனால் உண்பதற்கு இன்னமும் உகந்ததாக உள்ள காய்கறிகளும் பழங்களும் தேவைப்படுபவர்களுக்கு வழங்கப்படுகின்றன.
இந்த மளிகைப் பொருள்களைப் பயன்படுத்துவதற்கு முன்பு அவற்றின் தன்மையைச் சரிபார்த்துக் கொள்ளுமாறு குடியிருப்பாளர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
இத்திட்டம் குடியிருப்பாளர்களைப் வெளிப்புறத் தோற்றத்தைத் தாண்டி யோசிக்கவும், ஒரு உணவுப் பொருள் பார்க்க அழகாக இல்லை என்றாலும் அதற்கான மதிப்பு இன்னமும் குறையவில்லை என்பதை உணரவும் ஊக்கப்படுத்துகிறது. மேலும், மக்கள் தங்களுக்குத் தேவையானதை மட்டும் எடுத்துக்கொண்டு, அதன்வழி பெறும் பொருள்ளை முழுமையாகப் பயன்படுத்தவும் இது ஊக்குவிக்கிறது.
இந்த நிலையத்தின் ‘விதையிலிருந்து அறுவடை வரை’ பிரிவு, குடியிருப்பாளர்களைத் தங்களது சொந்த மூலிகைகளையும் காய்கறிகளையும் வளர்க்க ஊக்கப்படுத்துவதன் மூலம் இந்த எண்ணத்தை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்கிறது. சமையலறைக் கழிவுகளில் இருந்தே மீண்டும் உணவை வளர்க்கும் முறையையும் குடியிருப்பாளர்கள் இங்கு கற்றுக்கொள்ளலாம்; உதாரணமாக, எஞ்சிய வெங்காய வேர்களில் இருந்து வெங்காயத் தாளை மீண்டும் வளர்ப்பதைக் குறிப்பிடலாம்.
கோ விளக்கியது போல், குடியிருப்பாளர்களுக்கு எப்போதும் ஒரு முழுப் பொட்டலம் மூலிகையோ அல்லது காய்கறியோ தேவைப்படாமல் இருக்கலாம். தங்களுக்குத் தேவையானதை மட்டுமே சொந்தமாக வளர்த்துப் பயன்படுத்துவது, அவர்கள் உட்கொள்ளும் உணவின் மீதான மதிப்பையும் மரியாதையையும் மேலும் அதிகரிக்கச் செய்கிறது.
குடியிருப்பாளர்கள் தங்கள் இல்லங்களுக்கான அத்தியாவசியப் பொருள்களை மீண்டும் நிரப்பும்போது, தங்களின் சொந்த மறுபயன்பாட்டு போத்தல்கள் மற்றும் கொள்கலன்களைக் கொண்டு வருமாறு ஊக்குவிக்கப்படுகிறார்கள்.
தொடக்கத்தில் சில குடியிருப்பாளர்களுக்கு நினைவூட்டல்கள் தேவைப்படலாம் எனக் கூறிய கோ, ஆனால் அவர்கள் இதன் நோக்கத்தைப் புரிந்து கொண்டு, மீண்டும் நிரப்பி மறுபயனீடு செய்வதன் வசதியை உணர்ந்தப் பிறகு, பலர் தவறாமல் தங்களின் சொந்தக் கொள்கலன்களைக் கொண்டு வரத் தொடங்குகிறார்கள் என்றார்.
இது குடியிருப்பாளர்கள் தங்களின் வாழ்க்கை முறையில் பெரிய மாற்றங்களைச் செய்யத் தேவையில்லாமல், பொதிவுக் கழிவுகளைக் குறைக்கக்கூடிய ஒரு சிறிய மாற்றமாகும்.
இதே சிந்தனை ஆடைகளுக்கும் பொருந்தும். உடனே தூக்கி எறிவதற்குப் பதிலாக, எளிய சீரமைப்பு தேவைப்படும் ஆடைகளைச் சரிசெய்யவும் குடியிருப்பாளர்கள் கொண்டு வரலாம்.
இத்தகைய செயல்பாடுகள், மக்கள் தங்களிடம் ஏற்கனவே உள்ள பொருள்களின் மதிப்பை மீண்டும் கண்டறியவும், தங்களின் ஆடைகளின் பயன்பாட்டுக் காலத்தை அதிகரிக்கவும், ஒருவரிடமிருந்து ஒருவர் நடைமுறைப் பழுதுபார்ப்புத் திறன்களைக் கற்றுக்கொள்ளவும் ஊக்கமளிக்கின்றன.
