இவ்வாண்டின் தொடக்கநிலை ஒன்றாம் வகுப்புக்கான மாணவர் சேர்க்கைப் பதிவு நடவடிக்கையின் ஆக அண்மைய கட்டமான ‘2பி’யில், 31 தொடக்கப்பள்ளிகள் குலுக்கல் முறையை நடத்தவுள்ளன.
33 பள்ளிகள் அளவுக்கு அதிகமான விண்ணப்பங்களைப் பெற்றுள்ளன. அவற்றில் அந்த 31 பள்ளிகளும் அடங்கும்.
கட்டம் ‘2பி’யில், புக்கிட் தீமாவில் உள்ள நன்யாங் தொடக்கப்பள்ளியில் ஆக அதிக விண்ணப்பங்கள் குவிந்துள்ளன. அங்குள்ள 20 இடங்களுக்கு 52 குழந்தைகள் விண்ணப்பித்துள்ளனர்.
அதனைத் தொடர்ந்து, பீஷானில் உள்ள ஐ தொங் பள்ளியும் புக்கிட் தீமாவில் உள்ள பெய் ஹுவா பிரஸ்பெட்டெரியன் தொடக்கப்பள்ளியும் அடுத்தடுத்த இடங்களில் உள்ளன. அவ்விரு பள்ளிகள் ஒவ்வொன்றிலும் வழங்கப்படும் 20 இடங்களுக்கு முறையே 51, 46 பேர் விண்ணப்பித்துள்ளனர்.
செவ்வாய்க்கிழமை (ஜூலை 21) மாலை 4.30 மணிக்கு நிறைவடைந்த 2பி கட்டத்திற்கான ஆக அண்மைய பதிவு குறித்த புள்ளிவிவரங்களைக் கல்வி அமைச்சு ஜூலை 23ஆம் தேதி தனது இணையத்தளத்தில் வெளியிட்டது.
அக்கட்டத்திற்கான முடிவுகள் ஜூலை 27ஆம் தேதி வெளியாகும்.
81.6 விழுக்காட்டுப் பள்ளிகளில் குலுக்கல் முறை நடத்தப்படாது என்று கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.
கட்டம் 2பி, பள்ளி அல்லது சமூகத்துடன் வலுவான தொடர்புகொண்ட பெற்றோர்க்கானது. அதாவது, பள்ளியில் தொண்டூழியம் புரிவோர், தேவாலயம் அல்லது குலவழிச் சங்கங்களால் அங்கீகரிக்கப்பட்டவர்கள், துடிப்பான சமூகத் தலைவர்களாக அங்கீகரிக்கப்பட்டவர்கள் ஆகியோரின் பிள்ளைகளுக்கு கட்டம் ‘2பி’யில் வாய்ப்பு அளிக்கப்படுகிறது.
2025ஆம் ஆண்டில் நடைபெற்ற கட்டம் ‘2பி’யின்போது, 29 பள்ளிகள் குலுக்கல் முறையை நடத்தின.
2026இல் குலுக்கல் முறையை நடத்தவுள்ள 31 பள்ளிகளில், 22, பள்ளிக்கு 1 கிலோமீட்டர் சுற்றளவுக்குள் வசிக்கும் சிங்கப்பூர் குடிமக்களின் குழந்தைகளுக்காகவே அக்குலுக்கலை நடத்தும்.
ஐந்துப் பள்ளிகள், பள்ளிக்கு 1 கிலோமீட்டர் முதல் 2 கிலோமீட்டர் வரையிலான சுற்றளவுக்குள் வசிக்கும் சிங்கப்பூர் குடிமக்களின் குழந்தைகளுக்காகக் குலுக்கல் முறையை நடத்தும். நான்கு பள்ளிகள் 2 கிலோமீட்டருக்கு அப்பால் வசிப்பவர்களுக்காக அக்குலுக்கலை நடத்தும்.

