தொடக்கநிலை 1 மாணவர் சேர்க்கை: 73 பள்ளிகளில் குலுக்கல்

தொடக்கநிலை 1 மாணவர் சேர்க்கை: 73 பள்ளிகளில் குலுக்கல்

1 mins read
6df46947-5df7-44af-ac43-ca017ded433d
இவ்வாண்டு மொத்தம் 79 பள்ளிகளுக்கு அளவுக்கு அதிகமான விண்ணப்பங்கள் குவிந்துள்ளன. - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்
Google News Preferred Icon

தொடக்கநிலை முதலாம் வகுப்புக்கான மாணவர் சேர்க்கை பதிவுச் செயல்முறையில், ஆக அண்மைய ‘2சி’ கட்டத்திற்கான இடங்களுக்கு மொத்தம் 73 தொடக்கப்பள்ளிகளில் குலுக்கல் முறை நடத்தப்படவுள்ளது.

அந்தப் பள்ளிகளில் 72 பள்ளிகளுக்கு ஒதுக்கப்பட்ட இடங்களைவிட அதிகமான விண்ணப்பங்கள் குவிந்துள்ளன. ஆனால், ஓப்ரா எஸ்டேட் தொடக்கப்பள்ளிக்கு அதிகமான விண்ணப்பங்கள் வரவில்லை என்றாலும், நிரந்தரக் குடியிருப்பாளர்களுக்காக அங்குக் குலுக்கல் முறை நடத்தப்படும்.

இவ்வாண்டு, மொத்தம் 79 பள்ளிகளுக்கு ஒதுக்கப்பட்ட இடங்களைவிட அதிகமான விண்ணப்பங்கள் கிடைத்துள்ளன.

ஒரு குறிப்பிட்ட முன்னுரிமைப் பிரிவு வரை மட்டுமே குழந்தைகளை ஏற்றுக்கொள்ள முடியும் என்பதால், ஏழு பள்ளிகள் குலுக்கல் முறையை நடத்தமாட்டா.

செயிண்ட் மார்கரெட்ஸ் தொடக்கப்பள்ளி, யாங்செங் தொடக்கப்பள்ளி, கனோஸா கத்தோலிக்கத் தொடக்கப்பள்ளி, பொங்கோல் தொடக்கப்பள்ளி, கெமிங் தொடக்கப்பள்ளி, தஞ்சோங் காத்தோங் தொடக்கப்பள்ளி, அலெக்ஸாண்ட்ரா  தொடக்கப்பள்ளி ஆகியவையே அவை.

ஜூலை 30ஆம் தேதி மாலை 4.30 மணிக்கு முடிவடைந்த ‘2சி’ கட்டத்திற்கான ஆக அண்மைய சேர்க்கைப் பதிவுகளின் புள்ளிவிவரங்களைக் கல்வி அமைச்சு புதன்கிழமை (ஆகஸ்ட் 5) தனது இணையத்தளத்தில் வெளியிட்டது. அந்தக் கட்டத்திற்கான முடிவுகள் ஆகஸ்ட் 11ஆம் தேதி வெளியாகும்.

‘2சி’ துணைக் கட்டத்திற்கான காலி இடங்களின் விவரங்களும் அதே நாளில் பிற்பகல் 1 மணிக்கு வெளியிடப்படும்.

குறிப்புச் சொற்கள்