ஓர் ஆடை அதன் அசல் வடிவிலேயே தொடர்ந்து அணியப்படும் வகையில் பழுதுபார்க்கப்படும்போதோ அல்லது சீரமைக்கப்படும்போதோ, அது ‘மறுபயன்பாடு’ என்பதன் கீழ் வருகிறது. இதன் மூலம், ஒரு புதிய பொருளை வாங்கிப் பயன்படுத்துவதற்குப் பதிலாக, ஏற்கனவே இருக்கும் ஒரு பொருளே தொடர்ந்து பயன்பாட்டில் வைத்திருக்கப்படுகிறது.
இந்த நிலையத்தின் ‘வடிவமைப்பாளர்கள் பகுதியில்’, குடியிருப்பாளர்கள் மீட்கப்பட்ட அல்லது எஞ்சிய பொருள்களைக் கொண்டு செய்முறைத் திட்டங்களின் மூலம் வேலை செய்கிறார்கள்.
மீட்டெடுக்கப்பட்ட மரக் கட்டைகள், பிற பொருள்களைக் கொண்டு செடி வளர்க்கும் தொட்டிகள், எளிய வீட்டு உபயோகப் பொருள்கள் மற்றும் பிற பயனுள்ள பொருள்களாக மாற்ற முடியும்.
சற்று படைப்பாற்றலைச் சேர்த்தால், குப்பை என்று கருதப்படும் ஒரு விஷயம் கூடப் பயனுள்ள வளமாக மாறக்கூடும் என்பதற்கான ஒரு மெய்யான நினைவூட்டலாக இது அமைகிறது.
இந்த நிலையத்தின் மதிப்பு என்பது தனிப்பட்ட செயல்பாடுகளுக்கு அப்பாற்பட்டது. தங்கள் அண்டை வீட்டாரும் நண்பர்களும் இதில் பங்கேற்பதை மக்கள் பார்க்கும்போது, நீடித்த நிலைத்தன்மை என்ற கருத்து அச்சமூட்டுவதாக இல்லாமல், மேலும் மகிழ்ச்சி தருவதாக உணரப்படும்.
குடியிருப்பாளர்கள் கேள்விகளைக் கேட்கலாம், ஒருவரிடமிருந்து ஒருவர் கற்றுக்கொள்ளலாம், மேலும் சிறு செயல்களைப் படிப்படியாகத் தங்கள் அன்றாடப் பழக்கவழக்கங்களாக மாற்றவும் இயலும்.
குடியிருப்பாளர்கள் தாங்கள் தூக்கி எறியும் பொருள்களைப் பற்றிய அதிக விழிப்புணர்வைப் பெற்றுள்ளதாகவும்; அதிகமானோர் தங்களது சொந்தக் கொள்கலன்களைக் கொண்டு வருவதாகவும், குறைபாடற்றதாக இல்லாவிட்டாலும் பயன்படக்கூடிய மளிகைப் பொருள்களை ஏற்றுக்கொள்வதாகவும், பொருள்களைப் பழுதுபார்ப்பதிலோ அல்லது மறுபயனீட்டிற்கு உட்படுத்துவதிலோ ஆர்வம் காட்டுவதாகவும் கோ தெரிவித்தார்.
இந்த மாற்றம் ஒரே இரவில் நடந்துவிடாது. ஆனால் சிறு செயல்களை மீண்டும் மீண்டும் செய்யம்போது, அவை இறுதியில் அன்றாட வாழ்க்கையின் ஒரு பகுதியாக மாறக்கூடும்.
உணவுக் கழிவுகளைக் குறைத்தல், ஆடைகளின் பயன்பாட்டு காலத்தை நீட்டித்தல், மறுபயனீட்டை ஊக்குவித்தல், மீட்கப்பட்ட பொருள்களுக்கு மறுவாழ்வு அளித்தல் எனச் சுழற்சிப் பொருளியல் என்ற எண்ணத்தை இந்த நிலையம் நேரடியாகவே அக்கம்பக்க வட்டாரத்திற்குக் கொண்டுவருகிறது.
மேலும் கோ சுட்டிக்காட்டியது போல, சுழற்சிப் பொருளியல் என்பது வணிகங்கள், அல்லது அரசாங்க அமைப்புகளின் பொறுப்பு மட்டுமல்ல. குடும்பங்களும் தனிநபர்களும் கூடத் தங்களது அன்றாட முடிவுகளின் மூலம் அதற்குப் பங்களிக்க முடியும்.
