சிங்கப்பூரில் தனியார் அடுக்குமாடி வீட்டு விலைகள் பத்து மாதங்களில் முதல் முறையாக இவ்வாண்டு அக்டோபரில் குறைந்தது. ஆனால் விற்கப்பட்ட வீடுகளின் எண்ணிக்கை கூடியிருக்கிறது.
எஸ்ஆர்எக்ஸ், 99.கோ தரவுகளின்படி ஒட்டுமொத்த அடுக்குமாடி மறுவிற்பனை வீட்டு விலைகள் மாதாந்தர அடிப்படையில் அக்டோபரில் 0.5 விழுக்காடு குறைந்தது.
மத்திய வட்டாரத்தைத் தவிர எஞ்சிய பகுதியில் உள்ள வீடுகளின் விலை 0.8 விழுக்காடு குறைந்தது. முக்கிய மத்திய வட்டாரத்திலும் அதற்கு வெளியிலும் விலைகள் முறையே 0.5%, 1% கூடியது.
ஆனால் ஆண்டு அடிப்படையில் தீவு முழுவதும் தனியார் அடுக்குமாடி வீடுகளின் விலை முதன்மை மத்திய வட்டாரத்தில் இன்னமும் 3.7 விழுக்காடு அதிகமாக இருந்தது. இது, மத்திய வட்டாரத்துக்கு வெளியே 3.3 விழுக்காடும் மத்திய வட்டாரத்துக்கு வெளியே 3.9 விழுக்காடும் கூடின.
கடைசியாக 2023ஆம் ஆண்டு டிசம்பரில் விலை குறைந்திருந்தது என்று 99.கோ (99.co) சொத்து இணையத் தளத்தின் தலைமை தரவு மற்றும் பகுப்பாய்வு அதிகாரியான லுக்மேன் ஹகிம் கூறினார்.
சிங்கப்பூர் சொத்து முகவர் அமைப்பின் தரவு பகுப்பாய்வு, ஆய்வுப் பிரிவின் தலைவரான மோகன் சந்திரசேகரன், புதிய வீடுகள் விற்பனைக்கு வந்ததால் தனியார் அடுக்குமாடி வீடுகளின் விலை மெதுவடைந்திருக்கலாம் என்றார்.
இவ்வாண்டின் மூன்றாம் காலாண்டில் 3,225 தரை வீடுகள் அல்லாத வீடுகள் தற்காலிகக் குடியிருப்பு அனுமதியைப் பெற்றன.
இது, இவ்வாண்டு காலாண்டில் அதிக வீடுகள் கட்டி முடிக்கப்பட்டுள்ளதைக் காட்டுகிறது என்று அவர் மேலும் தெரிவித்தார்.
தொடர்புடைய செய்திகள்
இதற்கு முன்பு 2023ஆம் ஆண்டின் 4வது காலாண்டில் ஆக அதிகமாக 4,036 தரை வீடுகள் அல்லாத வீடுகள் கட்டி முடிக்கப்பட்டன.
இவ்வாண்டு புதிய கட்டி முடிக்கப்பட்ட வீடுகளின் எண்ணிக்கை அதிகரித்ததால் விலை மட்டுப்படுவதற்கு காரணமாக இருக்கும் என்று திரு சந்திரசேகரன் மேலும் கூறினார்.
இதற்கிடையே அக்டோபரில் விற்கப்பட்ட தனியார் மறுவிற்பனை வீடுகளின் எண்ணிக்கை 8.1 விழுக்காடு கூடியது. அதாவது 1,124 வீடுகள் அக்டோபரில் விற்கப்பட்டன. செப்டம்பரில் இந்த எண்ணிக்கை 1,040ஆக இருந்தது.