வீட்டிலிருந்தே தொடங்குதல்
வணிகங்கள் மற்றும் சமூகங்கள் சார்ந்த இந்த எடுத்துக்காட்டுகள், கழிவுகளைக் குறைப்பது என்பது சிக்கலான ஒன்றாக இருக்க வேண்டிய அவசியமில்லை என்பதைக் காட்டுகின்றன. நாம் ஒவ்வொருவரும் நம் அனுதினப் பழக்கவழக்கங்களில் செய்யக்கூடிய எளிய தேர்வுகளும் உள்ளன.
1. உங்களால் சாப்பிட்டு முடிக்கக்கூடியதை மட்டுமே வாங்குங்கள், கேட்டுப் பெறுங்கள்
வாங்குவதற்கு முன் நீங்கள் எவ்வளவு சாப்பிட இயலும் என்பதைப் பற்றி யோசிப்பதன் மூலம் உணவுக் கழிவைக் குறைக்கவும்.
சாத்தியமான இடங்களில் உணவு வேளைகளைத் திட்டமிடுங்கள், உங்களுக்குத் தேவையானதை விட அதிகமாக வாங்குவதைத் தவிர்க்கவும், உணவைச் சரியாகச் சேமிக்கவும்; மேலும் வாங்குவதற்கு முன் எஞ்சிய உணவைப் பயன்படுத்திடுங்கள்.
முற்றிலும் குறைபாடற்றதாக இல்லாத மளிகைப் பொருள்களைப் பொறுத்தவரையில், அவற்றின் வெளிப்புறத் தோற்றத்தைத் தாண்டி யோசியுங்கள், அந்த உணவு இன்னமும் உண்பதற்கு உகந்ததாக உள்ளதா என்று சரிபார்க்கவும், உங்களுக்குத் தேவையானதை மட்டுமே எடுத்துக்கொள்ளுங்கள், மேலும் நீங்கள் பெறுவதை முழுமையைப் பயன்படுத்திடுங்கள்.
2. உங்களுக்கான மறுபயனீட்டுப் பொருள்களைக் கையோடு கொண்டு செல்லுங்கள்
வெளியே செல்லும்போது மீண்டும் பயன்படுத்தக்கூடிய கோப்பை அல்லது குவளை, தண்ணீர்ப் போத்தல், உணவுக் கலன் அல்லது அங்காடிப் பைகளைக் கையோடு எடுத்துச் செல்லுங்கள்.
ஸ்டார்பக்ஸ், ஈகோவொர்க்ஸ், பிரிக்லேண்ட்-தெங்கா எடுத்துக்காட்டுகள் குறிப்பிடுவது போல, ஒரு பொருள் உங்கள் அன்றாடப் பழக்கத்தின் பகுதியாக மாறும்போது அதை மீண்டும் பயன்படுத்துவது எளிதாகிறது.
நம் நோக்கம் மறுபயனீட்டுப் பொருளை வைத்திருப்பது மட்டுமே அல்ல; அதை மீண்டும் மீண்டும் பயன்படுத்துவதும், சாத்தியமான வரை நீண்ட காலம் பயன்பாட்டில் வைத்திருப்பதும்தான்.
3. சரியான முறையில் மறுசுழற்சி செய்யுங்கள்
உணவுப் பொருள்கள் வேண்டாம். திரவங்கள் வேண்டாம். மறுசுழற்சி செய்வதற்கு முன் சரிபார்த்துச் சுத்தம் செய்யுங்கள்.
ஒரு பொருளை மறுசுழற்சித் தொட்டியில் போடுவதற்கு முன், அதில் உள்ள உணவு, திரவங்களை அகற்றுங்கள்; அந்தப் பொருள் மறுசுழற்சி செய்யக்கூடியதா என்பதைச் சரிபார்க்கவும்; தேவையெனில் அதைச் சுத்தம் செய்யவும், தண்ணீரில் அலசவும்.
இது மிகவும் முக்கியமானது; ஏனெனில், கழிவுகளால் ஏற்படும் மாசுபாடு, மறுசுழற்சி செய்யக்கூடிய பொருள்களைச் சரியான முறையில் வகைப்படுத்துவதைத் தடுக்கக்கூடும். உண்மையில், உணவு பானங்களின் மிச்சங்கள், திசுத் தாள்கள், மறுபயன்பாட்டுப் பொருள்கள் மற்றும் பிற குப்பைகளால் ஏற்படும் மாசுபாட்டின் காரணமாக, மறுசுழற்சி தொட்டிகளில் காணப்படும் பொருள்களில் 40 விழுக்காடு மறுசுழற்சி செய்யப்பட முடியாது என்று தேசிய சுற்றுப்புற வாரியம் குறிப்பிடுகிறது.
மறுசுழற்சி என்பது, பயனீட்டைக் குறைத்தல், மற்றும் ஏற்கனவே நம்மிடம் உள்ளவற்றை மீண்டும் பயன்படுத்துதல் ஆகியவற்றோடு உள்ளடக்கிய பரந்த 3R அணுகுமுறையின் ஒரு பகுதியாகும்.
சிறிய முடிவு, பெரிய தாக்கம்
நாம் உபயோகிக்கும் பொருள்களை உற்பத்தி செய்யப் பயன்படுத்தப்படும் வளங்கள் முதல் செமாக்காவ் குப்பைக் கிடங்குத் தீவின் வரம்பிற்குட்பட்ட கொள்ளளவு வரை, நாம் உருவாக்கும் கழிவுகளுக்கு ஒரு பெரிய விலை இருக்கிறது.
ஆனால் இந்தச் சிக்கலுக்குத் தீர்வு காண்பது என்பது, அனைவரும் தங்களது வாழ்க்கை முறையை முழுமையாக மாற்றிக்கொள்ள வேண்டும் என்று கேட்பது அல்ல.
சிங்கப்பூர் முழுவதும், 180-க்கும் மேற்பட்ட பங்காளிகள் ‘குறைப்போம் கழிவை! சேமிப்போம் வளத்தை’ இயக்கத்திற்குப் பங்களித்து வருகின்றனர். வணிக நிறுவனங்கள் நீடித்த நிலைத்தன்மைக்கான தேர்வுகளை எளிதில் அணுகக்கூடியதாக மாற்றுகின்றன; சமூகக் குழுக்கள் மக்கள் பங்கேற்பதற்கான வாய்ப்புகளை உருவாக்குகின்றன; மேலும் குடியிருப்பாளர்கள் தங்களது அனுதினப் பழக்கவழக்கங்களாக மாறக்கூடிய நடைமுறைக்குச் சாத்தியமான பழக்கங்களைக் கடைப்பிடித்து வருகின்றனர்.
எந்தவொரு தனிப்பட்ட வணிகமோ, சமூகமோ அல்லது தனிநபரோ கழிவுப் பிரச்சனைக்குத் தனியாகத் தீர்வு கண்டுவிட முடியாது. பலராலும் மீண்டும் மீண்டும் செய்யப்படும் சிறிய முடிவுகளும், கழிவுகளைக் குறைப்பதை எளிதாக்கும் திட்டங்களின் ஆதரவுமே, இத்தகைய முயற்சிகளின் உண்மையான தாக்கத்தை வடிவமைக்கிறது.
ஒன்றாக இணைந்து, அவை சிங்கப்பூரை ஒரு சுழற்சிப் பொருளியலை நோக்கி நகர்த்த உதவுகின்றன; அங்கு வளங்கள் ஒருமுறை பயன்படுத்தப்பட்டுத் தூக்கி எறியப்படுவதற்குப் பதிலாக, நீண்ட காலம் பயன்பாட்டில் வைக்கப்படுகின்றன.
எனவே, உங்கள் வாழ்க்கை முறையை ஒரே இரவில் மாற்றியமைக்க வேண்டிய அவசியமில்லை. ஒரு எளிய பழக்கத்துடன் தொடங்குங்கள்: நீங்கள் வாங்கியதை முழுமையாக பயன்படுத்துங்கள், மறுப்பயனீட்டிற்கான பொருளைக் கையோடு எடுத்துச் செல்லுங்கள், அல்லது சரியான முறையில் மறுசுழற்சி செய்யுங்கள்.
ஒரு சிறிய பழக்கம் அன்றாட நடைமுறையாக மாறும்போது, மேலும் அதை பலரும் செய்யும்போது, அந்தச் செயல்கள் அனைத்தையும் ஒன்றிணைத்து ஒரு பெரிய மாற்றத்தை உருவாக்க முடியும்.
இயக்கம், கழிவைக் குறைக்கும் பழக்கவழக்கங்கள் பற்றிய கூடுதல் தகவல்களுக்கு, இந்த இணையப் பக்கத்தை பார்வையிடுங்கள்: go.gov.sg/sytwl
SYTWL பங்காளிகள், நிகழ்ச்சிகள் குறித்து மேலும் அறிய: go.gov.sg/sayyesevents
SYTWL பங்காளிகளின் சலுகைகள் குறித்து மேலும் அறிய: go.gov.sg/sayyessavemore


